[X] Close >

“இணையத்தில் எதை முதலில் தேடுகிறோமோ, அதுவே நமக்கு உலகமாக மாறிவிடுகிறது” செம்மலர் அன்னம்

actress-Semmalar-Annam-write-about-Corona-curfew-life

திரைப்பட இயக்குநராகும் கனவுகளோடு இயங்கும் பலர் தங்கள் கதைகளை புதுப்பிக்கவும், புதிய கதைகளை உருவாக்கவும் அதுகுறித்தான தேடல், படிப்பு என இந்த ஊரடங்கு உதவியிருக்கிறது. 


Advertisement

‘சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்…’ என்ற நிலை மாறி இன்றைய சூப்பர் ஸ்டாராக ‘கொரோனா’ பட்டிதொட்டியெல்லாம் ஆக்கிரமித்திருக்கிறது. சீனாவில் டிசம்பர் தொடங்கிய இந்த தொற்று, உலகம் முழுவதும் இன்று வலம் வந்து கொண்டிருக்கிறது.

உலக வல்லரசாகவும், இவ்வுலகின் ஏதோ ஒரு மூலையில் சிறு துரும்பு அசைந்தால் கூட தன் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தவர்களுக்குச் சவால் விட்டது. குறைவான மனித இழப்பு, அதே வேலையில் பொருளாதாரத்திலும் வீழ்ச்சி இல்லாமல் எந்த நாடு மீண்டெழ போகிறதோ, அந்நாட்டின் தலைவர்தான் உலகின் முதல் இடத்தை பிடிக்கின்றவராக வருவார் என்பதையும் நிதர்சனமாக்கியது.


Advertisement

கொரோனாவைப் பற்றி நமக்குத் தெரியாத சமயத்தில் திடீரென காலர் ட்யூனில் இருமல் சத்தமாக வந்த எச்சரிக்கை பதிவைக் கேட்டு கேலி கிண்டல் செய்து விளையாட்டாக கடந்து போனோம். மேலை நாடுகளில் இந்த தொற்று ஆடிய ருத்திர தாண்டவத்தால் பலி எண்ணிக்கை அதிகமாவதையும் அதன் தீவிரத்தையும் செய்திகளாகப் பார்த்த - கேட்ட பிறகு, குறிப்பாக நம் நாட்டில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபின்புதான் நாம் கொரோனாவை நின்று கவனித்தோம். இல்லை இல்லை… கவனிக்க வைக்கப்பட்டோம்.

ஆரம்பக் கட்டத்தில் குழந்தைகளுக்கு விடப்பட்ட விடுமுறை போலத்தான் இந்த பொது முடக்கத்தைக் கொண்டாடினோம். சிலரோ எப்போதும் இல்லாத அளவிற்கு தங்கள் விரல்களை செல்போனின் தொடு திரையிலேயே வைத்திருந்தனர். சமூக வலைத்தளங்களில் நண்பர்களாலும், நட்சத்திரங்களாலும் பதியப்படும் ஆடல்-பாடல் வீடியோ, விதவிதமான உணவுகளின் புகைப்படங்கள், கொரோனா கலாய்ப்பு மீம்ஸ்… எனப் பொழுதுகள் ஓடின.

அந்த நேரத்தில் தான், சாலையில் சாதாரணமாக நடந்து கொண்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவர் திடீரென லாரியின் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட காணொளி கண்ணில் பட்டது. அடுத்தடுத்த பதிவுகளும் தற்கொலை சம்பந்தமாகவே பார்க்க நேர்ந்தது.


Advertisement

இந்த பொது முடக்கம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பை கொடுத்திருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை. பொருளாதாரம், தொழில், குடும்பம், சுற்று சூழல், மன வலிமையின் அளவு… என்று நபருக்கு நபர் மாறுபடுகிறது. இந்த டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலானோரின் மன வலிமையைத் தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாகச் சமூகவலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

‘நாம் எதை ஈர்க்கிறோமோ அதைத்தான் பெறுவோம்’ என்று ஓர் அறிவியல் தத்துவம் உண்டு. அது சமூக வலைத்தளங்களுக்கு இரட்டிப்பாகவே பொருந்துகிறது. எந்த பதிவுகளை ஆர்வமாகத் தேடிப் பார்க்கிறோமோ அடுத்தடுத்து அது போன்ற சாயல்களில் உள்ள எல்லா தகவல்களையும் அள்ளியெடுத்து நம் கண் முன்னே நிறுத்துகிறது. நாளடைவில் அது சார்ந்த உலகத்தில் மட்டுமே மனதளவில் வாழ நிர்பந்திக்கப் படுகிறோம். அது நேர்மறையாக இருக்கும் பட்சத்தில் பாதிப்பில்லை. அதுவே எதிர்மறையாகப் போனால் மிகப்பெரும் மனக்குழப்பத்திற்கு ஆளாவதோடு, நாம் மட்டுமின்றி நம்மை சுற்றி இருப்பவர்கள் பாதிப்பதற்கும் பொறுப்பாகிறோம்.

அப்படித்தான் எனக்கு ஓர் அனுபவம். இரண்டு மூன்று முறை எதிர்மறையான வீடியோக்களை பார்த்துவிட்டேன். அவ்வளவுதான் காலை போனை அன்லாக் செய்து இரவு லாக் செய்யும் வரை அதுபோன்ற பரிந்துரை வீடியோஸ்தான். மாதக் கணக்கில் என்னை ஆக்கிரமித்த இது போன்ற பதிவுகள், அந்த உலகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று ஆழமாக நம்ப வைத்தது மட்டுமின்றி என் மனதையும் வலுவிழக்க வைத்தது. இது குறித்து நண்பரிடம் மனம் விட்டுப் பேசிய பிறகு உண்மை புலப்பட்டது.

image

இதிலிருந்து விடுபட ஒரு மாதம் இணையத்திற்கு விடுப்பு கொடுத்தேன். வீட்டைவிட்டு வெளியேற முடியாத நிலையில் ஆரம்பத்தில் சிரமப்பட்டேன். ஆனால் அதுவே போகப் போக என்னை நானே அறியும் சூழலை அமைத்துக் கொடுத்தது. என் பலவீனங்களை அறியத் துவங்கினேன். அதை பலமாக்கும் தேடலில் ஈடுபட்டேன். நம் பிரச்சினைகளைக் கண்டறிந்து அதை மனதார ஏற்றுக் கொண்டோம் என்றால் அதற்கான தீர்வுகளை எளிதில் பெறலாம் என்பதை உணர்ந்தேன்.

மீண்டும் இணையத்தினுள் நுழைந்த என் தேடல் முற்றிலும் நேர்மறையாக மாறியது. அது என் உடலையும், மனதையும் ஆரோக்கிய வழிக்கு இட்டுச் சென்றது. அதேபோல் நாம் என்ன தொழில் செய்கிறோமோ அல்லது எதில் அதிக நாட்டம் கொள்கிறோமோ அதைப் பற்றி ஆழமாக அறிந்து கொள்ளும் பொக்கிஷங்களும் இணையத்தில் குவிந்திருக்கிறது. ஆனால் இதுவரை அதை நான் நாடிச் செல்லவில்லை என்பதும் உண்மை. அந்த தேடலில் இறங்கி அதைச் செயல்படுத்த துவங்கும் போது நமக்கான வழிகள் பிறப்பதை யாராலும் தடுக்கமுடியாது என்பதை ஒவ்வொன்றிலும் கண்கூடாகக் கண்டேன். நமக்கான உலகை நாம் தான் உருவாக்க வேண்டியிருக்கிறது என்பதும் புலப்பட்டது.

இந்த கொரோனா காலத்தில் புதிய கலாச்சாரமாக உருமாறி நிற்கும் ’ஒர்க் ஃப்ரம் ஹோம்’ செய்யமுடியாத பல தொழில்களில் நான் சார்ந்திருக்கும் திரைத்துறையும் ஒன்று. இந்த துறையில் கற்றுக்கொள்ள வேண்டியது கடலளவு இருக்கிறது. அவ்வாறு கற்கும் ஒரு சிறு பொறியாக நடிப்பு, திரைக்கதை எழுதுவது, படத்தொகுப்பு, புகைப்படம், ஒப்பனை… என ஒவ்வொரு பிரிவைப் பற்றி ஆழமாகக் கற்றுக்கொள்ள அதற்கே உரித்தான ஆளுமைகளால் இணையம் வழியே வகுப்புகளும், கலந்துரையாடல்களும் ஒருங்கிணைக்கப்பட்டது. அந்த சூழல் சிறு தொய்விலிருந்து விடுவித்து, ஏதோ ஒரு வகையில் எங்கள் தொழிலோடு தொடர்பிலிருந்து கொண்டிருக்கிறோம் என்ற ஆறுதலை தந்ததோடு, துறை ரீதியான கல்வி கற்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது.

திரைப்பட இயக்குநராகும் கனவுகளோடு இயங்கும் பலர் தங்கள் கதைகளை புதுப்பிக்கவும், புதிய கதைகளை உருவாக்கவும் அதுகுறித்தான தேடல், படிப்பு… என இந்த ஊரடங்கு உதவியிருப்பதாக நண்பர்கள் மூலம் அறிந்தேன். பல நல்ல கதைகள் மக்கள் கண்டுகழிக்கக் காத்திருக்கிறது. நட்சத்திரங்களைத் தவிர பெரும்பாலான கலைஞர்கள் தினக் கூலிகளாக உள்ள இந்த திரைத்துறையில், விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்று வந்திருக்கும் செய்தி நம்பிக்கை அளிக்கிறது.

சமூக, பொருளாதார ஏற்ற தாழ்வு, இது போன்ற வைரஸ்கள் வரும் போது அதன் கோர முகம் தெரிகிறது. இந்த அமைப்பு சரியில்லை என்பதை உணர்ந்து சரி செய்யத் தெரிந்து கொள்ள ஒரு பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது. மனிதக் குலத்திற்கே உள்ள பிரச்சினை பணம் இருப்பவன் தப்பிச்சுடுவான், பணம் இல்லாதவன் தப்பிக்க முடியாது என்பதைக் கடந்து, யாருக்கு வந்தாலும் மனிதக் குலத்திற்குத்தான் வருகிறது என்கிற புரிதல் இருந்தால் மட்டும் தான் அடுத்த கட்டத்திற்கு நகர்வோம்.

கட்டுரையாளர்: செம்மலர் அன்னம், திரைப்பட நடிகை 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close