நடிகராக இருந்த எம்.ஜி.ஆரை முதல்வராக்கி ’நடிகர்களும் அரசியலுக்கு வரலாம்’ என்ற அங்கீகாரத்தையும் தெம்பையும் இந்தியாவில் முதன் முதலில் கொடுத்த முன்னோடி மாநிலம் தமிழகம்தான். அந்த நம்பிக்கையில்தான், தெலுங்கு நடிகர் என்.டி ராமாராவ் தெலுங்கு தேசம் கட்சியை ஏற்படுத்தி முதல்வரும் ஆனார் என்பது வரலாறு.
அந்த வரிசையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த கமல்ஹாசனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்து, அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளராக தனித்து களம் காணும்போது எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு இருந்த, அதே செல்வாக்கு கமல்ஹாசனுக்கும் இருக்குமா? அதிமுகவின் வாக்குகளைப் பிரிப்பாரா? என்பது குறித்தெல்லாம் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜியிடம் கேட்டோம்,
“திமுகவில் இருந்து புரட்சித் தலைவர் நீக்கப்பட்டு கட்சி ஆரம்பிக்கும்போது தமிழகத்தில் மிகப்பெரிய பிரளயமே நடந்தது. அவரின் படம் ஒட்டாமல் எந்த வாகனத்தையும் பார்க்கமுடியாது. அவரின் பேச்சைக் கேட்க பிரச்சாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே கட்டுச்சோறு கட்டிக்கொண்டு கூட்டம் காத்துக்கொண்டிருந்த வரலாறெல்லாம் உண்டு. அதனால், புரட்சித் தலைவரை வெறும் நடிகராக பார்க்கவேண்டாம். தமிழ் மனங்களில் ஒரு பெரிய சாம்ராஜ்ய சக்ரவர்த்தியாக திகழ்ந்தார். அதேபோலத்தான், அம்மாவும் தனது செயல்பாடுகளால் மக்கள் மனதில் உயர்ந்து நின்றார்.
மக்களுக்காகவே உழைத்த இவர்களோடு கமல்ஹாசனை ஒப்பிடவேக்கூடாது. இவரது கட்சியில் அதிமுகவையும் திமுகவையும் பிடிக்காதவர்கள் வேண்டுமென்றால் இருக்கலாம். ஆனால், கமல்ஹாசனால் முதல்வராக வர முடியாது. மக்கள் நீதி மய்யம் இன்னும் மக்களிடம் ரீச் ஆகவே இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தல் களத்தில் போட்டி என்பது அதிமுகவுக்கும் திமுகவுக்கும்தான். ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் கூட்டணி சேர்ந்து அங்கீகாரம் அடையலாமே தவிர, நான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லி 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு கமல்ஹாசன் விவரமற்றவர் கிடையாது. பலம் என்ன பலவீனம் என்ன என்பது அவருக்கு நன்கு தெரியும். தன்னுடைய கட்சியும் களத்தில் இருக்கிறது என்பதை காட்டிக்கொள்வதற்காக, அவரை முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் நிர்வாகிகள் அங்கீகாரத்தையும் கூட்டணி பேசுவதற்கான அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியினரும் அவர்களின் கட்சித் தலைவர்களுக்கு கொடுக்கக்கூடிய அங்கீகாரம்தான். இது பெரிய அதிசயம் அல்ல.
கமல்ஹாசன் 50 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருக்கிறார். அவரது ரசிகர்கள் அதிமுகவிலும் திமுகவிலும் இருக்கிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து நிற்கும்போது இரண்டு கட்சிகளின் வாக்குகளையும் பிரிப்பார்தான். ஆனால், அதுவே அவரை முதல்வராக்கிவிடாது. அதற்கான, வாய்ப்பும் அவருக்கு கிடையாது. அது, அவருக்கும் தெரியும். எனக்கு தெரிந்து கமல்ஹாசன் ஏதோ ஒரு கட்சியில் கூட்டணி பேசியிருப்பார். அதற்கான அங்கீகாரத்தைதான் தற்போது செயற்குழுவில் எல்லோருடைய சம்மதத்தோடு நானும் இருக்கிறேன் என்று காட்ட தீர்மானம் இயற்ற வைக்கிறார். கட்சியின் கீழ்மட்டத்திலிருக்கும் ரசிகர்களை குஷிப்படுத்தவே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைத்துள்ளார்.
தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு எங்கள் கட்சிக்கே உண்டு. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் முதல்வராகவேதான் மக்கள் பார்ப்பார்கள். அதுவே, மற்றக்கட்சிகளில் அறிவித்தால் வெறும் வேட்பாளராக மட்டுமே பார்ப்பார்கள். ஏனென்றால், ஏழை எளிய மக்களுக்காக திட்டங்களைத் தீட்டி உயர வைத்தக் கட்சி அதிமுகதான். ஏழைகளின் முன்னேற்றத்திற்காகத்தான் புரட்சித் தலைவரும் அம்மாவும் பாடுபட்டார்கள். தற்போது, அண்ணன் முதல்வர் எடப்பாடியாரும், அவர்கள் வழியில் பாடுபட்டு வருகிறார்.
காமராஜர் மறைவுக்குப் பின்னர் அவரது குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு வரவில்லை. அதேபோல, திமுகவில் அண்ணாவுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் யாரும் வரவில்லை. ஆனால், தனக்குப் பின்னால் குடும்பத்தினர் வரவேண்டும் என்று மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பதவிகளை பிரித்துகொடுத்தார் கலைஞர். அவரது மறைவுக்குப் பின்னர் தன் மகனே கட்சித் தலைவராக வரக்கூடிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்தார். இப்போது, மு.க ஸ்டாலினும் உதயநிதியை அரசியலுக்கு பக்குவமாக ஒரு வருடத்திற்குள்ளேயே கொண்டு வந்துவிட்டார். திமுகவின் அதிகாரம் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மருமகன் சபரீசன் கையில் உள்ளது. அங்கு உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது. பிழைப்பவர்களுக்குத்தான் உண்டு. அக்கட்சியிலிருந்து வெளியேறுபவர்களே இதற்கு சாட்சி.
ஆனால், அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. உழைப்பவர்கள்தான் இங்கு உயர்ந்த இடத்திற்கு வரமுடியும். இதனையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால்தான் சொல்கிறேன். திமுகவும் ஆட்சிக்கு வராது. கமல்ஹாசனும் முதல்வர் ஆகமாட்டார்.
புரட்சித் தலைவர் இருக்கும்போதும் சரி மறைவுக்குப் பிறகும் சரி அம்மா பட்டித்தொட்டியெல்லாம் சென்று கட்சியை வளர்த்தார்கள். படிப்படியாக கஷ்டப்பட்டுத்தான் அம்மா முதல்வர் பதவிக்கு வந்தார்கள். ஆனால், கமல்ஹாசன் இப்படியெல்லாமா சென்று மக்களை சந்திக்கிறார்? பிக்பாஸ் நிகழ்ச்சி பாதுகாப்பான பாக்ஸ். அவருக்கு கோடிகளை அள்ளிக்கொடுக்கக்கூடிய பாக்ஸ். அங்கு டிப்டாப்பாக உள்ளே போகிறார். பேசுகிறார். தேவைப்படுபவர்களை நடிக்க வைக்கிறார். தேவைப்படாதவர்களை வெளியேற்றி விடுகிறார். மக்களும் அதேபோல டிப்டாப்பாக பிக்பாஸை பார்ப்பார்களே தவிர, கமல்ஹாசனின் அரசியலுக்கு உதவாது.
மக்களை சந்திக்க அடிக்கடி களத்திற்கு செல்லாமல் பிக்பாஸ் வீட்டில் அல்லவா உட்கார்ந்து கொண்டிருக்கிறார்? அதுவும், கொரோனா காலத்தில்தான் அரசியல்வாதிகளின் உதவிகள் மக்களுக்கு அதிகம் தேவை. இவரோ பிக்பாஸ் ஷூட்டிங்கில் இருக்கிறார். அதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் அறிமுகமில்லாத கட்சிகள் களத்தில் நிற்கவே முடியாது. களத்தில் இரட்டை இலையும் சூரியனும்தான் தெரியும்.
சினிமாவில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிக்கும் கமல்ஹாசன், கட்சி நடத்திக்கொண்டு அரசியலிலும் நடிக்கிறார். வேண்டுமென்றால், அவர் பிக்பாஸுக்கு முதல்வராகலாம். தமிழகத்துக்கு ஆகமுடியாது. தமிழக மக்கள் நமக்காக யார் உழைப்பார்கள் என்பதை பார்த்துதான் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இவர் நடித்துக்கொண்டே அரசியலும் செய்கிறார் என்பதால் நம்பிக்கை இருக்காது” என்கிறார் நம்பிக்கையாக.
- வினி சர்பனா
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?