[X] Close >

''நாம் படிச்சதைவிட எளிமையாக கற்பிப்பதே முக்கியம்"-தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திலிப்

It-is-more-important-to-teach-simply-than-we-read--National-teacher-award-winner-interview

தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த இரு ஆசிரியர்களில் ஒருவரான திலிப், செஞ்சி அருகிலுள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகிறார். ஏற்கெனவே புதிய தலைமுறை ஆசிரியர் விருது, தொழில்நுட்பம் வழியாக கற்பித்தலுக்கான தேசிய விருது உள்ளிட்ட பல பெருமைக்குரிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். சக ஆசிரியர்கள், நண்பர்களிடம் இருந்து வாழ்த்துகளைப் பெற்றுவரும் மகிழ்வான தருணத்தில் அவரிடம் புதிய தலைமுறை இணையதளத்துக்காகப் பேசினோம்.


Advertisement

"என்னிடம் பேசும் ஆசிரியர்கள் தங்களுக்குக் கிடைத்த விருதுபோல பெருமைப்படுகிறார்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 2000 ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். சேத்பட் அருகிலுள்ள பெரிய நுளம்பை, தென்பாளையம் போன்ற ஆறு இடங்களில் பணியாற்றிவிட்டு, என் சொந்த ஊரான சத்தியமங்கலத்துக்கு வந்தேன். எங்க அப்பாவும் அம்மாவும் பள்ளி ஆசிரியர்கள்தான். அப்பா, தமிழக நல்லாசிரியர் விருது பெற்றவர். 

image


Advertisement

முதலில் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வாசிப்புத் திறனை வளர்ப்பதற்கான பயிற்சியைத் தொடங்கினேன். பொனிடிக்ஸ் முறையில் பாடங்கள் நடத்தினேன். இதற்காக 'எவ்வரிடே இங்கிலிஷ்' என்ற சிறப்புக் கையேட்டைத் தயாரித்தேன். அதைப் பார்த்த மாவட்ட கல்வி அலுவலர், அந்த வழிகாட்டிப் புத்தகத்தை ஒரு லட்சம் பிரதிகள் அச்சிட்டு மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்தோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. மாணவர்களுக்கு ஆங்கிலம் பற்றிய பயமும் நீங்கியது.

ஆங்கிலக் கற்பித்தலைப் பொறுத்தவரையில் முதலில் வாசிப்பு, அடுத்து இலக்கணம், கம்யூனிகேஷன் முக்கியமானது. ஆங்கிலத்தில் பேசுவதற்கு மாணவர்களுக்கு நல்ல சூழல் அமையவேண்டும். கிராமப்புறங்களில் வாய்ப்பு இருப்பதில்லை. வெளிநாடுகளைச் சேர்ந்த 5 ஆங்கில ஆசிரியர்கள் பாடம் நடத்துவதைக் கவனிக்கும் வாய்ப்பை ஸ்கைப் மூலம் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தினேன்.

image


Advertisement

வெளிநாட்டு மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை இவர்கள் கவனித்தார்கள். அதனால் ஆங்கிலத்தில் பேசும் விருப்பம் ஏற்பட்டது. என் வகுப்பு மாணவர்களை 5 பிரிவாக பிரித்தேன். ஒவ்வொரு நாளும் ரைம்ஸ், இலக்கணம் என பிரித்துக்கொடுத்தேன். அடுத்த நாள் வகுப்பில் அவர்களும் கலந்துகொண்டு சொல்லவேண்டும். இப்படி ஆங்கிலத்தில் பேசும் சூழலை மெல்ல அவர்களிடம் உருவாக்கினேன். இப்போது ஓரளவுக்கு பேசுவார்கள். நன்றாகவே ஆங்கிலப் பேச்சைப் புரிந்துகொள்வார்கள்.

image

அடுத்து பத்தாம் வகுப்புத் தேர்வில் எளிய முறையில் தேர்ச்சி பெறுவதற்கான கையேட்டைக் கொண்டுவந்தேன். அது மெல்ல கற்கும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் பத்தாம் வகுப்புத் தேர்ச்சியில் 3 சதவீதம் உயர்வு கிடைத்தது. கடந்த ஆண்டுகளாக எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்புத் தேர்ச்சிவிகிதம் 93, 98, 97 சதவீதமாக இருந்துவருகிறது. இந்த ஆண்டு 100 சதவீதத்தை எட்டியிருக்கிறோம்.

இதுவரை நான் 35 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி வழங்கியதில் பெருமைப்படுகிறேன். எப்போதும் என் பள்ளி மாணவர்களுக்காக மட்டும் எதையும் செய்வதில்லை. சர்வதேச அளவில் மைக்ரோசாப்ட் ஆசிரியர்களுக்கு வழங்கும் தொழில்நுட்பத்துடன் கற்பிக்கும் முறைகள் பற்றிய 100 சான்றிதழ் படிப்புகளை முடித்துள்ளேன். சியாட்டல், பாரிஸ் நகரங்களில் நடந்த சர்வதேச அளவிலான மைக்ரோசாப்ட் கருத்தரங்குகளில் கலந்துகொண்டது மிகப்பெரிய வாசலைத் திறந்துவைத்தது.

image

அந்த கருத்தரங்கத்தில் 108 நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றார்கள். ஆங்கிலத்துடன் என் வேலையை முடித்துக்கொள்வதில்லை. மாணவர்களுக்கு நடனம், ஓவியம் சொல்லித்தருகிறேன். அறிவியல் கண்காட்சிகளுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறேன். எனக்கு மாணவர்களின் வளர்ச்சியில் அதிக ஆர்வம் இருப்பதால் எதுவும் சுமையாகத் தெரிவதில்லை.

image

என் ஆசிரியப் பணி அனுபவத்தில் நான் கற்றுக்கொண்டது இதுதான். நாம் நிறைய படித்திருக்கலாம். ஆனால் மாணவர்களுக்கு எளிமையாக சொல்லிக்கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். நாம் படித்ததற்கும் எதார்த்த நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. என் பள்ளிக்கும் மாணவர்களுக்கும் உதவிகள் பெறுவதற்கு தேசிய விருது பேருதவியாக இருக்கும். வெறும் ஆசிரியர் திலிப் என்பதைவிட , தேசிய நல்லாசிரியர் என்று சொல்லும்போது கூடுதல் மதிப்பும் உதவிகளும் கிடைக்கும்" என்று உற்சாகமாகப் பேசுகிறார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close