[X] Close

அருமையான ஐந்து வாட்ஸ் ஆப் குழுக்கள்… அரசுப் பள்ளியை உச்சத்தில் வைத்த ஆசிரியர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் மார்ச் மாதம் முதலே பள்ளிகள் மூடப்பட்டன. பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளியுடன் தொடர்பின்றி பல நாட்களாக வீடுகளில் மாணவர்கள் முடங்கியுள்ளனர். சில பள்ளிகளில் மட்டும் மெல்ல ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டன. குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு வசதிகளுக்கு ஏற்ப கல்வி கற்பிக்கும் பணிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டார்கள்.


Advertisement

image

அப்படியொரு ஆசிரியர், வீட்டிலிருந்தே மாணவர்கள் படிக்க வசதியாக ஒரு வாட்ஸ் ஆப் குழுவைத் தொடங்கினார். அதன் மூலம் தான் பணிபுரியும் கிராமத்துப் பள்ளியை ஹெடெக் பள்ளியாக மாற்றிய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார் விஜயராஜ். புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கரையப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியராக அவர் பணியாற்றுகிறார்.


Advertisement

“அது 2012 ஆம் ஆண்டு. திருவண்ணாமலை மாவட்டம், வேளையாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல் பணி நியமனம் பெற்றேன். ஒன்றாம் வகுப்பில் 12 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில் பள்ளியில் இருந்த லேப்டாப், டிவி, புரொஜெக்டர் வசதிகளைப் பயன்படுத்தினேன். போனெடிக்ஸ் உள்ளிட்ட ஆங்கில உச்சரிப்பு முறைகளையும் மாணவர்களுக்குக் கற்பித்தேன்.

image

(ஆசிரியர் விஜயராஜ்)


Advertisement

விளைவாக, அடுத்த கல்வியாண்டில் முதல் வகுப்பில் 31 மாணவர்களும், இரண்டாம் வகுப்பில் 16 மாணவர்களும் கூடுதலாகச் சேர்ந்தார்கள். மேலும் புதிதாக கூடுதல் ஆசிரியர் பணியிடம் ஒன்றை உருவாக்கியது எனக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது. அடுத்து புதுக்கோட்டை மாவட்டம், கள்ளக்காத்தான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாறுதல் பெற்றுவந்தபோது பள்ளி ஓட்டுக்கட்டிடத்தில் இருந்தது. புதிய கட்டடம் கட்டவோ, மாணவர்கள் விளையாடவோ இடமில்லை.

image

எதார்த்த நிலையை உணர்ந்து, கிராம மக்கள் உதவியுடன் பள்ளிக்கு அருகிலேயே ஆக்கிரமிப்பில் இருந்த இடங்களைக் கையகப்படுத்தி, சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டிடமும் கட்டப்பட்டது. அதனால் ஐந்தாம் வகுப்பு வரையில் ஒரு குழந்தை கூட வெளியூர் செல்லவில்லை என்கிற நிலையை ஏற்படுத்தியபோது என் மனம் நிறைவாக இருந்தது.

தற்போது பணிபுரியும் பள்ளிக்கு வந்தபோது, இங்கு ஒரு கட்டிடம் மின்வசதியில்லாமல் பயன்படுத்தமுடியாத நிலையில் இருந்தது. மாணவர்கள் தண்ணீர் வசதியின்றி கழிப்பறைகளைப் பயன்படுத்தமுடியவில்லை. வெளியில் சென்றுவந்தனர். மாணவர்களுக்கு அரசு வழங்கிய கற்றல், கற்பித்தல் உபகரணங்களை முழுமையாகப் பயன்படுத்தி ஆர்வமாக கற்பித்துவந்தேன். அந்த நேரத்தில்தான் கொரோனா காரணமாக பொதுமுடக்கமும் நடைமுறைக்கு வந்தது.

image

முதல் வாட்ஸ்ஆப் குழு

ஏப்ரல் 3ஆம் தேதி மாணவர்களுக்கு பாடம் நடத்த முதல் வாட்ஸ்ஆப் குழு ஆரம்பித்தோம். காலையில் வாய்ப்பாடு படித்தல், தினம் ஒரு தமிழ்ப் பாடல், ஆங்கிலப் பாடல், வகுப்புவாரியாக சிறுகணக்குகள், பொதுஅறிவு, அரசு இணையதளத்தில் உள்ள வீடியோக்கள், டீம்ஸ் நேரலை வகுப்புகள் என தொடர்ந்து பாடங்கள் நடத்தினோம். இந்தக் குழுவில் சென்னை, டெல்லி மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் பெற்றோரின் எண்களும் இணைக்கப்பட்டன.

இரண்டாவது வாட்ஸ் ஆப் குழு

ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் தம் பிள்ளைகள் சிறப்பாக படிப்பதைப்பார்த்து வியந்த பெற்றோரும், முன்னாள் மாணவர்களும் கேட்டுக்கொண்டதன் பேரில் இரண்டாவது வாட்ஸ் ஆப் குழுவை "கரையப்பட்டி பள்ளி வளர்ச்சிக்குழு " என்ற பெயரில் தொடங்கினோம். இந்தக் குழுவின் முயற்சியால் வெளிநாடுவாழ் முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் என முற்றிலும் உள்ளூர் மக்களின் பங்களிப்பில் கிட்டத்தட்ட நான்கு லட்ச ரூபாய் நிதி திரட்டினோம்.

image

அதை வைத்து மின்வசதி இல்லாமல் பூட்டிக்கிடந்த கட்டிடத்தை ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றினோம். இரண்டு கட்டிடங்களையும் மராமத்துப் பணிகள் செய்து, கண்கவர் வண்ணங்கள் பூசி, பெஞ்ச், டெஸ்க், புரொஜெக்டர், லேப்டாப், இன்வெர்டர், சிசிடிவி, சின்டெக்ஸ் டேங்குகள், சென்சார் லைட், விளையாட்டு மைதானம், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி, பூங்கா என அதிநவீன வசதிகளைச் செய்து ஹைடெக் பள்ளியாக மாற்றிவிட்டோம். மாணவர்களும் பெற்றோர்களும் அளவுகடந்த உற்சாகத்தை அடைந்தனர்.

மூன்றாவது வாட்ஸ்ஆப் குழு
எங்கள் பள்ளி மாணவர்களுக்கு அனுப்பும் பாடங்களை பிற அரசுப் பள்ளி மாணவர்களும் கற்கும் வகையில் மூன்றாவது வாட்ஸ்ஆப் குழு தொடங்கப்பட்டது. பலவகையான போட்டிகளின் மூலம் மாணவர்களின் திறன்களை வளர்க்கும் வகையில் அந்தக் குழு செயல்பட்டுவருகிறது. கிராமப்புற மாணவர்களுக்கு அது ஊரடங்கு நேரத்தில் மிகப்பெரும் அளவில் பயன்படுகிறது.

image

நான்காவது வாட்ஸ் ஆப் குழு:
பிற அரசுப் பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களுக்குப் பாடங்களைப் பகிர்ந்துகொள்ள பிரத்யேகமாக ஒரு வாட்ஸ் ஆப் குழு தொடங்கலாம் என்று விரும்பினார்கள். அவர்களுடைய வேண்டுகோளையும் நிறைவேற்றினேன். தங்களுடைய பள்ளி மாணவர்களுக்கு அனுப்பத் தேவையான பாடங்களை பெறும் வகையில் நான்காவது குழுவும் உருவாக்கப்பட்டது.

ஐந்தாவது வாட்ஸ் ஆப் குழு
எங்கள் பள்ளியில் செய்யப்பட்ட பணிகளைப் பார்த்து வியந்த கல்வியாளர்களும் கொடையாளர்களும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ஒரு குழுவைத் தொடங்கலாமே என்ற ஆலோசனையை முன்வைத்தார்கள். ஐந்தாவது குழுவையும் தொடங்கி அதற்கு கிராமப் பள்ளிகள் வளர்ச்சிக் குழு என்று பெயரிட்டோம்.

image

பின்னர், கரையப்பட்டி பள்ளியை மாதிரியாகக் கொண்டு பல நல்ல உள்ளங்களின் உதவியுடன் அரிமளம் ஒன்றியத்தைச் சேர்ந்த பத்து அரசுப் பள்ளிகள் அடையாளம் கண்டோம். அங்கெல்லாம் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பெற்றோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மேலும் மாணவர்சேர்க்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளோம்.

பள்ளிகளின் மேம்பாட்டில் தலைமை ஆசிரியர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என அனைவரும் ஒத்துழைக்கும்போது ஒவ்வொரு பள்ளியும் நவீன வசதிகளுடன் வளர்ச்சி அடையும். இளம் மாணவர்களுக்கு இனிமையான கற்றல் வாய்ப்புகளை ஏற்படுத்தும் அற்புதப் பள்ளிகளாக அவை உருவாகும்” என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement