10 நாட்களில் 7 கொலைகள்... கொலைக் களமாக மாறிவரும் மதுரை... அச்சத்தில் மக்கள்!

People-in-Madurai-fear-that-7-murders-in-10-days-will-turn-into-a-killing-field

கொலை நகராக மாறி வரும் மதுரை....மதுரையில் கடந்த 10 நாட்களில் 7 கொலைகள் அரங்கேறியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


Advertisement

மேலூர் அருகே கொங்கம்பட்டி நாகராஜ் (55) என்பவர் கடந்த 5ஆம் தேதி மலம்பட்டி பகுதியில் தலையில் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். விசாரணையில் மது போதையில் பெண்களை அவதூறாக பேசுவது, தகராறில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதால் அங்குள்ளவர்களுடன் ஏற்பட்ட கைகளப்பில் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கீழவளவு காவல்துறை இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. 

image


Advertisement

 அதே நாளில் மேலூர் அருகே முத்துஇருளாண்டி பட்டியில் பிரபு (25) என்பவர் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மனைவியுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் தனது நண்பர்களை அழைத்து சென்று பிரபுக்கு மது வாங்கிக் கொடுத்து தாக்கி கொலை செய்தனர். இந்த வழக்கில் வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலூரை போலவே துவரிமான் பகுதியில் செந்தில் என்பவரின் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக மானாமதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சாக்ரடீஸ் (எ) தேவாவை, கடந்த 9ஆம் தேதி செந்தில் மற்றும் அவரது நண்பர் சையது ஜாபரால் அடித்து கொலை செய்யப்பட்டு வைகை ஆற்றில் உடலை வீசி விட்டு சென்ற சம்பவத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 image


Advertisement

 இதனை தொடர்ந்து மதுரை பாண்டி கோவில் துணை பூசாரி முத்துராஜா கடந்த 10ம் தேதி 5 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். கடந்த 1 வருடத்திற்கு முன்பு கோவிலில் நடந்த காதுகுத்து விழாவில் கரண் என்பவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றுள்ளது. கொலை சம்பவம் தொடர்பாக 5 பேர் ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

இந்த பரபரப்பு அடங்கும் முன்பு 11ம் தேதி நள்ளிரவு குன்றத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணராஜன் மற்றும் ஊராட்சி பணியாளர் முனியசாமி ஆகிய இருவரும் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதில் சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி மற்றும் குன்னத்தூர் ஊராட்சி செயலர் வீரன் என்ற பால்பாண்டி ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 image

இதனிடையே மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சூலப்புரம் கிராமத்தில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் புராட்டாசி திருவிழாவை கொண்டாடுவதில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு வருவது வழக்கமாக இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டும் மோதல் ஏற்பட்டதால் கோவில் விழாவை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக திருவிழா நடைபெற்று வரும் நிலையில் நேற்று நள்ளிரவு அதே கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர் ஊரின் மையப்பகுதியில் மர்ம நபர்களால் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை கண்ட அவரது உறவினர்கள் மற்றொரு தரப்பினர் இவரை படுகொலை செய்ததாகவும் அவர்களை கைது செய்ய வலியுறுத்தி உடலை எடுக்கவிடாமல் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்,

இப்படியாக 10 தினங்களில் நடைபெற்ற 6 சம்பவங்களில், 7 பேர் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement