'மழைநீரை குடித்தோம்; நடுக்கடலில் 55 நாட்கள்' - தமிழக மீனவர்களின் துயர அனுபவம்.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உணவுப் பொருட்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டதால், மழைநீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்ததாக சென்னை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி விசைப் படகில் மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்கள் மாயமானார்கள். இவர்களில் 9 பேர், 55 நாட்களுக்கு பின் மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்டு, விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். ஒரு மீனவர் கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகை பழுது நீக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி மாயமாகிவிட்டதாக சக மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நடுக்கடலில் 55 நாட்கள் போராடி உயிர் பிழைத்தது குறித்து தங்களது துயர அனுபவங்களை ’தி நியூஸ் மினிட்’க்கு அவர்கள் பகிர்ந்துள்ளனர்.


Advertisement

image

மீனவர் தேசபன் கூறுகையில், ‘’கடலுக்குச் சென்ற நான்காவது நாளே படகில் பழுது ஏற்பட்டது. படகின் பேட்டரியில் பிரச்சினை என்பது தெரிந்தது. உதவிக்காக அருகிலுள்ள படகுகளை டிரான்ஸ்மிட்டர் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிக்னல் பிரச்சினையால் அவர்கள் பேசியதை எங்களால் கேட்க முடிந்தது. ஆனால் நாங்கள் பேசியது அவர்களுக்கு கேட்கவில்லை. காற்றின் திசையில் பயணிக்கத் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

முதல் 16 நாட்கள் படகுகள் எங்கேயாவது தென்படுகிறதா என்பதை பார்த்தோம். 17-வது நாள் அப்பக்கம் படகில் வந்த இலங்கை நாட்டு மீனவர்கள் எங்களை கண்டு என்ன பிரச்சினை என்று விசாரித்தனர். அவர்கள் எங்களுக்கு உதவ முயன்றார்கள். ஆனால் எவ்வளவோ முயன்றும் எங்களை மீட்க முடியவில்லை. அவர்களது படகு சிறியதாக இருந்ததால், எங்கள் மிகப்பெரிய விசைப்படகை இழுத்துச் செல்ல முடியவில்லை. மறுநாள் பெரிய படகுடன் வருவதாக கூறிச் சென்றனர். ஆனால் எங்கள் படகு அலையில் நகர்ந்து வேறு பகுதிக்கு வெகுதூரம் சென்று விட்டது.


Advertisement

நாங்கள் இருக்கும் இடத்தை எங்களால் கண்டறிய முடியவில்லை.  ஆனால் வழியில் பல கப்பல்களைக் கண்டோம். கப்பல்கள் தொலைவில் இருந்தன, நாங்கள் அவர்களை நோக்கி கைகளை உயர்த்தி காட்டியும், சத்தமிட்டும் உதவி பெற முயற்சித்தோம். ஆனால் கப்பலில் இருந்தவர்கள் எங்களை பார்த்தார்களா இல்லையா என்பது தெரியவில்லை. அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. நாங்கள் நம்பிக்கையை முற்றிலுமாக இழக்க ஆரம்பித்தோம்.

30 வது நாளின் முடிவில், நிலை மோசமானது. குடிதண்ணீரும் இல்லை. மழை பெய்த போது அந்த தண்ணீரை பிடித்து குடித்தோம். கடவுளை வேண்டினோம். எங்களை காப்பாற்ற ஒரு அதிசயத்தை விரும்பி இரவும் பகலும் அழுதோம். நாங்கள் எடுத்துவந்த உணவுப் பொருட்கள், குடிநீர் எல்லாம் தீர்ந்துவிட்டது.

பசி எங்களைக் கொன்றது. நாங்கள் வேறு எதுவும் செய்ய முடியாததால் எங்கள் குடும்பத்தினரை நினைத்து அழுதோம். எனது மனைவி கர்ப்பிணியாக இருக்கிறார்.

55 நாட்களுக்கு பிறகு மியான்மர் நாட்டு மீனவர்கள் நாங்கள் தத்தளிப்பதை பார்த்து, அவர்கள் நாட்டு கடற்படைக்கு தகவல் கொடுத்தத்தை அடுத்து மீட்கப்பட்டோம். 75 நாட்களுக்குப் பிறகு ஊர் திரும்பியது மகிழ்ச்சி அளித்தாலும், நடுக்கடலில் தத்தளித்த மனநிலையில் இருந்து மீண்டு வர குறைந்தபட்சம் 6 மாதமாகும்’’ என்றார் அவர்.

https://bit.ly/34KlrMX

loading...

Advertisement

Advertisement

Advertisement