[X] Close

மாணவர்களை கண் இமைபோல் காத்து விளையாட்டு துறையில் சாதிக்க வைக்கும் புதுக்கோட்டை ஆசிரியர்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுக்கோட்டையை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கத்திடம் பயிற்சிபெற்ற மாணவர்கள் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் தேசிய, மாநில போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர், 100க்கும் மேற்பட்டோர் விளையாட்டு கோட்டாவில் அரசுப்பணியில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டில் 20 பேரும், இந்த ஆண்டில் 65 பேரும் இவரிடம் பயிற்சி பெற்று காவல்துறைக்கு தேர்வாகியுள்ளனர். 


Advertisement

image

 முன்னேற எல்லாருக்குமே விருப்பமுண்டு, ஆனால் முன்னேறுவதற்கு முன்நின்று கைகொடுத்து உதவிசெய்ய ஆசிரியர் கிடைப்பதுதான் அரிது. அப்படி பலநூறு மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றியுள்ளவர்தான் புதுக்கோட்டையை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம். புதுக்கோட்டையில் இவரிடம் பயிற்சிபெற்ற மாணவர்கள் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் தேசிய, மாநில போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர், 100க்கும் மேற்பட்டோர் விளையாட்டு கோட்டாவில் அரசுப்பணியில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டில் 20 பேரும், இந்த ஆண்டில் 65 பேரும் இவரிடம் பயிற்சி பெற்று காவல்துறைக்கு தேர்வாகியுள்ளனர். புதுக்கோட்டை அரசு விளையாட்டு அரங்கத்தில் தினமும் காலை, மாலை இருவேளையும் தொடர்ந்து மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சியளித்துக்கொண்டிருப்பவர் இவர். இப்போது கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துகொண்டிருக்கிறார் இவர்.


Advertisement

image

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனையும், காவல்துறை துணை ஆய்வாளருமான அனுராதா பேசும்போது “ நான் கல்லூரி படிக்கும்போதுதான் விளையாட்டு துறைக்கே வந்தேன். அந்த நாட்களில் எனக்கு பளுதூக்குதல் போட்டியை அறிமுகப்படுத்தி, எனக்கு முதல் மூன்று வருடங்கள் பயிற்சியளித்தது முத்துராமலிங்கம் சார்தான். அப்போதுதான் தொடர்ந்து பல்கலைக்கழக அளவில் முதல்பரிசு பெற்றேன். மாநில அளவிலும் பல பரிசுகளைப் பெற்றேன். முதன்முதலாக பயிற்சி செய்யும்போது நான் ஒரு பெண் மட்டும்தான் பளுதூக்குதல் போட்டியில் கலந்துகொண்டிருந்தேன். நான் ஒரு ஆள்தான் இருக்கிறேன் என்று எந்த உணர்வும் இல்லாமல், தினமும் காலையும், மாலையும் எனக்காக வந்து பயிற்சியளிப்பார். சில நாட்களில் நானே சோர்ந்துபோனாலும், அவர் சரியான நேரத்திற்கு வந்துவிடுவார். ஆரம்பகாலங்களில் அவர் இவ்வளவு மெனக்கெடுகிறாரே என்பதற்காகவே பயிற்சியெடுத்தேன்.

image


Advertisement

நமக்கு பயிற்சி கொடுப்பாரே ஒழிய எந்த பிரதிபலனும் எதிபார்க்கமாட்டார். விளையாட்டு பயிற்சி மட்டுமின்றி பல சமூகசேவைகளையும் முன்னின்று செய்வார். அவரிடம் துளிகூட சுயநலம் இருக்காது, மாணவர்களை சிறப்பாக உருவாக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன்தான் எப்போதும் பயிற்சியளிப்பார்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

கொரோனா காலத்திலும் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துகொண்டிருந்த முத்துராமலிங்கத்தை சந்தித்தோம். அவர் பேசும்போது “ எனது ஊர் புதுக்கோட்டை அருகிலுள்ள செம்பாட்டூர். எங்கள் ஊரில் மாடுபிடி வீரர்கள் அதிகம். எனது அண்ணன் மிகவும் புகழ்பெற்ற மாடுபிடிவீரர். அதனால் சிறுவயது முதலே எனக்கும் விளையாட்டின்மீது பெரும் ஆர்வம். ஆனால், நான் உயரம் குறைவாக இருப்பதனால் பள்ளியில் என்னை விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்க மாட்டார்கள், இருந்தாலும் நானாகவே ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பேன். புதுக்கோட்டை ராஜா கல்லூரியில் இளங்கலை படிக்கும்போது உயரம் குறைவாக இருப்பதனால் என்னை என்.சி.சியில் சேர்த்துக்கொள்ள மறுத்தார்கள். அதன்பிறகு போராடி அதில் சேர்ந்ததுடன் அந்த ஆண்டின் சிறந்த என்சிசி மாணவனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். கல்லூரி படிக்கும்போது பளுதூக்குதல், கபாடி, ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் பல பரிசுகள் பெற்றுள்ளேன். அப்போது எனது இலட்சியமாக ராணுவமும், காவல்துறையும் இருந்தது. உயரம் காரணமாக அதில் சேரமுடியவில்லை” என்றபடி பெருமூச்சுவிடுகிறார்.

தொடர்ந்து பேசும் அவர் “ படித்து முடித்த பிறகு முதன்முறையாக ஊர்க்காவல்படையில் சேர்ந்து பணியாற்றினேன். அதன்பிறகுதான் சூழல்காரணமாக நம்மால் விளையாட்டுத்துறையில் பெரிய அளவில் சாதிக்கமுடியவில்லை, அதனால் நாமாவது வருங்காலத்தில் நூறுபேரையாவது விளையாட்டு வீரராக உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அப்போதுதான் பட்டியாலாவில் உள்ள விளையாட்டு கல்லூரியில் சேர்ந்து பளுதூக்குதல் பயிற்சி பெற்றேன். உடற்கல்வி பயிற்சி ஆசிரியர் பட்டமும் பெற்றேன். பிறகு அரசு உதவிபெறும் பள்ளியான புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா பள்ளியில் தற்காலிக பணியாக உடற்கல்வி ஆசிரியராக சேர்ந்தேன். அந்த ஆண்டு அப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது. அதனால் நான் மிகவும் முயற்சி செய்து, புதுக்கோட்டையை சுற்றியுள்ள ஊர்களுக்கு ஒவ்வொரு வீடாக சென்று எங்கள் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க சொன்னேன். அதனால் அந்த ஆண்டில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்தது. அதன்பின்னர் அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரானேன். அப்போதுமுதல் தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சியளித்துவருகிறேன்” என்றார்

image

முத்துராமலிங்கம் நான்கு ஆண்டுகள் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் விளையாட்டு பயிற்சியாளராக இருந்தார். அப்போதுதான் காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற அனுராதாவுக்கு பயிற்சியளித்து, அவரை தொடர்ந்து பல்கலைக்கழக, மாநில அளவிலான பதக்கங்களை வெறிபெறவைத்தார். அனுராதா சர்வதேச அளவில் பதக்கங்கள் வெல்வதைப்பார்த்து பல மாணவர்கள் இவரிடம் பயிற்சி பெற வந்தனர். இவரது மாணவி சினேகா பளுதூக்கும் போட்டிகளில் தேசிய அளவில் இதுவரை 8 பதக்கங்கள் வாங்கியுள்ளார். தீபா என்ற மாணவி தேசிய அளவில் கேல் இந்தியா போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். இவரது பள்ளி மாணவி பிரியா தேசிய அளவில் பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

இதுபற்றி பேசும் முத்துராமலிங்கம் “ நான் ராணுவபயிற்சி மற்றும் காவல்துறை பயிற்சியை நேரில் பார்த்துள்ளேன். அதனால் அதுபோன்ற பயிற்சிகளை நான் பள்ளி மாணவர்களுக்கே கொடுக்க ஆரம்பித்தேன். ராணுவத்தில் கொடுப்பதுபோன்ற கடுமையான பயிற்சிகளை வழங்குவதால் அவர்கள் காவல்துறைக்கான உடல்தகுதி தேர்வில் எளிதாக தேர்வாகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில்தான் அனைவருக்கும் பயிற்சியளிக்கிறேன். அதற்கு உறுதுணையாக இருக்கும் மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், கல்வி அலுவலர்கள் மற்றும் எனது பள்ளி நிர்வாகத்தினர் அனைவருக்கும் நன்றி. தேனி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கையான சம்யுக்தா என்பவர் காவல்துறையில் சேர விருப்பம் தெரிவித்தார். அதனால் திருநங்கைகளின் மாவட்ட தலைவியிடம் பேசி சம்யுக்தா உள்ளிட்ட 6 திருநங்கைகளுக்கு இந்த ஆண்டு பயிற்சி கொடுத்தேன். அதில் சம்யுக்தா மெரிட்டில் தேர்வாகியுள்ளார் என்பது கூடுதல் மகிழ்ச்சி” என்கிறார்  

இதுவரை இவரது மாணவிகள் 30 தேசிய பதக்கங்களையும், 100க்கும் மேற்பட்ட மாநில அளவிலான பதக்கங்களையும் வென்றுள்ளனர். இவரிடம் பயிற்சி பெற்ற மாணவ,மாணவிகள் ரயில்வே, வருமானவரித்துறை மற்றும் மாநில அரசுப்பணிகளில் 110க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இவரது சிறப்பான பணியை பாராட்டி தமிழக அரசு சார்பில் 2017ஆம் ஆண்டின் சிறந்த பயிற்சியாளர் என்ற விருதை தமிழக முதல்வரின் கைகளால் பெற்றார் முத்துராமலிங்கம். மேலும் பல தனியார் அமைப்புகளும் இவருக்கு எண்ணற்ற விருதுகளை வழங்கியுள்ளன. இவருக்கு அன்புக்கரசி என்ற மனைவியும், சுபதர்சிகா, ஹரிசி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

image

இந்த ஆண்டு காவல்துறைக்கு மெரிட்டில் தேர்வாகியுள்ள திருநங்கை சம்யுக்தா பேசும்போது “ சார்தான் எங்கள் திருநங்கைகள் மாவட்ட தலைவரிடம் பேசி எனக்கு பயிற்சிகொடுக்க அழைத்துவந்தார். அவர் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்ததால், அதுபோன்ற சூழலில் இருந்து வந்திருக்கும், என்போன்ற மாணவர்களின் சூழலை உணர்ந்து பயிற்சியளிப்பார். நான் பயிற்சிக்கு வர ஆரம்பித்தபோது மற்றவர்கள் நம்மை எப்படி பார்ப்பார்களோ என்ற பயம் இருந்தது. ஆனால் தொடக்கத்திலேயே அந்த பயத்தை நீக்கி அனைவரிடமும் சகஜமாக, நட்பாக பழக வைத்தார். அப்போதுமுதல் சிறப்பாக பயிற்சிபெற ஆரம்பித்தேன். எந்த கட்டணமும் இல்லாமல்தான் அவர் பயிற்சியளித்தார். ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு தேவையான பொருட்களை அவரது கைக்காசைப்போட்டு வாங்கித்தருவார். மழைபெய்தால் நாங்கள்கூட பயிற்சியை கட் அடிக்கலாம் என்று பார்ப்போம். ஆனால் அவர் வேறு ஏதாவது மாற்று இடம் ஏற்பாடு செய்து காலை,மாலை இருவேளையும் பயிற்சி கொடுப்பார். உடற்பயிற்சி மட்டுமின்றி சமூகத்தில் எப்படி பழகவேண்டும் என்று சொல்லித்தரும் மகத்தான ஆசான் அவர்” என்கிறார் பெருமிதத்துடன்

image

நிறைவாக பேசும் முத்துராமலிங்கம் “ வாழ்நாள் முழுதும் இன்னும் பல ஆயிரம் விளையாட்டு வீரர்களை உருவாக்கவேண்டும் என்பதே இலட்சியம். நான் மிகவும் வறுமைசூழ்ந்த குடும்பத்திலிருந்து வந்ததால் எனக்கு அதன் கொடுமை என்னவென்று தெரியும். எனவே வறுமையை ஒழிக்கவேண்டும் என்றால் அதற்கு கல்விதான் ஆயுதம். அதிலும் குறிப்பாக விளையாட்டும், கல்வியும் இருந்தால் நிச்சயம் மாணவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும்” என்கிறார் பேருவகையுடன்.

கொரோனா காலத்திலும் கூட ஓய்வில்லாமல் பல தன்னார்வலர்களிடம் உதவிகளைப்பெற்று, ஒருங்கிணைத்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்துவருகிறார் இவர். மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் கவனிப்பாரற்று கிடக்கும் குரங்குகள், கால்நடைகள், நாய்கள் ஆகிய விலங்குகளையும் மீட்டெடுக்கும் பணிகளையும் செய்துவருகிறார் இவர்.

-வீரமணி சுந்தரசோழன்

loading...

Advertisement

Advertisement

Advertisement