திமுக எம்.பி,எம்எல்ஏக்களை ஆய்வுக்கூட்டங்களில் தவிர்ப்பது ஆரோக்கியமான ஆட்சியல்ல:ஸ்டாலின்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை ஆய்வுக்கூட்டங்களுக்கு அழைப்பதை அமைச்சர்களும், முதலமைச்சருமே கூட தவிர்ப்பது, ஆரோக்கியமான ஆட்சி முறைக்கு அழகல்ல. மக்களின் பாதிப்பை மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்காமல், யாரிடம் முதலமைச்சர் கேட்கப் போகிறார்?  என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்

image


Advertisement

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு விழாக்களிலும், ஆய்வுக்கூட்டங்களிலும், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை வேண்டுமென்றே தொடர்ந்து புறக்கணித்துவரும் அ.தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்றைய தினம் தர்மபுரியில் நடைபெற்ற கொரோனா குறித்த ஆய்வுக் கூட்டத்தில், கழகத்தின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் டாக்டர் திரு. செந்தில்குமார் அவர்களை அனுமதிக்க மறுத்ததோடு மட்டுமின்றி, “நான் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் எம்.பி.,யை எப்படி அனுமதிக்க முடியும்” என்று மாண்புமிகு முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் கேள்வி எழுப்பியிருப்பது, ஜனநாயக விரோதம் மட்டுமல்லாமல்; பண்பாடற்ற செயல், அநாகரிகத்தின் உச்சம் என்றுதான் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இது அடிப்படை உரிமை; அதை ஏதோ இவர்களுடைய சொந்த வீட்டில் சொந்தச் செலவில் தனிப்பட்ட முறையில் நடத்தும் நிகழ்ச்சியாகக் கற்பனை செய்து கொண்டு மறுப்பது, ஜனநாயகத்தின் அடிப்படை அம்சத்தைப் புறக்கணிக்கும் கீழ்மை என்பதை முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.மக்களின் பாதிப்பை, மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்காமல், பிறகு யாரிடம் முதலமைச்சர் கேட்க மாவட்டங்களுக்குப் போகிறார்?


Advertisement

கொடிய கொரோனா நோய் குறித்து, களத்தில் மக்களோடு, அவர்தம் எதிர்பார்ப்புகளோடு - உணர்வுகளோடு ஒன்றி நிற்கும் அவர்களிடம் தகவல்களை - பிரச்சினைகளைத் தெரிந்து கொள்வதற்கு முதலமைச்சருக்கு ஏன் இந்தக் கூச்சம்? என்னதான் வெட்கம்? தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை கூட்டத்தில் பங்கேற்க விட்டால் 'கொரோனா'-வில் அடித்த கொள்ளைகளும்- நோய் மற்றும் மரணக் கணக்கு மறைப்பு - குறைப்பு நாடகங்களும் பொது வெளிக்கு வந்து விடும் என்று நடுக்கமா? இல்லை; ஆய்வுக் கூட்டங்கள் என்ற முறையில், மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்து, பொதுத் தேர்தல் வேலைகளையும் சேர்த்துக் கவனித்து, நான் மற்றவர்களை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு, என்னை மட்டும் முன்னிறுத்திக் கொள்ள அரசுப் பணத்தில் அரசியல் கூட்டங்களை நடத்துகிறேன்; அதில் எப்படி உங்களை அழைக்க முடியும் என்கிறாரா முதலமைச்சர்?

தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை அரசு விழாக்களுக்கு அழைப்பதை அமைச்சர்களும், முதலமைச்சருமே கூட தவிர்ப்பது, ஆரோக்கியமான ஆட்சி முறைக்கு அழகல்ல; அருவருப்பானதாகும். அமைச்சர்களின் ஊழல் முறைகேடுகளை எங்கே மேடையில் பேசி விடப் போகிறார்களோ என்ற அச்சத்தின் காரணமாகவே இப்படி கழக எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை அரசு விழாக்களில் கலந்து கொள்ள விடாமல் தடுக்கிறது அ.தி.மு.க. அரசு. ஏற்கனவே கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆஸ்டின் தன்னை அரசு விழாவிற்கு அழைக்கவில்லை என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் மீது உரிமை மீறல் பிரச்சினை கொடுத்த போது, மாண்புமிகு தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அவர்கள், “அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அரசு விழாக்களுக்குக் கண்டிப்பாக அழைக்க வேண்டும். அவர்களின் பெயரை அரசு விழாக்களின் அழைப்பிதழில் பிரசுரிக்க வேண்டும்” என்று அ.தி.மு.க. அரசுக்கு அறிவுரை செய்தார். ஆனால் தமிழகச் சட்டமன்றப் பேரவைத் தலைவரின் அறிவுரையையே அ.தி.மு.க. அமைச்சர்களும் கேட்பதில்லை; முதலமைச்சரும் கண்டு கொள்வதில்லை என்பது அராஜகத்தின்பாற்பட்டதாகும். அந்த அறிவுரை வெற்று அறிவுரை ஆகி, காற்றோடு கலந்து விட்டது எனத் தெரிவித்துள்ளார்.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement