[X] Close >

”மோடியை எதிர்க்கும் சமரசமற்ற உறுதியான தலைவர் ராகுல் காந்திதான்”- பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

congress-leader-peter-alphonse-interview

இடைக்கால தலைவராக ஆறு மாதங்களுக்கு சோனியா காந்தியே தொடர செயற்குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டு இரண்டு நாட்களாக நீடித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.  இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸிடம் பேசினோம்,


Advertisement

பாஜகவில் கட்சித் தலைவர் அறிவிக்கப்படும்போது எந்த சர்ச்சையும் ஏற்படுவதில்லை. ஆனால், காங்கிரஸில் மட்டும் ஏன் இவ்வளவு குழப்பம்?

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உள்ளது. அப்படித்தான் காங்கிரஸ் கட்சிக்கும். பாஜகவில் கருத்து சுதந்திரம் என்பது கிடையவே கிடையாது. யஷ்வந்த் சின்ஹாவில் ஆரம்பித்து அப்படி பேசியவர்களின் நிலைமை என்ன ஆனது என்பதை யோசிக்கவேண்டும். மூத்த தலைவர்கள் அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும்கூட உரிமையோடு பேசுவதற்கான சூழல் இல்லை. எவ்வளவு அவமானப்படுத்தப்பட்டாலும் மூத்த தலைவர்களால் எதிர்த்துப் பேச முடியவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி அப்படியல்ல.  எல்லா தலைவர்களுக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது. ஒவ்வொரு பிரச்சனையிலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பார்வை உண்டு. அதிக சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கட்சி எங்களுக்குக் கொடுத்துள்ளது.


Advertisement

 image

       மற்றபடி மூத்த தலைவர்கள் எழுதிய கடிதம் யார் மூலம் வெளிவந்த தகவல் என்று தெரியவில்லை. ஆனால், இதற்குப் பின்னால் பாஜக இருக்கும் என்று சந்தேகப்படுகிறேன். காங்கிரஸ் கட்சியில் மட்டுமல்ல; இந்த நாட்டில் நடக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் பாஜகதான் காரணம். எதெல்லாம் சரியில்லையோ அதற்கும் பாஜகதான் காரணம். எல்லா கட்சியில் நடக்கும் குழப்பத்திற்கும் பாஜகதான் காரணம். திமுகவில் இருந்து கு.க செல்வத்தை பிரித்ததை மறந்துவிடவேண்டாம்.

          இன்றுள்ள சூழலில் பாஜகவுக்கு மாற்றாக எதிர்கட்சியாக செயல்படுவது என்பது மிகப்பெரிய சவால். இந்தியாவிலுள்ள பல முக்கிய எதிர்கட்சிகளை பாஜக முடக்கியுள்ளது. அதனுடன், சமரசம் செய்துகொண்டால் வழக்குகளை மூடுவார்கள் அல்லது மெதுவாக நடத்துவார்கள். சலுகைகள் உண்டு. ஆனால், பாஜகவை எதிர்த்தால் பெரும் நெருக்கடி கொடுப்பார்கள். அதனால்தான், சில மாநிலக் கட்சிகள் பாஜகவை எதிர்ப்பதை விட்டுவிட்டு சமரசம் செய்துகொள்கிறார்கள். இதற்கு நிதிஷ்குமார், மாயாவதி, ஜெகன்மோகன் ரெட்டியையே உதாரணமாகச் சொல்லலாம்.


Advertisement

மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், நவீன் பட்நாயக் ஆகியோரே பாஜகவை எதிர்க்கும் வேகத்தை குறைத்துக்கொண்டார்கள். ஆனால், சமரசம் ஆகாத கட்சிகள் என்றால் காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட மூன்று கட்சிகள்தான். பாஜகவை எதிர்க்கும் சக்தி  காங்கிரஸ் கட்சிக்கும் ராகுல் காந்திக்கு மட்டுமே உண்டு. ஆனால், அதனை பலவீனப்படுத்த பாஜக சதி செய்கிறது. ராகுல் காந்திதான் நாட்டின் நலன் சார்ந்த பிரச்சனைகளை பல்வேறு சிரமங்களுக்கிடையில் வெளிகொண்டு வந்துள்ளார். ஆனால், அவரைத்தான் பாஜக ஒன்றும் தெரியாதவர் என்று பொய் பரப்புரை செய்கிறது. மற்றபடி எங்கள் கட்சிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை.

image

அப்படியென்றால், ராகுல் காந்தி தலைவராக வருவதற்கு ஏன் தயங்கவேண்டும்?

காங்கிரஸ் கட்சி 65 ஆண்டுகளாக நாட்டை ஆண்டுகொண்டு வருகிறது. இன்றைய சூழலுக்கேற்ப ராகுல் காந்தி தன்னை மாற்றிக்கொள்ளவும் கட்சியை வலுப்படுத்தவும் நினைக்கிறார். கட்சி தலைவர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன.  அனைவரும் அவரை ஏற்றுக்கொள்ளும்போது தலைமைப் பொறுப்பை ஏற்பார். ஏற்கனவே, ஏற்றுக்கொண்டாலும் அவரது யுக்திகளையும் வழிகாட்டுதல்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டுமல்லவா? அதனால், அவர் காத்திருக்கிறார். கால அவகாசம் எடுத்துக்கொள்கிறார். மக்களுக்காக முதலில் மாற்றுச் சித்தாந்தத்தை கொண்டுவர நினைக்கிறார். அந்த சித்தாந்தத்தை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

image

சோனியா, ராகுல், பிரியங்கா இம்மூவரில் யார் தலைவராக வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?

சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தவிர்க்க முடியாத தலைமை. அகில இந்திய அளவில் எதிர்கட்சியே இல்லாமல் இருக்க பாஜக நினைக்கிறது. அப்படியொரு பாசிசக் கட்சியை எதிர்க்க வலுவான தலைமை வேண்டும். அதற்கு, சோனியா காந்தியின் தலைமையே வழிகாட்டும். காங்கிரஸ் கட்சிக்கு எது நல்லது என்று அவரே முடிவு செய்வார். ஆனால், என்னைப் பொறுத்தவரை ராகுல் காந்தி ஒருவரால்தான் பாஜகவையும் மோடியையும் எதிர்கொள்ள முடியும் என்று  நினைக்கிறேன். மோடியை எதிர்க்கும் சமரசமற்ற உறுதியான தலைவர் ராகுல் காந்திதான். பெரிய தலைவர்கள் என்று நினைக்கும் மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், மாயாவதி போன்றோரே மோடியின் தாக்குதலை தாங்க முடியாமல் சமரசம் ஆகிவிட்டார்கள். ராகுல் காந்தி அப்படிப்பட்டவர் அல்ல. அதனால், மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி பின்னால் இருக்கவேண்டும். அவர் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படவேண்டும். முக்கியமான முடிவுகளை எடுத்து இளைஞர்களை ராகுல் காந்தி கட்சிக்குள் கொண்டுவரவேண்டும்.

பா.சிதம்பரம் பிரதமராகவேண்டும் என்ற கோரிக்கைகள் அடிக்கடி  எழுகிறதே?

இன்றைக்கு உள்ள சூழலில் ராகுல்காந்திதான் பெஸ்ட் சாய்ஸ். அதற்காக, மற்றத் தலைவர்களுக்கு தகுதி இல்லை என்று நான் சொல்லவில்லை. எல்லோரையும் ஒருங்கிணைக்கும் தலைமை ராகுல் காந்திக்குதான் உண்டு. காங்கிரஸ் கொள்கைகளுக்கும் தத்துவங்களுக்கும் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முகம் ராகுல் காந்தியாகத்தான் இருக்க முடியும்.

image

குஷ்பு புதிய கல்விக்கொள்கையை ஆதரித்துள்ளாரே?

கட்சியின் கொள்கைதான் எனது நிலைப்பாடும். அதில்,  மாற்றுக்கருத்தில்லை. மற்றபடி குஷ்புவைத்தான் கேட்கவேண்டும்.

- வினி சர்பனா

 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close