[X] Close >

”சுதந்திர தினத்தை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடவில்லை” - இயக்குநர் அமீர் சிறப்பு பேட்டி

Special-interview-with-Director-Amir

நாட்டின் 74 வது சுதந்திர தினம் இந்தியா முழுக்க கொண்டாடப்பட்டு வந்தாலும், இந்திய வரலாற்றில் கொரோனாவால் நாடே ஊரடங்கில் அடைப்பட்டுக்கொண்ருப்பது இதுதான் முதல்முறை. அதனால், இந்த சுதந்திர தினத்தை எப்படி பார்க்கிறார்கள் என்று சில பிரபலங்களிடம் கேட்டோம், இயக்குநர் அமீர் நம்மிடம்,


Advertisement

        “பல்வேறு வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையாக சுதந்திர தினத்தைக் கொண்டாடினாலும் மக்கள் மகிழ்ச்சியான மனநிலையில் சுதந்திர தினத்தைக் கொண்டாடவில்லை. ஏனென்றால், இங்கு பாசிச ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குடியுரிமை சட்டம் கொண்டுவந்து ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள். எங்கும் வேலை இல்லாத சூழல் உருவாகிவிட்டது. மக்கள் மனவருத்தத்தோடுதான், இந்த சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனாலும், இந்த தேசத்தின் பிள்ளைகளாக சுதந்திர தினத்தை வரவேற்கவேண்டும். மத்திய அரசின் சர்வாதிகார ஆட்சி ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கையில் எதிர்கொள்ளவேண்டும். அக மலர்ச்சியோடும் முக முலர்ச்சியோடும் உள்ளத்தின் உண்மையான பூரிப்போடும் எல்லோரும் ஒற்றுமையோடும் கொண்டாடும் சூழல் மீண்டும் உருவாக வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

image


Advertisement

  கொரோனா நடவடிக்கைகள் காலதாமதமாக எடுக்கப்பட்டு கடுமையாக்கப்பட்டாலும் தேவையானதாக இருந்தது. ஆனால், இ பாஸ் முறையைக் கொண்டுவந்து லஞ்சம் வாங்கும் துறையாக மாற்றிவிட்டார்கள். உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவிப்பது வேதனையாக இருக்கிறது. இந்தக், கொரோனா காலத்திலும் மக்களுக்கு உதவாத அரசுகள்தான் மாநிலத்திலும் மத்தியிலும் உள்ளது. மின்சாரத்தில் தொடங்கி உணவுவரை அனைத்திலும் இரண்டு மடங்கு விலையேற்றம். ஆனால், வேலைவாய்ப்பில்லை. அதேபோல, முகக்கவசம் ரேஷன் கடையில் வாங்கிக்கொள்ளுங்கள் என்கிறார்கள். எந்தக் காலத்தில் நாம் வசிக்கிறோம் என்பது தெரியவில்லை? டோக்கனை வீட்டிற்கு வந்துகொடுப்போம் நீங்கள் ரேஷன் கடையில் முகக்கவசம் வாங்குங்கள் என்பது மக்களை சோர்வடைய வைக்கும். மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது மத்திய அரசு சிறப்பாக செயல்படவில்லை. அப்படித்தான், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகம் சிறப்பாக செயல்படவில்லை. எல்லா மாநிலத்திலும் அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும்போது தமிழக அரசுதான், அந்தக் கொரோனாவிலேயே ஊழலை செய்துகொண்டிருக்கிறது. இதுதான், அறிவார்ந்த சமூகமா? அல்லது நமக்கான தலைமையா? நமக்கான ஆட்சியாளர்களா? அல்லது மக்கள் இதனை சகித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டு வேறு வழியில்லாமல் வாழ்கிறார்களா? என்ற பல்வேறு கேள்விகளுக்கிடையில் மக்கள் எங்கு, இந்த சுதந்திர தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள்?

image

   அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திற்குதான் சுதந்திரம் தேவைப்படுகிறது. நாம் முழுமையான சுதந்திரத்தை பெற்றிருக்கிறோமா? என்று பார்த்தால் பெயரளவிற்குதான் பெற்றிருக்கிறோம். மீண்டும் அடக்குமுறையில்தான் இருக்கிறோம். வெள்ளையர்கள் நம் நாட்டை கொள்ளையடித்தார்கள். ஆனால், இப்போது வெள்ளை வேஷ்டிக் கட்டிகொண்ட கொள்ளையர்கள் நம்மை ஆள்கிறார்கள். அதிகாரத்தில் இருக்கும் மக்களின் நிறங்களும் உடைகளும் மாறியிருக்கிறதே தவிர மக்களின் துயரம் மாறவில்லை. இந்த சுதந்திர தினத்தை சந்தோஷமாக கொண்டாடக்கூடிய மனநிலையில் மக்கள் இல்லை. மேலும், எழுத்து, பேச்சு, கருத்து சுதந்திரம் எல்லாம் அடக்கப்பட்டிருக்கிறது. ஆனால், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு  மட்டும் சுதந்திரம் உள்ளது. சாமானிய மக்களுக்கு இல்லை. மக்கள்விரோத செயல்பாடுகளைத்தான் செய்துகொண்டிருக்கிறது.


Advertisement

image

 என்ன உணவு? என்ன உடை அணிய வேண்டும் என்று ஒருவன் சொல்கிறான். இன்னொருவன் தேசப்பக்தியை எப்போதும் தெர்மா மீட்டர் வைத்து அளந்து பார்த்துக்கொண்டே இருக்கிறான். இப்படியொரு வாழ்க்கையில் எனக்கு எங்கு சுதந்திரம் உள்ளது? ஜனநாயக நாடு என்றப் போர்வையில் கொஞ்சம் கொஞ்சமாக சர்வாதிகாரத்தனமாக மாறிக்கொண்டிருக்கிறது இந்தியா. ஒரு வருடங்களுக்குமேலாக காஷ்மீர் மக்களின் நிலை வெளியுலகத்திற்கு தெரியுமா? யாருக்காவது சொல்லப்பட்டிருக்கிறதா? தனி அதிகாரத்தில் இருந்தவர்களை மத்திய அரசின்கீழ் கொண்டு வந்துவிட்டார்கள். அங்குள்ள அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையை விட்டு வெளியில் வரவே இல்லை. எனவே, இது ஆட்சியாளர்களுக்குத்தான் சுதந்திர தினம். அவர்கள் நினைத்த நேரத்தில் பொதுவெளியில் கலந்துகொள்கிறார்கள். ஆட்சி மாற்றத்திற்கான கூட்டம் நடத்துகிறார்கள், கோயில் அடிக்கல் நடும் பூஜையில் கலந்துகொள்கிறார்கள். ஆனால், மக்களுக்கு தங்கள் இஷ்ட தெய்வங்களை வணங்கக்கூட  கோயில்களை மூடிவைத்து மறுக்கிறார்கள்? இதில், மக்களுக்கு எங்கு சுதந்திரம் இருக்கிறது? அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத்தான் சுதந்திரம் உள்ளது. இந்த, 74 வது சுதந்திர தினத்தை அப்படிப்பட்ட சுதந்திர தினமாக பார்க்கக்கூடிய சூழல் இந்தியாவில் உருவானதை நினைத்து நான்  மிகவும் வேதனைப்படுகிறேன். இந்நிலை, மாறவேண்டும். உண்மையான சுதந்திர தினத்தை பல ஆண்டுகளுக்கு முன்னால் உணர்ந்திருந்ததுபோல் மீண்டும்  எதிர்நோக்கி காத்திருக்கும் சாமானிய மக்களில் ஒருவனாக நானும் இருப்பேன். அவ்வளவுதான்” என்கிறார்,வேதனையோடு.

- வினி சர்பனா

 

 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close