கொரோனா நோயாளிகள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தபால் வாக்கு முறையில் வாக்களிக்கலாம்.
வரும் நவம்பர் மாதத்தில் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையே பாதுகாப்பான முறையில் தோ்தலை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அவற்றின் முக்கிய விவரங்களை காணலாம்:
* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாக கொரோனா பரவக்கூடாது என்பதற்காக, வாக்குச்சாவடியில் ஒவ்வொரு வாக்காளருக்கும் கையுறை வழங்கப்படும். மாஸ்க் அணிந்து வராத வாக்காளா்களுக்கு மாஸ்க் வழங்கப்படும்.
* அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கிருமிநாசினி, வெப்பமானி ஆகியவை இருப்பதும், வாக்காளர்களுக்கு இடையே போதிய இடைவெளி கடைபிடிக்கப்படுவதும் உறுதி செய்யப்படும்.
* வாக்குச்சாவடிக்குள் நுழைந்தவுடன் வாக்காளர்களின் உடல் வெப்பநிலை சோதிக்கப்படும். இதில், காய்ச்சல் கண்டறியப்படும் வாக்காளர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் அவர்கள் வாக்களிக்க வசதி ஏற்படுத்தி தரப்படும்.
* வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பின்போது, வேட்பாளருடன் சேர்த்து ஐந்து பேர் மட்டுமே ஒரு குழுவாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
* வேட்புமனுவை தாக்கல் செய்யும்போது, வேட்பாளருடன் இருவா் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
* ஊர்வலத்தின்போது ஒரு முறை ஐந்து வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும். இதுவரை 10 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.
* ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சமாக 1,000 வாக்காளா்கள் அனுமதிக்கப்படுவா். இதுவரை 1,500 வாக்காளா்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனா்.
* வாக்கு எண்ணிக்கை அறையில் அதிகபட்சமாக 7 மேஜைகள் மட்டுமே போட வேண்டும்.
* கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோா் அல்லது கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீட்டுத் தனிமையில் இருப்பவா்கள் தபால் வாக்கு முறையில் வாக்களிக்கலாம்.
* கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டே, தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்படும். இதனை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளே முடிவு செய்வார்கள்
என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.