[X] Close >

”வெட்டிவேரு வாசம்.. வெடலப்புள்ள நேசம்” முதல் மரியாதைக்கு 35 ஆண்டுகள்!!

Mudhal-mariathai-film-of-35-years----A-walk-in-the-memory-lane-of-Bharathiraja-s-directorail-venture

மீண்டும் ஒரு கிராமத்து ராகத்தை எனது பரிவாரங்களோடு பாட வருகின்றேன்... என்று கைகூப்பியபடி இயக்குநர் பாரதிராஜாவின் கரகரத்தக் குரலை இசைஞானியின் துள்ளலான இசைப்பின்னணியுடன் தியேட்டரில் நாம் கேட்டபோது சிலிர்ப்பாக இருந்தது. முதல் மரியாதை படம் வெளியாகி 35 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஏதோ நேற்றுபோலத்தான் இருக்கிறது.


Advertisement

"சிவாஜி என்ற மாபெரும் நடிப்பாளுமைக்குச் செய்யப்பட்ட முதல் மரியாதைதான் இந்தப் படம். தமிழ் மண்ணில் இருந்து கிளர்ந்த கலாச்சார மனிதனாக, மண் சார்ந்த பண்பாடுகளுடன் கூடிய வலிமையும் பலவீனமும் கொண்ட கிராமத்து மனிதராக சிவாஜியை முதல் மரியாதையில் பார்த்தோம். தமிழ் நிலத்தின் அடையாளமாகத்தான் அவர் திரையில் தோன்றினார்" என்று பேசத் தொடங்குகிறார் நவீன சினிமா ஆய்வாளர் சுபகுணராஜன்.

image


Advertisement

ஓவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு புல்லாங்குழல், வார்த்தைக்கு வராத சோகத்தை வாசித்துக்கொண்டுதான் இருக்கும். அப்படி ஒரு சோகராகத்தைத்தான் சுரம் பிரித்தேன். அதைத்தான் உங்கள் பார்வைக்குப் படம்பிடித்தேன்" என்று பாரதிராஜா பேசுவதற்குப் பிறகு வரும் காட்சிகள் நம்மை கதைச்சூழலுக்குள் கொண்டுபோய் விட்டுவிடும். பிறகு நாமும் பரிசலில் ராதாவுடன் பயணிக்கத் தொடங்கிவிடுவோம்.

image

தமிழ் சினிமா வரலாற்றில் மிகச் சிறந்த படங்களின் வரிசையில் முதல் மரியாதைக்கு தனித்த இடம் உண்டு. மிகை நடிப்புதான் சிவாஜி என்று பேசப்பட்டு வந்த விமர்சனத்தை அந்தப் படம் சுக்குநூறாக்கித் தூக்கிப்போட்டது. அரைக்கை வெள்ளைச் சட்டையுடன் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு கையில் முண்டாசுடன் சிவாஜி வரும் காட்சிகள் காவியம் போன்றவை. எந்த மினுக்கும் இல்லாமல் நடித்திருப்பார். "நடக்கச்சொன்னார்... நடந்தேன்.... அப்புறம் படத்துலதான் தெரிந்தது" என்று சிவாஜியே சொன்னதாகச் சொல்வார்கள்.


Advertisement

எப்போதும் வாய் கிழிய கத்திக்கொண்டிருக்கிற மனைவி பொன்னாத்தாளாக வடிவுக்கரசி, சின்னச் சிரிப்பில்கூட ரசனை கூட்டிய பரிசல்காரி குயிலாக ராதா, அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன் என்று காதலில் விழுந்த தீபன், கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன் என்ற காதல்கிளியாக ரஞ்சனி, மீசைக்காரப் பெரியவராக சத்யராஜ் என முதல் மரியாதையின் கதாபாத்திரங்கள் மனதில் சித்திரங்களை வரையக்கூடியவையாக இருக்கின்றன. நாளைக்கு டிவியில் போட்டால்கூட பார்ப்பதற்கு அத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள்.

image

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி... செங்கோடனாக வரும் ஏ.கே.வீராச்சாமியின் குரலை நாம் மறக்கமுடியுமா? ஒரு கதைபோலத் தெரிந்தாலும் திரைக்கதையில் கிளை கிளையாகப் பிரியும் சிறுகதைகள் இணைந்த ஒரு புதினமாக முதல் மரியாதை புதுமையான அனுபவத்தை அளித்தது. முதல் மரியாதை படத்தின் ஆணிவேராக இருந்தவர் கதாசிரியர் ஆர். செல்வராஜ். தமிழ் வாழ்வின் காதலை, துயரத்தை, குடும்பச் சிக்கல்களை, மனிதர்களின் இயல்புகளை சில மணி நேர திரைக்கதைக்குள் சுருக்கித் தைத்திருந்தார்.

image

ராதா வீட்டில் அமர்ந்தபடி சிவாஜி சாப்பிடும் ஆற்று மீன், மயில் தோகையில் மருந்திடும் ராதா, வெள்ளி நரைமுடியில் பாசிமணி கோக்கும் காட்சி என சொல்லிக்கொண்டே போகலாம். அவையெல்லாம் கல்வெட்டுகளாக ரசிகர்களிடம் பதிந்துபோய்விட்டன. சிறைக்குச் செல்லும் ராதா, அந்த பாசிமணியை கவனமில்லாமல் மணலில் தொலைப்பார். காலங்கள் கடந்து மரணப்படுக்கையில் இருக்கும் சிவாஜி, தன்னைப் பார்க்கவரும் குயிலுக்கு அந்தப் பாசிமணியைத்தான் பரிசாகத் தந்து உயிர்துறப்பார். சுகமான ராகம் யாவும் சோகம்தானே...

image

திரையில் கதை சொல்லி நிபுணத்துவம் காட்டிய பாரதிராஜா, கதையின் ஆன்மாவை பாடல்வரிகளில் வரைந்துகாட்டிய வைரமுத்து, முதல் மரியாதையை ரசிகர்களின் இதயங்களுக்குள் இசையால் கடத்திய இளையராஜா, நாமும் அந்த கிராமத்தில் இருப்பதைப் போன்று உணரவைத்த ஒளிப்பதிவாளர் பி. கண்ணன், பேசும் மொழியில் கதாபாத்திரங்களின் மெளனங்களைப் பேசிய ஆர். செல்வராஜ் எனச் சொல்வதற்கு நிறைய பெருமைகளை முதல் மரியாதை வைத்திருக்கிறது. ஒவ்வொருவரும் தனித்துவமிக்க படைப்பாளிகள் என்பதை ரசிகர்களின் ஆரவாரமிக்க வெற்றியின் மூலம் நிரூபித்த படமாக அது இருந்தது.

"ஐம்பதுகளில் சிவாஜி ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்கள் எளிய மனிதர்களுடையதாக இருந்தன. சிவாஜியும் பாரதிராஜாவும் இணைந்த புள்ளிதான் தமிழ் சினிமாவின் மகத்தான தருணம். சாதிய சமூகத்தின் கதையைச் சொன்னதாகப் பேசினாலும்கூட, சாதியற்ற சமூகத்து மனிதன் ஒருவனின் வாழ்க்கைதான் நம் கண்முன்னே ஓடிக்கொண்டிருக்கும். இயக்குநர் பாரதிராஜா, இந்தப் படத்தில்தான் தன்னைச் சரியாக லொகேட் செய்துகொண்டார் என்று நான் சொல்வேன்" என்கிறார் சுபகுணராஜன்.

image

"ஏ... ஏ கிளியிருக்கு பழமிருக்கு... ஏரி கரை இருக்கு... சோள கருதிருக்கு.... அடி சோல குயிலிருக்கு... " என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் நாம் முதன்முதலில் முதல் மரியாதை படம் பார்த்த தியேட்டருக்குப் போய்விடுகிறோம். ஏதோ இனம்புரியாத மனநிலையில் மகிழ்ச்சியோ அல்லது துவண்டுபோகும் அளவுக்கான துயரமோ... பூங்காற்று திரும்புமா பாடல் ஒன்று போதுமே. மனநதியில் அப்படியே சிவாஜி மெல்ல நடந்துவருவார்... இதோ நடந்துவருகிறார்.

பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா
பாராட்ட மடியில் வெச்சு தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா

ராசாவே வருத்தமா
ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா

என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல

இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல..

என்றும் மறையாமல் மக்கள் மனங்களில் பூங்காவியமாக நிலைத்திருக்கும் இந்த ”முதல் மரியாதை”.

சுந்தரபுத்தன்

 

 

 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close