[X] Close >

வீடியோகால் பண்ணுமா..டாக்டர் முகத்த பாத்து பேசணும்... - மருத்துவரின் நெகிழ்ச்சிப் பகிர்வு!

Sharing-the-experience-of-the-doctor-who-saved-the-corona-patient-who-was-in-a-life-threatening-condition-
காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான 54 வயதான ஆண் ஒருவரை காப்பற்றியது குறித்து மருத்துவர் அரவிந்தராஜ் என்பவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
‘’கொரோனா காலத்திற்கு பின்பான வாழ்க்கை என்பது எல்லோருக்கும் மாறிவிட்டது. பொருளாதார, மன, உடல் ரீதியான பிரச்சனைகள் சூழ்ந்து மக்களை ஆட்கொள்கின்றன.
 
மருத்துவத்துறை எப்போதும் இல்லாத அளவு கடும் பணிச்சுமை, நெருக்கடியை சந்தித்துள்ளது. நான் கடைசியாக சனி, ஞாயிறுகளில் விடுமுறை எடுத்து 6 மாதங்கள் ஆகிறது. தினசரி 14 மணி நேரம் மருத்துவமனையில் பணிபுரியும் சூழ்நிலை.
 
பல அரசு மருத்துவர்கள் 24 மணி நேரமும் உணவு, குடும்பம் ஆகியவற்றை மறந்து கடும் பணியில் உள்ளனர்.
 
imageசரியான நேரத்திற்கு குடும்பத்தோடு அமர்ந்து நான் உண்டு நிறைய நாள் ஆகிறது. அம்மா தினமும் கடிந்து கொள்வார்; காரணம், அசதி. கொஞ்ச நேரம் எல்லாவற்றையும் மறந்து பேஸ்புக்கில் இளைப்பாறி விட்டு, தூங்கியெழுந்து கிடைப்பதை உண்டுவிட்டு அவசரமாக பணிக்கு கிளம்பி விடுவேன்.
தினசரி மூச்சு வாங்கல், அதீத ஜீரம் போன்ற எமர்ஜென்சிகளுடன் போராட்டுக் கொண்டிருக்கிறேன்.
 
பல கொரோனா பாசிட்டிவ் பேஷண்ட்டுகளை நலமாக்கி வீடு திரும்பிய பின்னர் வரும் புன்னகை தான் இந்த அனைத்து வலியையும் ஆற்றிடும் எனக்கான மருந்து.
 
அப்படியான ஒருவர் தான் இவர்.
 
பத்து நாளைக்கு முன்பு அதீத ஜீரம் என்பதால் கொரோனா பரிசோதனை கொடுத்து விட்டு, மூச்சு விட சிரமம் ஏற்படவே ஹாஸ்பிடல் வந்தார். வருகையில் 103 டிகிரி ஜுரம்; ஆக்சிஜன் அளவு 84; சுகர் தாறுமாறாக ஏறியிருந்தது.
 
ஆக்சிஜன் கொடுத்து, வேண்டிய முதலுதவியை செய்தேன். அவசரமாக CT ஸ்கேன் செய்கையில், இருப்பது கொரோனா தொற்று என உறுதியானது.
வெண்டிலேட்டரில் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் வெண்டிலேட்டர் ஏற்கனவே நோயாளிக்கு பொருத்தியிருப்பதால், வேறு மருத்துவமனைக்கு அனுப்ப வழிகளை மேற்கொண்டேன்.
 
ஆக்சிஜன் கொடுத்து 84 இருந்த அளவை 98 கொண்டு வந்தேன்; சுகரை சரி செய்தேன்; கொரோனாவால் ஏற்படும் இன்ன பிற உபாதைகள் ஏற்படாத வண்ணம் முதலுதவி மருந்துகளை அளித்தேன். ஆம்புலன்சில் அவரை வேறு மருத்துவமனைக்கு பத்திரமாக அனுப்பி வைத்தேன். அங்குள்ள மருத்துவருடன் கலந்துரையாடி நிலைமையை எடுத்துக்கூறி அவருக்கு உரிய சிகிச்சை கிடைக்க வழிவகை செய்தேன்.
 
image
தமிழக மருத்துவத்துறை என்னும் பெரிய சமுத்திரத்தின் ஒரு சிறிய மீன் நான். பெரிய திமிங்கலங்களும் சுறாக்களும் தினசரி எண்ணற்ற கொரோனா பாதித்த நோயாளிகளை காப்பாற்றிய வண்ணம் உள்ளனர். பலருக்கு அதை பற்றி எழுத நேரமில்லை. அவர்கள் சார்பாக நான் எழுதுகிறேன்.
 
இது ஒரு ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி. மருத்துவமனை துப்புரவு பணியாளர், செவிலியர், மருந்தர், மருத்துவர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகிய அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சி தான் ஒரு நோயாளியை சரிசெய்யும்.
 
இவர் இன்று ICU-வில் இருந்து இன்று சாதாரண உள்நோயாளிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டு ஆக்சிஜன் துணை இன்றி நலமாக உள்ளார்.
 
அவர் தன் மனைவியிடம் சொன்ன வார்த்தை 'அரவிந்த் டாக்டர் கிட்ட வீடியோ போன் பண்ணி குடு மா'... அவர் முகத்த பாத்து பேசணும்' என்று போன் வந்தது. 'சார், நல்லா ஆயிட்டேன் சார். நன்றி தவிர எதுவும் சொல்ல தெரில சார். மூச்சு லாம் வாங்கல சார்.. ஜுரம் சுத்தமா இல்ல' என முகமெல்லாம் சிரிப்புடன் பேசினார்.
 
கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் பயமோ, தற்கொலை முடிவோ எடுக்க வேண்டாம். உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close