பறக்கும் தட்டில் ஏறி விண்வெளிக்குப் போன எம்.ஜி.ஆர். - கலைஅரசி (1963)

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சயின்ஸ் பிக்சன் சினிமாக்கள் என்றாலே ஹாலிவுட் தான் பெஸ்ட் என நினைக்கும் அளவில் தான் இன்றைக்கும் சினிமா ரசிகர்கள் பலரது மனநிலை உள்ளது. அது ஒப்பீட்டளவில் சரிதான் என்றாலும்கூட இந்திய சினிமாவும் தன்னாலான பெரும் முயற்சிகளை அவ்வப் போது சயின்ஸ் பிக்சன் ஜானரில் செய்து கொண்டுதான் இருக்கிறது. உலகின் முதல் சயின்ஸ் பிக்சன் படமாக அறியப்படுவது A trip to the moon என்ற சினிமா. முதல் ஏலியன் படம், முதல் adopted from text படம் என மேலும் பல சிறப்புகள் இந்த சினிமாவிற்கு உண்டு. 1865ஆம் ஆண்டு பிரஞ்ச் எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்னே from the earth to the moon என்ற புத்தகத்தை எழுதினார். இதனை அடிப்படையாகக் கொண்டு 1902ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் A trip to the moon.இத்திரைப்படத்தை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உலகசினிமா பிதாமகன் ஜார்ஜ் மெல்லிஸ் தயாரித்து இயக்கினார். அதன் தொடர்ச்சியாக அறிவியல் புனைவுப் படங்கள் உலகின் எட்டுத் திசைகளிலும் வீரியமாக முளைக்கத் துவங்கின.


Advertisement

image

சரி இப்போது நம்மூருக்கு வருவோம். எம்.ஜி.ஆர் என்றாலே அவர் சிங்கம்,புலியோடு சண்டையிடுவார்., குதிரையில் ஏறி இளவரசியை மீட்க புறப்படுவார்., உழைக்கும் மக்களுடன் உணர்ச்சி கீதம் பாடுவார், மருவைத்து டபுள் ஆக்சன் கலாட்டா செய்வார் என்றே நம் மனதில் அவர் குறித்த சினிமா பிம்பத்தை பதிவு செய்து வைத்திருக்கிறோம்...! ஆனால் எம்.ஜி.ஆர் அவ்வப்போது சில மாற்று சினிமா முயற்சிகளுக்கும் தோள் கொடுத்திருக்கிறார். அப்படியொரு சினிமா தான் கலைஅரசி. 1963ல் வெளியான இத்திரைப்படமே தமிழில் வெளியான முதல் விண்வெளி திரைப்படமாக அறியப்படுகிறது. இந்தியாவின் முதல் விண்வெளித் திரைப்படம் இது என்ற உரையாடலும் உண்டு.


Advertisement

image

எம்.ஜி.ஆர், பானுமதி, நம்பியார் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படத்தை இப்போது பார்த்தாலும் ஆச்சர்யமாக இருக்கும். கதைப்படி எம்.ஜிஆர் மோகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பானுமதி வாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். விவசாயத்தை முக்கியத் தொழிலாக கொண்ட சின்ன கிராமத்தில் எம்.ஜி.ஆர் வாழ்கிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த கொஞ்சம் பணக்கார வீட்டுப் பெண் வாணி. இப்படியாக கதையின் களம் நமக்கு அறிமுகமாகிறது. இவ்விருவருக்குள்ளும் காதல் மலரும் காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கும் போதே, விண்வெளியில் இருந்து ஒரு பறக்கும் தட்டு பூமியை நோக்கி வருவதாகவும் காட்டப்படுகிறது. விண்வெளியில் இருந்து வரும் பறக்கும் தட்டில் நம்பியாரும் அவரது உதவியாளரும் பூமிக்கு வந்திறங்குகிறார்கள். அவர்கள் வசிக்கும் வேற்றுகிரகமானது தொழில்நுட்பரீதியாக பெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கும். ஆனால் அவர்களின் உலகத்தில் கலையின் வளர்ச்சி என்பது இல்லவே இல்லை. எனவே நல்ல கலைஞானம் கொண்ட ஒருவரை பூமியில் இருந்து கடத்திச் சென்று தங்கள் கிரகத்தில் ஆடல் பாடல் உள்ளிட்ட கலைகளைப் பரப்பவே நம்பியார் தன் உதவியாளருடன் பறக்கும் தட்டில் பூமிக்கு வந்திருப்பார். அதன் படி பூலோகத்தில் நல்ல கலைஞானம் கொண்ட பெண்ணாக இருக்கும் பானுமதியை அவர்கள் தங்கள் கிரகத்திற்கு கடத்திச் செல்கின்றனர். பிறகு இதனை அறிந்த எம்.ஜி.ஆர் எப்படி விண்ணுலகம் சென்று தன் காதலியை மீட்டு வந்தார் என்பதுதான் மீதிகதை.

image


Advertisement

இப்படத்தின் இயக்குநர் ஏ.காசிலிங்கம் தன்கற்பனையால் மட்டுமே இப்படியொரு கதையினை உருவாக்கிவிடவில்லை. அவர் விண்வெளி குறித்த நல்ல பல நூல்களை படித்த பிறகே இப்படத்தை இயக்கியிருக்கிறார் என்பதை படத்தின் சில காட்சிகளை வைத்து புரிந்து கொள்ளலாம். விண்ணுலகம் செல்லும் பூலோக எம்.ஜி.ஆர் அங்கு தன்னைப் போலவே இருக்கும் ஒரு க்ளோன் எம்.ஜிஆரைப் பார்க்கிறார். தியரியாக வேற்று கிரகத்திலும் நம்மைப் போல் அச்சுஅசலாக மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற கற்பனாவாதம் உண்டில்லையா.? இந்த கற்பனாவாதத்தை இயக்குநர் ஏ.காசிலிங்கம் இப்படி சில காட்சிகளில் நிறுவ முயன்றிருப்பார். பூலோக எம்.ஜி.ஆர் விண்வெளியில் மாறுபட்ட ஈர்ப்புவிசை காரணமாக தள்ளாடி நடப்பார். அந்த ஸ்லோமோஷன் காட்சி அத்தனை அட்டகாசமாக படம்பிடிக்கப்பட்டிருக்கும். அதன் பின்னனி இசை இப்போதைய ஹாலிவுட் பின்னனி இசைக்கு சற்றும் குறைவில்லாத சிலிர்ப்புணர்வை தருகிறது. அப்படியொரு இசையினைக் கொடுத்தவர் வேறயாருமில்லை அன்றையை இசைச் சக்கரவர்த்தி கே.வி.மஹாதேவன்தான். ஆனால் அந்த ஸ்லோ மோஷன் காட்சியின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். சரிபோகட்டும்., 1963’ல் வெளியான ஒரு திரைப்படத்தின் காட்சியை இப்போது ட்ரிம் செய்யச் சொல்வதில் நியாயம் இல்லை.

image

விண்வெளியில் மாறுபட்ட புவிஈர்ப்பு விசை இருக்கும் என்பது நாம் அறிந்த அறிவியல். அதில் இயக்குநர் ஏ.காசிலிங்கம் தன் பங்கு கற்பனையாக ஒரு பாதணியைக் கொடுத்து இதனை அணிந்து கொண்டால் இயல்பாக நடக்கலாம் என்கிறார். இப்படியாக அறிவியலும், இரசிக்கத் தக்க புனைவும் இணைந்து இப்படத்தை சுவாரஸ்யப்படுத்தி இருக்கும். என்னதான் சயின்ஸ் பிக்சன், வேற்றுகிரகவாசி திரைப்படமாக இருப்பினும். நம்மூர் கமர்ஸியல் ரசிகர்களை குஷிப்படுத்த எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சண்டை போட்டே தீர வேண்டும். பறக்கும் தட்டில் தன் காதலியை மீட்டுக் கொண்டு வரும் போது நம்பியாருடன் எம்.ஜி.ஆர் ஆக்ரோஷமாக சண்டையிட்டு தன் கமர்ஸியல் கடமையினையும் இப்படத்தில் ஆற்றத் தவறவில்லை.

கலையரசி திரைப்படத்தில் காட்டப்படும் பறக்கும் தட்டின் வடிவமைப்பும் அதன் கலை வேலைப்பாடும் இப்போது பார்க்க சுமாராக தோன்றினாலும், முழுக்க முழுக்க ஒரு தியரியை வைத்துக் கொண்டு ஒரு இயந்திரத்தை, சாதனத்தை உருவாக்குவதென்பது எளிய காரியமில்லை.

image

நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் ஆகிய இருவரும்தான் நிலவில் கால்பதித்த முதல் மனிதர்கள். 1969’ல் அது நிகழ்ந்தது. அவர்களுக்கு முன்பாக யூரி ககாரின் என்ற விண்வெளி வீரர் ‘வோஸ்டாக் 1’ விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்குச் சென்றார். ஆனால் அவர் வேற்றுகிரகம் எதிலும் கால்பதிக்கவில்லை. 108 நிமிடம் விண்வெளியில் அதாவது பூமிக்கு வெளியே வெகுதொலைவில் ஒரு நீள்வட்டப் பாதையில் புவியை ஒரு முறை சுற்றிவந்திருக்கிறார். சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த யூரி ககாரின் விண்வெளியில் இருந்தபடி, “நான் புவியைக் காண்கிறேன். அது மிகவும் அழகாக இருக்கிறது” என்று கூறியதுதான் விண்வெளியில் உச்சரிக்கப்பட்ட முதல் வாக்கியம் என்கிறார்கள்.

இப்படியாக விண்வெளி எப்போதுமே சாமானிய மனிதர்கள் முதல் ஆரய்ச்சியாளர்கள் வரை எல்லோருக்கும் ஒரு ஆச்சர்யமாகவே இருந்து வருகிறது. 1969’ல் நிலவில் மனிதன் கால்பதித்தாலும் அதற்கு முன்பாகவே கலைப் படைப்பாளிகள் அண்ட வெளியினையே தன் கற்பனையால் வலம் வந்துவிட்டனர். முன் குறிப்பிட்டது போல ஜூல்ஸ் வெர்னே தன்னுடைய from the earth to the moon கதை மூலமாக நிலவில் கால் பதித்தார்., அதன் தொடர்ச்சியாக ஜார்ஜ் மெல்லீஸ் தன்னுடைய A trip to the moon மூலம் வேற்றுகிரகத்திற்கு நம்மை அழைத்துச் சென்றார்., பிறகு உலகம் முழுக்க பல சினிமா படைப்புகள் இதே ஜானரில் உருவாகின.

image

தமிழில் ஜெயம் ரவி நடித்த டிக்டிக்டிக் தான் தமிழின் முதல் விண்வெளித் திரைப்படம் என பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது தவறு. ஏ.காசிலிங்கம் இயக்கி எம்.ஜி.ஆர், நம்பியார் மற்றும் பானுமதி நடித்த கலையரசிதான் தமிழில் வெளியான முதல் விண்வெளித்திரைப்படம். பலரும் பார்க்காமல் தவறவிட்ட க்ளாஸிக் திரைப்படமும் கூட., படம் வெளியான காலகட்டத்தில் கலையரசியை யாரும் பெரிதாக கொண்டாடவில்லை. விண்வெளிப்படம் என்கிற சுவாரஸ்யம் மட்டுமே இப்படத்தை தாங்கி நகர்த்தி கொண்டு போய்விடவில்லை. இப்படத்தின் சுமாரான கதை சொல்லல் பாணியும், மோசமான திரைக்கதை அமைப்பும் இந்த அறிய முயற்சி தோல்வியில் முடிந்ததற்கான காரணிகள் என்று சொல்லலாம். மேலும் இப்படத்தின் விண்வெளி எம்.ஜி.ஆர் கோமாளி வேடத்தில் வருவார் அதனை ரசிகர்கள் ஏற்கத் தயாராக இல்லை என்றொரு காரணமும் சொல்லப்பட்டது. இப்படி கலையரசியின் தோல்விக்குக் காரணமாக பல விசயங்களைச் சொன்னாலும்கூட, பருவத்தே தவறவிட்டு காலம் கடந்து தமிழன் கொண்டாடிய பல படைப்புகள் இங்குண்டு அதில் ஒன்றாக கலையரசி இருக்கிறாள்.

loading...

Advertisement

Advertisement

Advertisement