தோனி - மீண்டும் நிகழ முடியாத ஒரு வரலாறு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மகத்தான வீரனை ஒரு ரணமிகு தோல்வியுடன் வழியனுப்பியிருக்கிறோம்!


Advertisement

வாழ்க்கை ஓட்டத்தில் நமக்கு வயதாவதை சில நிகழ்வுகள் மட்டுமே தடாலென உணர்த்தும், அண்ணாவில் இருந்து அங்கிள் என அழைக்கப்படும் முதல் நொடி, ஒவ்வொரு ஐந்து வருடத்திற்குமான பிள்ளைகளின் பிறந்த நாட்கள், நம் தலைமுறையின் மிகப்பெரிய ஆளுமைகளின் மறைவுகள் போன்றவையாக இவை அமையும்.

முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மரணங்கள் ஒரு சகாப்தத்தின் முடிவு போலத் தோன்றியது. இயக்குநர் பாலச்சந்தர், பாலுமகேந்திரா மரணங்கள் என்னவென்றே தெரியாத ஒரு திடீர் வெறுமையை மனதில் நிரப்பியது. கிரேசி மோகன் இனி இல்லை என்பதை நம்பவே முடியவில்லை. அவர் மறைந்து விட்டார் என்பதை ஒவ்வொரு முறை அறிய வரும்போதும் அதை புதிய தகவலாகவே உள்வாங்குகிறேன், எதுக்கும் அவருக்கே ஒரு போன் அடித்துக் கேட்டு விடுவோம் எனத் தோன்றுகிறது. காரணம், இவர்களுக்கெல்லாம் வயதாவதே அறியா வண்ணம் இவர்கள் படைப்புகள்/ செயல்கள் இருக்கும்.


Advertisement

தோனியும் அப்படித்தான். இவர்களின் மறைவு தந்த ஒரு வலியை, ஒரு நிரந்தர அழுத்தத்தை, கால ஓட்டத்தின் நிதர்சனத்தை பளிரென அடித்து உணர்த்தியிருக்கிறது தோனியின் ஓய்வறிவிப்பு.

imageஉலகக்கோப்பை அரையிறுதியில் இரு அங்குல இடைவெளியில் ஒரு வரலாறு கை நழுவிய போது போது உடைந்து போனார் தோனி. ஆட்டமிழந்து வெளியேறும் காணொளியில், அவரது வருத்த முகமும், வழியும் கண்ணீரும் கண்டு உடன் அழுதது இந்தியா. பல இரவுகள் உறக்கமே இல்லை. எருமை மாடு வயதானாலும் கடவுளே உனக்கு இரக்கமே இல்லையா என சின்னப் பையன் போல கதற முடிந்தது. காரணம் அப்படியொரு இழப்பை, தோல்வியின் வலியை அவர் என்றும் வெளிப்படுத்தியதில்லை. வாக்குறுதிகள் உடைந்து போகலாம், ஆனால் தன் வாழ்வை உறுதியாக வாழ்ந்தவன் துவண்டு போவதைப் பார்க்கும் துணிவு என்னிடம் இல்லை. ஆனாலும் இப்படிச் சொல்லி சொல்லியே அவர் ஆட்டமிழந்து வெளியேறும் காணொளியை ஆயிரம் முறையாவது பார்த்திருப்பேன்.,

அதன் பிறகு எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என ஒரு அறிவிப்பும் இல்லை, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் போட்டு அழைத்தும் பதிலில்லை. தோனி ஓய்வு பெறப் போகிறார் என்று தகவல்கள் வந்தது, இணையம் கதறியது, அதற்கும் பதிலில்லை. அடுத்த கிரிக்கெட் தொடர்களில் அவர் பெயரில்லை என்று அறிவிப்பு வந்தது, அதற்கும் பதிலில்லை, அவரது தரிசனமென்ன, அவரது ஒரு வார்த்தைக்காக காத்துக் கிடந்தது இத்தேசம்.


Advertisement

ஆனால் உணர்ச்சிகரமான அத்தருணத்தில் எதுவும் சொல்லாமல், அமைதியாகத் தனித்திருந்தார் தோனி. சில மாதங்களுக்கு பிறகு இந்திய இராணுவத்தின் 106 பாரா மிலிட்டரி பிரிவில் இருவாரங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிரிப்பது போல ஆனால் இறுகிய முகத்துடன் ஒரு புகைப்படம் வெளியானது. அதன் பிறகான ஒரு பேட்டியில், அந்த ரன் அவுட் குறித்த கேள்விக்கு,

I keep telling my self! Why didn’t I dive ? Those two inches, Dhoni you should have dived என்று சொன்னது, மாதங்கள் கடந்தும் அந்நிகழ்வின் வடு ஆறா ரணமாக அவரை வதைக்கிறது என்பதை உணர்த்தியது. குறை காண முடியாத ஒரு தற்செயலில் கூட அதன் கடைசித் துளியை ஆராய்ந்து இதைச் செய்யாமல் போனது என் தவறு என்று சொன்ன போது புரிந்தது, தோனி ஓய்வை அறிவிக்கப் போகிறார் என்று ..

imageமற்றவர்களைப் போல தோனி ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, தனது திறமையால், குணநலன்களால், பலரது வாழ்வை மாற்றிய ஒரு ஆகச் சிறந்த அன்புத் தலைவன். திட்டமிடுதல், டீம் மேனேஜ்மென்ட், Managing Ego’s, pressure, focus என அவரை அங்குலம் அங்குலமாகப் பிரித்துப் கார்ப்பரேட் பயிற்சிப் பாடமெடுக்கிறார்கள். அவரது தனித்துவங்களில் எனக்குப் பிடித்தது, ஆட்டத்தை அதிரடியாய் முடித்துவிட்டு, கோப்பையை வாங்கி அணியிடம் கொடுத்து விட்டு நகர்ந்து போய்க் கொண்டே இருப்பார்.

ஷாம்பெய்ன் கொண்டாட்டங்கள், மைக் புகழ்ச்சிகள், மேடை முதல் வரிசை என எங்கும் பார்க்க முடியாது. இவங்க இப்படி கொண்டாடும் போது இந்த மனுஷன் எங்கதாய்யா போவார் என்று பல நாள் டிவிக்குள் தலைவிட்டு கவனித்ததில் ஒரு படம் சிக்கியது. அவரது மகள் ஜிவாவுடன் ஒடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். தந்தையாகவும் சரி, தலைவனாகவும் சரி. ஒரு நொடியின் தேவை எதுவோ அதை மட்டுமே கவனித்து நிறைவேற்றுவது தான் தோனி.

வெற்றிக்கு வாய்ப்பே இல்லை எனும் தருணங்களில் கூட அய்யனார் போல வேட்டைச் சாமியாய் களமிறங்கி, அரங்கம் அதிர ஆடி, கூரை தாண்டிப் பறக்கும் பந்துகளில் வெற்றிக் கோட்டைகள் கட்டித்தந்த ஒரு மாமனிதனை, மகத்தான வீரனை ஒரு ரணமிகு தோல்வியுடன் வழியனுப்பியிருக்கிறோம். இந்தியக் கிரிக்கெட் வாரியம் இதற்காக வெட்கப்பட வேண்டும்.

imageஆனால் பிசிசிஐ-யை பொறுத்த அளவில் தமிழகம் என்று ஒரு மாநிலம் இருக்கிறது. அதில் சென்னை என்ற ஊர் இருக்கிறது என்பது தான் தெரியும். ஆனால் அங்கு தோனி என்பது ஓர் ஆளுமை மட்டுமல்ல, அங்கு இருக்கும் அத்தனை பேரும் தோனி தான் என்பது தெரியாது. ஐபிஎல் உங்களுடைய வியாபாரமாக இருக்கலாம், ஆனால் அன்பு, அது தான் எங்கள் சாம்ராஜ்யம். தலைவன் ஆடி நிறையப் பார்த்திருப்பீர்கள், ஆனால் தமிழர்களின் அன்பை இனி வரும் அத்தனை போட்டிகளிலும் பார்ப்பீர்கள்.

- ஹரிஹரசுதன் தங்கவேலு

loading...

Advertisement

Advertisement

Advertisement