[X] Close >

ஒரு சில நபர்கள் இணைவதை வைத்து ரவுடிகள் கட்சி என்று கூறுவது சரியானதல்ல: வானதி சீனிவாசன்!

vanathi-srinivasan-interview

பாஜகவில் தொடர்ச்சியாக குற்றப்பின்னணி உடையவர்கள் சேர்கிறார்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளதையடுத்து, பாஜகவின் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்,


Advertisement

’ஒரே சமூகத்தைச் சேர்ந்த சி.பி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் பெரிய ஆளுமைகளாக இருக்கும்போது ஏன் முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலையை கொண்டு வரவேண்டும்’ என்று சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறாரே?

எங்கள் கட்சியில் நிறைய துணைத்தலைவர்கள் இருக்கிறார்கள். வந்தவுடன் துணைத்தலைவர் பதவியா? என்பவர்கள் பாஜகவைப் பற்றி புரிந்துகொள்வது நல்லது. சுரேஷ் பிரபு எங்கள் கட்சியில் உறுப்பினராகக்கூட ஆகாதபோது, அமைச்சராக அறிவிக்கப்பட்டார். இதேபோல, ஜெய்சங்கர் பதவி ஏற்கும்வரை யாருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆவார் என்பது தெரியாது. எங்கள் கட்சியில் எங்கு திறமையும் வாய்ப்புகள் இருந்தாலும் பெரிய பொறுப்புகளுக்கு கொண்டுவரத் தயங்கியதே இல்லை. நானும் சி.பி  ராதாகிருஷ்ணன் அவர்களும் மக்கள் அறிந்த ஆளுமைகளாக இருக்கிறோம். அதே சமூகத்தில், ஒரு இளம் தலைவரைக் கொண்டு வந்து அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவதில் என்ன தவறு இருக்கிறது? ஒரு கட்சி அனுபவசாலிகளின் அனுபவத்தோடும் இளைஞர்களின் உத்வேகத்தோடும் பயணிக்க வேண்டும். கிட்டத்தட்ட சி.பி ராதாகிருஷ்ணன் எனக்கு முந்தைய தலைமுறை. அவருக்கு அடுத்து நான். அண்ணாமலை மூன்றாவது தலைமுறையாக வந்திருக்கிறார். எங்களுக்கு, ஏற்கனவே நிறைய பொறுப்புகள் உள்ளன. இளையவர்கள் அதனைப் பகிர்ந்துகொள்ள நாங்கள் வரவேற்கத்தான் செய்கிறோம்.


Advertisement

image

’பாஜகவில் தொடர்ச்சியாக ரவுடிகள் சேர்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டு உள்ளதே? சீமானும் விமர்சித்திருக்கிறாரே?

எங்களுக்கு சீமானின் நல்லவர் கெட்டவர் சான்றிதழ் அவசியமில்லை. இவர் யார் எங்களுக்கு சான்றிதழ் கொடுக்க? கட்சிக்கு வருபவர்கள் ரவுடிகளாக இருந்து ‘நான் திருந்திவிட்டேன். புது வாழ்க்கையை வாழப்போகிறேன்’ என்று சொல்கிறார்கள். மேலும், எங்கள் மாவட்டத்தின் நிர்வாகிகள் பின்புலத்தையெல்லாம் சரிபார்த்துதான் சேர்க்கிறார்கள். ஒருவேளை அவர்கள் கொஞ்சம் கவனக்குறைவாகக்கூட இருந்திருக்கலாம். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒருசில நபர்கள் வருவதை வைத்து உடனே பூதாகரமாக ரவுடிகள் சேரும் கட்சி என்று சொல்வது சரியானதல்ல. ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வரும்போது நாங்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறோம். இதில், விமர்சனம் வைக்கும் எதிர்கட்சிகளில் மட்டும் ரவுடிகள் இல்லாமலா இருக்கிறார்கள்? திமுக எம்.எல்.ஏ, எம்.பிகள் மேல் ஏதாவது ஒரு வகையில்  கிரிமினல் கேஸ் இருக்கிறது. நான், இதனை கண்கூடாகவே பார்த்திருக்கிறேன். பாஜக அலுவலகத்தை மறைந்த எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன், மா.சுப்பிரமணியன் போன்ற கட்சியின் முக்கியமான நபர்கள்தான் முன்னின்று தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு என்ன பெயர்?


Advertisement

image

சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் எப்படி போய்க்கொண்டிருக்கிறது?

எல்லோருக்கும் பொறுப்பகள் கொடுக்கப்பட்டு  களத்தில் தீவிரமாக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். வெகு வேகமான தயாராகிக்கொண்டிருக்கிறோம். எனக்கு  திருப்பூர், ஈரோடு மக்களவைத் தொகுதிகளை கொடுத்து தனிப்பட்ட கவனம் செலுத்தச் சொல்லியுள்ளார்கள். அங்குள்ள சட்டமன்றத் தொகுதிகளில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், நான் ஏற்கனவே நின்ற தொகுதியிலும் கவனம் செலுத்திக்கொண்டு வருகிறேன்.

’தனித்து நின்றாலே 60 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது’ என்று எல். முருகன் கூறியிருக்கிறாரே? 2016 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனித்து நின்றதுபோல இந்தத் தேர்தலிலும் எதிர்பார்க்கலாமா?

இதுபோன்ற விஷயங்களை இப்போதைக்கு பேசுவது சரியல்ல என்று நினைக்கிறேன்.  அதிமுக, திமுகவின் வாக்கு வங்கிகளையும் வெற்றி சதவீதங்களையும் பாஜகவின் வாக்கு சதவீதம் கடந்தமுறை கணிசமாக பாதித்திருக்கிறது. அதை மனதில் வைத்துதான், அவர் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது என்றார். பாஜக மக்கள் விரும்பும் கட்சியாக உள்ளதால்தான் சேர்பவர்களின் எண்ணிக்கையும் கட்சியின் பலமும் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களை மக்கள் சிறிது சிறிதாக உணர ஆரம்பித்துள்ளார்கள். அதற்கான பலன் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் கிடைக்கும்.

image

ஆனால், வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் ஜி.டி.பி மைனஸ் 23.9 க்கு சென்றிருக்கிறதே?   

பொருளாதார பாதிப்பு என்பது நம் நாட்டுக்கு மட்டுமல்ல. உலகம் முழுக்கவே இருக்கிறது. ஆறு மாதம் எந்தவிதமான வருமானமும் அரசுக்கும் இல்லை. மக்களுக்கும் இல்லை. இது ஒரு கடுமையான காலகட்டம்.  ஆனாலும், 20 லட்சம் கோடியில் மக்களுக்கான திட்டங்களையும் பல்வேறு விதமான உதவிகளையும் சிறு நிறுவனங்களுக்கும், ஏழைகளுக்கும் அரசு செய்துகொண்டுதான் வருகிறது. அதனால், பொருளாதார ரீதியாக நாம் இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்யத்தான் பார்க்கவேண்டும்.

அதற்காக, ’கடவுள் மேல் பழியைப் போடுவதா’ என்கிறார்களே?

கொரோனா இயற்கையின் அழிவு. இயற்கையை கடவுள் நம்பிக்கையுடையவர்கள் கடவுள் என்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம். கொரோனா எப்போ முடியும் என்று நம்மால் கணிக்க முடியுமா? கடவுள் மேல் நாங்கள் பழியை போடவில்லை. அதற்காக, நாங்கள் அமைதியாகவும் இல்லை. இயங்கிக்கொண்டேதானே இருக்கிறது அரசு? நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு இயற்கையை கடவுளாக சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான்.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close