தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் : வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் : வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் : வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும். நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடனும் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடனும் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்க, வடக்கு அந்தமான் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் கடலோரப் பகுதிகள், கடலோர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு, தென்மேற்கு, மத்திய கிழக்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள், குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் தேவாவின் 15 சென்டி மீட்டர் மழையும், அவலாஞ்சியில் 10 சென்டி மீட்டர் மழையும், கூடலூரில் 9 சென்டிமீட்டர் மழையும், பந்தலூரில் 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.” எனத் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com