[X] Close >

இங்கு யாருமே மேல்சாதி அல்ல: சூரரைப் போற்று பாடலாசிரியர் ஏகாதசி பேட்டி

lyricist-ekadasi-interview

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தில் வரும் ’மண்ணுருண்ட மேல’ பாடலில் இடம் பெற்ற ’கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா? அந்த மேல்சாதிகாரனுக்கு கொம்பிருந்தா காட்டுங்கையா?’ பாடல் வரிகள் சர்ச்சையாகியுள்ளது. அந்தக் குறிப்பிட்ட வரிகள் அமைதியாக இருக்கும் தமிழகத்தில் சாதி மோதல் ஏற்படுத்துவதுபோல் இருக்கிறது என்றுக்கூறி தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், அப்பாடலை எழுதிய பாடலாசிரியர் ஏகாதசியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.


Advertisement

’மண்ணுருண்ட மேல’  பாடலில் வரும் வரிகள் சாதி மோதலை உருவாக்குவதாக அளித்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறதே?

’மண்ணுருண்ட மேல’ சாதியைத் தூண்டும் விதமான பாடல் அல்ல. சாதியே வேண்டாம் என்று சொல்லும் சமத்துவத்திற்கான பாடல் என்பதை புகார் அளித்தவரும் மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். சாதியே வேண்டாம் என்று சொல்லுகின்ற இந்தப் பாடலுக்கு எதிர்ப்பு வருவதற்கு நான் அச்சப்படவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை அம்பேத்கரையோ, பெரியாரையோ, அண்ணாவையோ ஏற்றுக்கொண்ட பெரும்பாலான மனிதர்கள் இருக்கிறார்கள். இந்தத் தலைவர்கள் சாதியே வேண்டாம் என்றவர்கள். இவர்களையெல்லாம் தலைவர்களாக ஏற்றுக்கொண்ட சமூகமாக இருப்பின் நாம் அனைவரும் சாதிக்கு எதிரானவர்கள்தான். எங்கோ ஒரு இடத்தில் பட்டியலின மக்கள் சாதிக் கொடுமையால் அடிவாங்கும்போதும் ஒடுக்கப்படும்போதும் அவன் மலத்தையே அள்ளி வாயில் திணிக்கும்போதும் மனிதனாக பிறந்த எனக்கு கோபம் வருகிறது. நான் மனிதன் என்ற உத்திரவாதத்தோடு இப்பாடலை எழுதி இருக்கிறேன்.


Advertisement

image

(ஏகாதசி)

      அதேபோல, இந்தப்  படம் ஒட்டுமொத்தமாக சாதி பிரச்னைகளை பேசும் படமும் அல்ல. மக்களுக்கு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வருகின்ற ஒரு நல்ல படம். ஒரு மனிதன் பிறப்பு துவங்கி இறப்பு வரைக்குமான ஒரு வாழ்வியல் தத்துவம்தான் இந்தப் பாடல். இறப்புக்கும் பிறப்புக்குமான 60 ஆண்டுகளுக்கும் மேலான வாழ்க்கையில் நாம் ஏன் அழகான வாழ்க்கையை இழந்துவிட்டு எது எதற்காகவோ அடித்துக்கொள்கிறோம் என்றே எழுதியிருக்கிறேன். சுடுகாட்டில்தான் சமாதானம் இருக்கும். வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் நாள் மரணம்தான். மரணத் தருவாயிலேயே ’என்ன பேசி என்னத்தைக் கண்டோம்?’ என்பார்கள் பலர். அதனால், அந்தச் சூழ்நிலையில் இந்த வரிகள் முக்கியமாகத் தோன்றியது.


Advertisement

மேலும், படத்தில் இறந்தவர் உடலை தூக்கிவரும்போது சாதிய ரீதியான பின்னணி இருக்கிறது. அந்த இடத்தில் இந்த வரிகளும் தேவைப்படுகிறது. அது பட்டியலின முதியவர் இறந்ததாக இருக்கலாம். இப்பாடல் வரிகளுக்காக நிறையப் பேர் வாட்சப் வழியாக வந்து எதிர்க்கிறார்கள். யார் மேல்சாதி? இங்கு யாருமே மேல் சாதி அல்ல. தங்களை மேல்சாதி என்று நினைப்பவர்களையே கீழ்சாதியாக பார்க்கும் ஒரு சமூகம் இருக்கிறது. அதனைப் புரிந்துகொள்ள வேண்டும். மாறாக சதியில் சிக்கிவிடக்கூடாது. மற்றபடி ’மண்ணுருண்ட மேல’ அனைவரும் கொண்டாடக்கூடியப் பாடல்.

முதலில் நீதிமன்றம் இப்பாடலை கேட்கவேண்டும். சாதி ஏற்றத்தாழ்வு, ஆண் பெண் ஏற்றத்தாழ்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வு அனைத்தும் மனிதனின் முன்னேற்றத்திற்கான தடைகளை ஏற்படுத்துபவை. இந்தப் பாட்டை தடை செய்தால், தமிழ் சமூகம் நல்ல விஷயத்தை நல்லக் கருத்தை இழப்பது போன்று ஆகிவிடும். ஆனால், அப்படி தடை செய்தாலும் மடை திறந்ததுபோல் ஓடத்தான் செய்யும். பெரிய வீச்சுதான் கிடைக்கும். நீதித்துறையினர் பல்வேறு வழக்குகளில் நீதியினை நிலைநாட்டியிருக்கிறார்கள். எத்தனை காலமாக பட்டியலின மக்கள் அடிவாங்கினார்கள்? அடிமைகளாக இருந்து இறந்திருக்கிறார்கள்? எத்தனை ஆணவக்கொலைகள் நடந்துள்ளன? என்பதையெல்லாம் நீதித்துறை யோசிக்க வேண்டும். இதுபோன்ற பாடல்களை நீதிமன்றங்கள் எதிர்த்தால் சாதி ஆதரவாளர்களுக்கு துணைப்போவதுபோல் ஆகிவிடும். ’இதுபோன்ற பாடல்கள் நிறைய வரவேண்டும். நல்ல பாடல்கள் மீது அவதூறு பரப்புவது கண்டிக்கத்தக்கது’ என்று நீதித்துறை நீதி வழங்கும் பட்சத்தில்தான் புகார்கள் வராது. சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள்.

image

எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அந்த குறிப்பிட்ட வரிகளை நீக்கும் எண்ணம் உள்ளதா?

நிச்சயம் நீக்கும் எண்ணம் இல்லை. ஆனால், சென்சார் போர்டினர், தயாரிப்பாளர்கள், நீதிமன்றத்தினர் நீக்கித்தான் ஆகவேண்டும் என்று சொன்னால்  இயக்குநர் என்னச் சொல்கிறாரோ, அதனை நிச்சயம் செய்வேன்.  இப்படத்தில் ஆயிரக்கணக்கானப்பேர் வேலைப் பார்த்துள்ளனர். பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்கள். மேலும், கொரோனா சூழலில் சூர்யா சார் பலருக்கு நிதியுதவியும் அளித்திருக்கிறார். அனைவர் நலன் கருதியும் இந்த வரிகளை வேறொரு வரிகளாக மாற்றிக்கொடுக்கச் சொல்வது நடந்தாலும் நடக்கும். ஆனால், பாடல் பெரிய வெற்றியடைந்துவிட்டது, கேட்டப் பாடலை மனதிலிருந்து அழிக்கவும் முடியாது.

image

தொடர்ச்சியாக சமூக பிரச்னைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதால் சூர்யா ஜோதிகா தம்பதிகளுக்கு நெருக்கடியைக் ஏற்படுத்தவே புகார் அளிக்கப்பட்டதாக பார்க்கிறீர்களா?

நீதிமன்றத்தில் எவ்வளவோ வழக்குகள் உள்ளன. இந்தப் பாடலில் வரும் இரண்டு வரிகளுக்காக ’புகாரை கவனத்தில் எடுங்கள்’ என்று சொல்லும் இடம் சூர்யாவையும் அவரது குடும்பத்தையும் இன்னும் போட்டுத்தாக்க இன்னொரு ஆயுதமாகப் இதையும் பயன்படுத்துகிறார்கள்.

சாதியைப் பற்றி உங்களுடைய நிலைப்பாடு என்ன?

’தீண்டாமை ஒரு பாவச்செயல்’ என்று புத்தகத்தின் முதல் பக்கத்தை படித்துவிட்டுத்தான் வருகிறோம். என் மனம் சாதியை துளியும் ஆதரித்ததில்லை. நானும் சாதி இந்துக்கள் என்று சொல்லப்படுகின்ற சமூகத்தைச் சேர்ந்தவன்தான். ஆனால், சாதிக்கு எதிரானவன். எனது சிறு வயதிலிருந்தே பட்டியலின மக்கள் சாதி இந்துக்களால் தாக்கப்பட்டதை கண்கூடாகவே பார்த்து வேதனை அடைந்திருக்கிறேன். ’கூனிக்குறுகி சொல்லுங்க சாமி’ என்று சொல்லும் மனிதர்களை நிறையப் பார்த்துவிட்டேன். இன்னும் தமிழகத்தில் இரட்டைக் குவளை முறை இருக்கிறது. ’பலர் இன்னுமா சாதி இருக்கிறது?’ என்கிறார்கள். செல்போன், கம்ப்யூட்டர் என்று வந்துவிட்டாலும் சாதி இன்னும் ஒழிந்தபாடில்லை. பட்டியலின மக்களுக்கு கல்விக்கொடுத்தால் உரிமையைப் பெறப் போராடுவார்கள். சாதி இந்துக்களுக்கு கல்வி கொடுத்தால் சாதிய பழக்க வழக்கங்களிலிருந்து பகுத்தறிந்து சில விஷயங்களிலிருந்து விடுபடுவார்கள் என்று நினைக்கிறோம். ஆனால், பட்டியலின மக்கள் கல்வி மூலம் முன்னேறி வருகிறார்கள். பல சாதி இந்துக்கள் கல்வியை வைத்து பகுத்தறியாமல் சாதிக்கு ஆதரவானவர்களாக இருப்பது வருத்தமாக உள்ளது.

image

ஆனால், ’மதயானைக் கூட்டம்’ படத்திலும் நீங்கள் எழுதிய பாடல் குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக இருந்ததாக விமர்சனம் எழுந்ததே?

சூரரைப் போற்று ஏகாதசியா? மதயானைக்கூட்டம் எழுதிய ஏகாதசியா என்றால் நான் சூரரைப் போற்று ஏகாதசி என்றுதான் சொல்வேன். சாதியத்திற்கு எதிரான பலப் பாடல்களை துணிச்சலோடு தொடர்ந்து முகநூலிலும் ஆல்பங்களிலும் எழுதிக்கொண்டு வருகிறேன். சூரரைப் போற்று ஒரு படம். ஆனால், அதனையும் தாண்டி சாதிக்கு எதிரான என்னுடைய பார்வை என்பது இன்னும் ஆழமானது. மதயானைக் கூட்டம் என்ற படத்திற்காக நான் செஞ்ச வேலை இது. படத்தின் கதை பழக்கவழக்கங்களுக்காக பாடல் எழுதினேனே தவிர எங்கும் யாரையும் தாழ்த்தி எழுதவில்லை. அதேபோல, இயக்குநர் முத்தையா எழுதச்சொன்னால் எழுதமாட்டேன். அவர் என் நண்பர்தான். ஆனால், அவர் இயக்கும் படங்கள் வேறு. எனக்கு அந்த அளவுத் தெரியும்.

image

’ஒத்த சொல்லால,,, கோணக்கொண்டைக்காரி,  கத்தரி பூவழகி… கம்பத்துப் பொண்ணு’ என  தொடர்ச்சியாக குத்துப் பாடல்களாக எழுதுகிறீர்களே?

ஒத்த சொல்லால பாடலில்  ‘பொண்ணு கருப்பட்டி, கண்ணு தீப்பெட்டி, மென்னு தின்னாலே என்ன ஒருவாட்டி’ என்று குத்துப்பாடல்களிலும் சின்ன சின்ன கவித்துவத்தோடு எழுதுவதால், அந்த முறையிலேயே பாடல்களைக் கேட்கிறார்கள்.

அடுத்து என்னென்ன படங்களில் பணியாற்றுகிறீர்கள்?

அடுத்ததாக சுசீந்திரன் படத்திற்கு பாடல் எழுதுகிறேன். ’வாடிவாசல் படத்திற்காக நிச்சயம் அழைப்பேன்’ என்று வெற்றிமாறன் கூறியிருக்கிறார். அது எனக்கான ஏரியாதான். மேலும், பத்திற்கும் மேற்பட்ட புதிய படங்களுக்கு பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

சூரரைப் போற்று படத்தில் வாய்ப்பு எப்படி வந்தது?

நான் ஜி.வி பிரகாஷின் முதல் படமான ’வெயில்’ படத்திலிருந்து பாடல்கள் எழுதி வருகிறேன். அவருடைய எல்லா படங்களிலும் எழுதிக்கொண்டு வருகிறேன். என் எழுத்துகள் ஜி.வி பிரகாஷிற்கு மிகவும் பிடிக்கும். எந்தப் படத்தில் பணிபுரிந்தாலும் ’இந்த சூழ்நிலையை ஏகாதசி எழுதினால் நல்லா இருக்கும்’ என்று நினைப்பார். சுதா மேடமும் ’உங்களோட ஒத்த சொல்லால பாடலுக்கு நான் ரொம்ப ரசிகை’ சார் என்றார். பாடல் ரெக்கார்ட் செய்தபிறகு எல்லோருக்குமே திருப்தி. பிரமாதமாக இருக்கிறது என்று  பாராட்டினார்கள்.

- வினி சர்பனா

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close