வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு சாதகமா? பாதகமா? – அலசல்

Are-agricultural-bills-in-favor-of-farmers-Disadvantage-Analysis
வேளாண் மசோதாக்களால் இன்னும் ஐந்தாண்டுகளில் சிறு, குறு விவசாயிகள் காணாமல் போவார்கள் என்று தெரிவித்துள்ளார் டி.கே.ரங்கராஜன்.
 
அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளுக்கான உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிகம் மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல் சட்ட மசோதா, விவசாய சேவைகள் மசோதா ஆகிய 3 மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிரோமணி அகாலி தளம் கட்சியும் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியைச் சோ்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் சிங் கவுர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 
விவசாய மசோதாக்கள் விவசாயிகளுக்கு சாதகமா? பாதகமா? என்பது குறித்து இருவரிடம் பேசினோம்.
 
image
 
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், ‘’மத்திய பாஜக அரசு விவசாயம் சார்ந்து கொண்டுவரும் எந்தவொரு சட்டமும் இந்திய விவசாயிகளுக்கு பாதுகாப்பானது அல்ல. குறிப்பாக சிறுகுறு விவசாயிகளுக்கு பாதுகாப்பானது கிடையாது.
 
இந்தியாவில் 80% விவசாயிகள் சிறுகுறு விவசாயிகள் தான் உள்ளனர். இந்த சிறுகுறு விவசாயிகளை பாதுகாப்பதற்கான எந்தவொரு திட்டமும் மத்திய அரசிடம் கிடையாது. ஏற்கனவே உற்பத்தியாளர் குழுக்கள் என்ற பெயரில் அரசு தனது பொறுப்பை தட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறது.
 
இந்த 3 விவசாய மசோதாக்களை கொண்டு வருவதற்கு முன்பே முன்மொழிந்து பல நடைமுறைகளை கொள்கை முடிவுகளாக அறிவித்துள்ளது. அதில் முக்கியமானது ஆன்லைன் மூலம் விவசாய பொருட்களை விற்பனை செய்வது. ஆன்லைன் வியாபாரத்திற்கு எதிராக வியாபாரிகளும், விவசாயிகளும் பல ஆண்டுகளாக குரலெழுப்பி வருகிறார்கள். அடுத்து, உணவுப் பொருட்களை இருப்பு வைப்பதற்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பதுக்கல்காரர்களுக்குதான் சாதகமாக இருக்கும். மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயிரிட அனுமதியளித்துள்ளார்கள்.
 
இவற்றை எல்லாம் உள்ளடக்கிய சட்டமாக இந்த விவசாய மசோதாக்களை நிறைவேற்றி இருக்கிறார்கள். இதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பயன்பெறுமே தவிர சிறு, குறு விவசாயிகள் ஒரு பயனையும் அனுபவிக்க முடியாது'' என்கிறார் அவர்.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் கூறுகையில், ''மத்திய பாஜக அரசு விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கும் கொள்கையில் இறங்கியுள்ளது. சந்தைகளில் வெங்காயத்தை பற்றி தெரியாதவர்கள்தான் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளிடம் 5 ரூபாய்க்கு வாங்கி சந்தைகளில் 30 ரூபாய்க்கு இடைத்தரகர்கள் விற்கிறார்கள்.
 
சிறு, குறு விவசாயிகள் எல்லா காலங்களிலும் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். அதை தடுப்பதை விட்டு விவசாயத்தை வெளிநாட்டு வியாபாரிகளுக்கு தரைவார்க்க முயல்கிறார்கள். 
 
இந்த மசோதாக்களை நிறைவேற்றினால் இந்தியாவில் இன்னும் ஐந்தாண்டுகளில் சிறு குறு விவசாயிகள் காணாமல் போய்விடுவார்கள். மேலும் இது கிராமப்புற பொருளாதாரத்தையும் பாதிக்கும்'' என்றார்.
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement