புதிய கல்விக்கொள்கையில் மாநிலத்தின் உரிமைகளை பறிக்க பழனிசாமி அரசு அனுமதிக்ககூடாது: தினகரன்

dhinakaran-says-palaniswamy-goverment-don-t-allow-state-rights-in-new-education-policy

மும்மொழிக்கொள்கையை எதிர்த்தது போன்றே புதிய கல்விக்கொள்கையில் மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் அம்சங்களையும் பழனிசாமி அரசு அனுமதிக்கக்கூடாது. பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருதத்தை வலிந்து நடைமுறைக்கு கொண்டுவராமல் தாய்மொழியை உயர்த்திபிடிக்கவேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Advertisement

image

இந்த அறிக்கையில் “கொரோனா வீரியம் குறையாமல் ஊரடங்கு தொடரும் நிலையில் அவசரமாக புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது ஏற்புடையதல்ல. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி. குறைகளை சரிசெய்தபின்பே செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். 5ஆம் வகுப்புவரை தாய்மொழிக்கல்வி என்பதை 8ஆம் வகுப்பு வரை என்று அறிவிக்கவேண்டும். தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையே ஏற்றதாக இருக்கும். அதனால் மூன்றாவது மொழி என்பது விருப்ப மொழியாக மட்டுமே இருக்க வேண்டும். அந்த மூன்றாவது மொழியாக இந்தி அல்லது சமஸ்கிருதத்தை கட்டாயப்படுத்தமாட்டோம் என்று மத்திய அரவு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.


Advertisement

நம் தாய்மொழியை அழித்துவிட்டு எந்த மொழியை உயர்த்தி பிடித்தாலும் அதனை ஏற்க முடியாது. எனவே பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிருதத்தை வலிந்து நடைமுறைக்கு கொண்டுவராமல் தாய்மொழியை உயர்த்திப் பிடிக்கவேண்டும். 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது மாணவர்களை நிச்சயமாக வதைக்கும் செயல்தான். பொதுவான படிப்போடு கூடுதல் அறிவாக தொழில் படிப்பு சேரவேண்டுமே தவிர, பட்டப்படிப்பை முடிக்காமல் மாணவர்களை ஏதேனும் ஒரு தொழிலை நோக்கி தள்ளிவிடுவது குலக்கல்வியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

நாடு முழுமைக்கும் என்சிஇஆர்டி பாடத்திட்டங்களை உருவாக்கும் என்பது ஏற்புடையதல்ல, அந்த மாநிலங்களின் தேவைக்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்குவதே சரியாக இருக்கும். மேலும் உயர்படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு என்பது நீட் தேர்வுபோல பெரும் பாதிப்பை உருவாக்கும். தேசிய அளவிலான ஆசிரியர் தேர்வு முறையும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. முக்கியமாக பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மறைமுகமாக மத்திய பட்டியலுக்கு கொண்டுசெல்லும் விதமாக தேசிய கல்வி ஆணையம், தேசிய ஆய்வு அமைப்பு போன்ற அமைப்புகளை புதிய கல்விக்கொள்கை முன்மொழிந்துள்ளது. பாடத்திட்டம், பயிற்றுவிக்கும் முறை, தேர்வுகள் போன்ற அனைத்தையும் மத்திய அரசு தன் கைகளில் வைத்துக்கொண்டு, இவற்றுக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கும் வேலையை மட்டும் மாநில அரசுகளிடம் தள்ளிவிடுவது எப்படி சரியாக இருக்கும். இந்த ஏற்பாடு கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிரானது. எனவே தமிழகத்திற்கு தேவையான மாற்றங்களுடன் தனித்த கல்விக்கொள்கையைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்” என்று கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement