“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குடியுரிமை பணித்தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள மதுரையை சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Advertisement

நாட்டின் உயரிய பணியாகக் கருதப்படும் இந்திய ஆட்சிப் பணித் தேர்வான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 829 பேர் தேர்ச்சிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

image
மதுரை சிம்மக்கல் மணி நகரம் பகுதியை சேர்ந்த முருகேசன் - ஆவுடைதேவி தம்பதியினரின் மகள் பூரண சுந்தரி. 5 வயதில் பார்வை நரம்பு சுருங்கியதால் பார்வையை இழந்த பூரண சுந்தரி தன்னம்பிக்கையை சற்றும் இழக்காமல் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவியாக தேர்ச்சி பெறுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். 10ம் வகுப்பில் 471 மதிப்பெண்ணும் 12ம் வகுப்பில் 1092 மதிப்பெண்ணும் பெற்றும் சாதனை படைத்துள்ள இவர் ஆங்கில இளங்கலை இலக்கியம் பயின்றுள்ளார்.


Advertisement

தந்தை மார்க்கெட்டிங் பணி செய்து பல்வேறு பொருளாதார நெருக்கடியில் தன்னை படிக்க வைத்த வறுமையை எண்ணி தான் நன்றாக படித்து நல்ல அரசு வேலையை பெறவேண்டும் என்ற லட்சியத்துடன் கடந்த 2016 முதல் குரூப் தேர்வு, வங்கி போட்டி தேர்வு, குடியுரிமை பணி தேர்வு என 20 க்கும் மேற்பட்ட போட்டி தேர்வுகளை எழுதியுள்ளார். தான் எழுதிய பல தேர்வுகளில் தோல்வியை தழுவினாலும் தன்னால் வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையை மட்டும் கைவிடாமல் 4-வது முறையாக கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற குடியுரிமை பணிக்கான சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, இன்று வெளிவந்த தேர்வு முடிவில் 296 இடத்தில் வெற்றியும் பெற்றுள்ளார்.

முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற வங்கி தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்து வரும் நிலையில் தற்போது பெற்றுள்ள வெற்றி மாணவி பூர்ண சுந்தரிக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது.

image
தான் ஒரு பார்வை மாற்றுத் திறனாளியாக இந்த வெற்றி இலக்கை அடைய எண்ணற்ற சவால்களை சந்தித்தாக கூறும் பூர்ண சுந்தரி, தன் வெற்றிக்குப் பின்னால் தனது பெற்றோர் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் உறுதுனையாக இருந்து ஊக்கமளித்ததால் மட்டுமே தன்னால் வெற்றி பெற முடிந்தது என்றார்.


Advertisement

போட்டி தேர்விற்காக தான் தனியாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி பயின்ற போது அங்குள்ள நண்பர்கள் கொடுத்த உற்சாகமும் சிலர் செய்த பொருளாதார உதவியும் மறக்க முடியாத ஒன்றாக தன்னுள் உள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறும் பூர்ண சுந்தரி சிறு வயது முதல் தனது அம்மா சொல்லி தரும் பாடங்களை கற்று வந்த தமக்கு போட்டி தேர்வுகளிலும் தனது அம்மா கற்றுக் கொடுத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் தனது தாய் ஆசிரியராக இருந்து தமக்கு உறுதுணையாக இருந்ததாகவும் கூறுகிறார்.

குடியுரிமை ஆட்சிப்பணியில் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி எத்தனை தடைகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவும் பாலமாக இருந்து ஏழை எளிய மக்களுக்கு உதவ உள்ளதாக நெகிழ்ச்சியுடன் அவர் கூறுகிறார். மேலும் தன்னை போன்ற பார்வை மாற்றுத்திறனாளிகள் தாங்கள் எடுக்கும் முயற்சியை எந்த நிலையிலும் கைவிடாமல் விடாமுயற்சியோடு தொடர்ந்தால் நிச்சயம் முயற்சி கை கொடுக்கும் என்ற நம்பிக்கை விதையை விதைக்கிறார் பூர்ண சுந்தரி...

loading...

Advertisement

Advertisement

Advertisement