நீதிமன்றத்தில் கண்கலங்கிய நீதிபதி கிருபாகரன்

Judge-Kirubakaran--who-was-cry-in-the-court

கிராமப்புற மாணவர்களின் வருத்தம், வேதனையை அளவிட முடியாது எனக்கூறிய நீதிபதி கிருபாகரன் நீதிமன்றத்திலேயே கண்கலங்கினார்.


Advertisement

மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும், முத்துக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், "அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ இடங்களை வழங்குவதில் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கடந்த மார்ச் மாதம் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதுடன், அதனடிப்படையில் அறிக்கையும் தாக்கல் செய்தது. அரசு இதற்கு ஒப்புதல் வழங்கி ஆளுநரின் இசைவுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் விரைவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக தெரிகிறது. ஆகவே, மருத்துவ இடங்களில் 7.5% இடங்களை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான உள் ஒதுக்கீட்டு இட ஒதுக்கீடு தொடர்பான முடிவு எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பாக அரசு நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவும், இந்த கல்வி ஆண்டிலேயே, மருத்துவ இடங்களில் 7.5% இடங்களை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.


Advertisement

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர், மருத்துவ இடங்களில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதா இன்னமும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், " இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை அதிகாரிகள் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, விரைவாக முடிவெடுக்க வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் அனைத்து கட்சியினரும் ஜல்லிக்கட்டிற்கு பின்பாக ஒன்றிணைந்து இந்த சட்ட மசோதாவை ஆதரித்திருக்கிறார்கள். உணவில்லாத, சமூக ரீதியாக பின்தங்கிய ஏழைகளே பெரும்பாலும் அரசுப்பள்ளிகளில் பயில்கின்றனர். அவர்களின் வாழ்க்கை தொடர்ந்து இவ்வாறு வாடட்டும் என விட்டுவிடலாமா?" என கேள்வி எழுப்பினர். முறையாக குழு அமைத்து குழுவின் பரிந்துரையில் சட்ட மசோதா நிறைவேற்றியும், தாமதம் ஆகி, ஏழை மாணவர்கள் பாதிக்கப்படலாமா? எனவும் கேள்வி எழுப்பினர்.

அரசு தலைமை வழக்கறிஞர் தரப்பில், சட்டமசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பாக ஆளுநருக்கு உத்தரவிடவோ, காலக்கெடுவை விதிக்கவோ நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்தார்.


Advertisement

அதற்கு நீதிபதிகள்," முடிவெடுக்க 1 மாத காலம் போதாதா? முடிவுகள் வெளியாகி, மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர், சட்ட மசோதா தொடர்பான முடிவு வெளியாகி என்ன பயன்? எடுக்கும் முடிவு என்னவாயினும், முன்பாகவே அதனை தெரிவிக்கலாமே?" என கேள்வி எழுப்பினர்.

அரசுப்பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கவே முன்வரவில்லை என்பதன் மூலம் உளவியல் ரீதியாக அவர்கள் எவ்வாறு பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என்பது தெரியவருகிறது. உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டால் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களில் இடம்பெறுவது அதிகரிக்கும் என ஊடகங்கள் மூலம் தெரியவருகிறது. 4,5 லட்சம் ரூபாய் செலவழித்து, தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற இயலாத நிலையில் உள்ளனர்.

கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிடற்கரியது எனக்கூறி கண் கலங்கிய நீதிபதி கிருபாகரன் அதன் காரணமாகவே ஏழை மாணவர்களின் வாழ்வில் ஏற்றம் பெற ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா? என எண்ணுவதாக தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும் என நீதிமன்றம் நம்புகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ஒற்றை இலக்கங்களில் மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெறுவது அதிக வருத்தமளிக்கிறது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, குழுவின் பரிந்துரையைக் கருத்தில் கொண்டு, முடிவெடுக்கப்படும் என நம்புகிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளிவர உள்ள நிலையில் மேலும் ஒரு ஆண்டிற்கான வாய்ப்பை அரசுப்பள்ளி மாணவர்கள் இழக்க வேண்டாம்" என எண்ணுகிறது என தெரிவித்தனர்.

தொடர்ந்து, நீட் தேர்வு முடிவுகளுக்குப் பின்னர், எப்போது கலந்தாய்வு, மருத்துவக்கல்லூரி இடங்கள் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்பது குறித்து தகவல் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை மதியம் 1 மணிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement