ஸ்விக்கி ஊழியர்களின் ஊதியப்பிரச்சினைக்கு தமிழகமுதல்வர் தீர்வுகாணவேண்டும்:ஸ்டாலின்

tamilnadu-cm-should-take-action-for-swiggy-labours--salary-problems-DMK-chief-M-K-Stalin

ஸ்விக்கி நிறுவன ஊழியர்களின் ஊதியக்குறைப்புப் பிரச்சினைக்கு, முதலமைச்சர் திரு.பழனிசாமி அவர்களே நேரடியாகத் தலையிட்டு, நிறுவனத்தை நேரில் அழைத்துப் பேசித் தாமதமின்றித் தீர்வு காணவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்


Advertisement

image

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இன்று என்னைச் சந்தித்த "ஸ்விக்கி" உணவு விநியோக ஊழியர்கள், "கொரோனா பேரிடர் காலத்தைக் காரணம் காட்டி ஊழியர்களின் ஊதியத்தையும், ஊக்கத் தொகையையும் குறைத்திருப்பதாகவும் - அதற்காகவே தொடர் போராட்டம் நடத்தியதாகவும்" கூறிய போது- அவர்களின் மன உளைச்சல் கண்டு மிகவும் வேதனைப்பட்டேன். ஊரடங்கு நேரத்திலும்  ‘ஆன்லைன் ஆர்டர்’  மூலம் உணவை எடுத்துச் சென்று வழங்கி- வீட்டிற்குள் அடைபட்டிருக்கும்  மக்களின் வயிற்றுப் பசியாற்றிய இந்த ஊழியர்களின் போராட்டத்தை 'ஸ்விக்கி' நிறுவனம் அமைதியாக வேடிக்கை பார்த்ததும் - 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் போராட்டத்தை அ.தி.மு.க. அரசு கண்டு கொள்ளாமல் இருந்ததும், மிகுந்த கண்டனத்திற்குரியது.


Advertisement

பேரிடரில் அனைவரின் வாழ்க்கைத் தரமும், வாழ்வாதாரமும் சூறையாடப்பட்டுள்ள சோகத்தை,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறேன்; அதைத் தடுக்க அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி வருகிறேன். ஆனால் கண் முன்னே நடைபெற்ற ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர்களின் போராட்டத்தைக் கண்டு கொள்ளாமலும் - அவர்கள் வைத்துள்ள “புதிய ஊதிய முறையைத் திரும்பப் பெற வேண்டும்” என்பது உள்ளிட்ட 16 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு உரிய பேச்சுவார்த்தையை நடத்திட வேண்டும் என்று கூட அ.தி.மு.க. அரசின் முதலமைச்சரோ அல்லது தொழிலாளர் நலத்துறை அமைச்சரோ முயற்சி செய்யாமலும் இருந்தது மிக மிகத் தவறான அணுகுமுறை; தொழிலாளர் விரோத மனப்பான்மை. ஒவ்வொரு தொழிலாளரின் உரிமையையும் பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பு- அதிலும் குறிப்பாகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் பொறுப்பு என்பதைக் காலம் தாழ்த்தாமல் உணர்ந்திருக்க வேண்டும்.

“மாதம் 20 ஆயிரம் ரூபாய் பெறும் ஒரு ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர் 6 ஆயிரம் ரூபாய் கூடப் பெறமுடியவில்லை” என்று ஊழியர்கள் தெரிவித்த செய்திகள் அதிர்ச்சியளிப்பவையாக இருக்கின்றன. கொரோனா காலத்திலும் தங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள - அவர்களை நம்பியிருக்கும் குடும்பங்களைக் காப்பாற்ற,  உயிரைப் பணயம் வைத்து இந்த உணவு விநியோக ஊழியர்கள் பணியாற்றியுள்ளார்கள். அந்தப் பணிக்குரிய சம்பளத்தை வழங்க 'ஸ்விக்கி' நிறுவனம் மறுப்பதும், குறைத்ததும் அப்பட்டமான அநீதியாகும். “வேலை செய்த நாட்களுக்கு உரிய சம்பளத்தை வழங்க வேண்டும்” என்பது   உரிமை என்றாலும்- “வேலையே செய்யவில்லை என்றாலும்- கொரோனா காலகட்டத்தில் பணிபுரிவோருக்குச் சம்பளம் வழங்குங்கள்” என்று இதே மத்திய- மாநில அரசுகள் முதலில் உத்தரவிட்டதை மனதில் கொள்ளத் தவறி விட்டார்கள்.  மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அரசே கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக அனைவரும் உணவகத்திலிருந்து ‘ஆன்லைன் ஆர்டர்’  மூலம் பெற்றுச் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் ஞாயிற்றுக்கிழமை என்பது முழு ஊரடங்கில் சிக்கிக் கொண்டிருக்கிறது. சமூக இடைவெளி கடைப்பிடிப்பதால் மற்ற நாட்களிலும் உணவகங்களில் வாடிக்கையாளர்களை  அதிகமாக அமர வைக்க முடியாத நிலை தொடருகிறது. இது போன்ற நேரத்தில் இந்தப் போராட்டத்தைக் கண்டு கொள்ளாமல் இருந்தது, ஏற்கனவே தொழிலில் முடங்கிப் போய்க் கிடக்கும் உணவகங்களைப் பாதித்துள்ளது; போராடிய ஊழியர்களின் குடும்பங்களை வறுமையின் பிடியில் தள்ளித்  தவிக்க விட்டுள்ளது.

 ஆகவே, ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர்களின் போராட்டத்தை இதுவரை அலட்சியம் செய்தது போல் மேலும் தொடர்ந்து செய்யாமல் - அவர்கள்  போராட்டத்தைக் கைவிட்டுள்ள நிலையில், ஊழியர்களை உடனடியாக அழைத்துப் பேசி,  ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று 'ஸ்விக்கி' நிறுவனத்திற்கு உத்தரவிடுமாறும், அவ்வாறு அந்த நிறுவனம் கேட்கவில்லையென்றால்  முதலமைச்சரே நேரடியாகத் தலையிட்டு - ஊழியர்களையும், நிறுவனத்தையும் அழைத்துப் பேசி - ஊழியர்களின் ஊதியப் பிரச்சினைக்கு ஒரு சுமூகத் தீர்வு காண வேண்டும் எனவும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement