‘சர்வதேச கிரிக்கெட் களத்தில் பந்துவீசுவதற்கான தகுதி இந்த பையனிடம் இல்லை’ என சொல்லி 2008இல் ராஜஸ்தான் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அந்த இளைஞன் விளையாடுவதற்கான வாய்ப்பை தட்டிக்கழித்தார் அப்போதைய ராஜஸ்தான் கிரிக்கெட் அகடாமியின் இயக்குனர் கிரேக் சேப்பல்.
அவரது வார்த்தைகள் அந்த இளைஞனை மனதளவில் பாதித்துவிட கால நேரமெல்லாம் பார்க்காமல் கிரிக்கெட் களத்திலேயே தவமாய் கிடந்தது பந்துவீச்சாளருக்கு தேவையான சகல நுணுக்கங்களையும் கற்று சர்வதேச கிரிக்கெட் களத்தில் ஆகச்சிறந்த டி20 பவுலர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளான்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரதான பவுலர்களில் ஒருவரான தீபக் சாஹர் தான் அந்த இளைஞன். அவருக்கு இன்று பிறந்த நாள்.
ஆக்ராவில் 1992இல் இதே நாளில் பிறந்த தீபக் சாஹர் இந்தியாவிற்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் பந்துவீச வேண்டுமென விரும்பியுள்ளார். தனது விருப்பத்தை தன் அப்பா லோகேந்திர சிங்கிடம் அவர் சொல்லியுள்ளார். உடனடியாக மகன் கிரிக்கெட் பயிற்சி செய்ய டர்ப் மற்றும் கான்க்ரீட் தளங்களில் இரன்டு பிட்ச்களை அமைத்து கொடுத்து மகனின் கிரிக்கெட் ஆர்வத்திற்கு ஊக்கம் கொடுத்துள்ளார்.
‘அந்த பிட்சை அமைக்கும் போது தீபக்கிற்கு 12 வயதிருக்கும். கிரிக்கெட்டில் எனக்கு கொஞ்சம் ஞானம் இருந்ததால் எனது கண்காணிப்பின் கீழ் அந்த இரண்டு பிச்சிலும் பந்து வீசி பழகினான். பயிற்சி, ஒய்வு, ஜிம் என ஒருநாளில் உள்ள 24 மணி நேரம் அவனுக்கு போதவில்லை. அப்படி சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பந்துகளை வீசி தன்னை பவுலராக கட்டமைத்துக் கொண்டான் அவன்’ என்கிறார் சாஹரின் அப்பா.
வெஸ்ட் இண்டீசின் மால்கம் மார்ஷலும், தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெய்னும் தான் தீபக் சாஹரின் இன்ஸ்பிரேஷன்.
ஒருகட்டத்தில் சாஹரின் கிரிக்கெட் கனவிற்காக ஒட்டுமொத்த குடும்பமும் ஆக்ராவிலிருந்து தங்கள் பூர்வீகமான ராஜஸ்தானுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் அசத்தி வந்த சஹாருக்கு ராஜஸ்தான் மாநில அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு வந்துள்ளது. அந்த வாய்ப்பு கிடைத்த போது சாஹருக்கு பதினாறு வயதே நிரம்பியிருந்தது.
தேர்வு குழுவினர் முன்னர் அவர் பந்துவீசிய போது தான் கிரெக் சேப்பல் ‘ராஜஸ்தான் அணிக்காக விளையாடுவதற்கான தகுதி இவனிடம் இல்லை’ என சொல்லியுள்ளார்.
அதை கேட்டு பீனிக்ஸ் பறவையாக எழுந்த அவர் தீவிர பயிற்சிக்கு பின்னர் 2010-11 ரஞ்சி சீசனில் ராஜஸ்தான் அணிக்காக அறிமுக வீரராக களம் இறங்கினார். அந்த சீசனில் 40 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணிக்கு கோப்பையை வெல்ல உதவினார்.
2012 ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்டார் சாஹர். 2015 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய போதும் அதிகம் பந்து வீசுவதற்கான வாய்ப்பை பெறவில்லை.
பின்னர் தோனி தலைமையிலான ரைசிங் பூனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணிக்காக விளையாட சாஹர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்த மாற்றம் தான் அதுவரை மாற்று பவுலராக இருந்த சஹாரை சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் டி20 பவுலராக மாற்றியது.
தோனிக்கு தொடர்ந்து வலைப்பயிற்சியின் போது சாஹர் வீசிய பந்துகள் பெரிய ஷார்ட்டுகள் விளையாட முடியாமல் தோனியை திகைக்க செய்துள்ளது. அதன் காரணமாக அதே ஆண்டில் இரண்டு போட்டிகளில் புனே அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். 2017இல் புனேவுக்காக மூன்று போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது.
2018இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடைகாலம் முடிந்து ஐ.பி.எல் தொடருக்குள் ரீ-என்ட்ரி கொடுத்த போது புதுமுகமாக சாஹரும் அணிக்குள் நுழைந்திருந்தார். 2018 ஐ.பி.எல் சீசனில் சென்னை அணிக்காக விளையாட தேர்வாகியிருத்த வீரர்கள் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் சாஹர் பன்னிரண்டு போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி பத்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
அதன் விளைவாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியில் டி20 போட்டியில் விளையாட சஹார் தேர்வு செய்யப்பட்டார். வேகப்பந்து வீச்சின் சொர்க்கபுரியான இங்கிலாந்து ஆடுகளத்தில் முதல் போட்டியிலேயே இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மென் ஜேசன் ராயை வீழ்த்தியிருந்தார். கடந்த 2019 ஐ.பி.எல் சீசனில் சென்னை அணிக்காக விளையாடி பதினேழு போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த சீசனில் 190 டாட் பால்களை அவர் வீசியிருந்தார்.
‘தீபக் சாஹரை ஸ்பெஷலிஸ்ட் டி20 பவுலராக மாற்றியதே தோனி தான்’ என்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா.
டி20 கிரிக்கெட்டில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஏழு ரன்கள் மட்டுமே கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய சிறந்த பவுலரும் சாஹர் தான்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு