[X] Close

ஆன்லைன் கல்விக்கு மாற்று: கிராமங்களில் உருவாகும் நுண் வகுப்பறைகள்

Subscribe
Micro-classes-started-in-Dindivanam-Thai-Tamil-school-bY-prof--Kalyani--iinstead-of-online-classes

 


Advertisement

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலால் பள்ளிகள் திறக்கமுடியாத நிலை உருவாகியுள்ளது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கி மாதத் தேர்வுகள் வரை சென்றுவிட்டன. ஆனால் அந்த வகுப்புகளால் பாகுபாடுகள் உருவாகும் என்பதால் எதிர்ப்புகளும் உண்டு. ஆன்லைன்வழி கல்வியை முழுமையாகச் செயல்படுத்தமுடியாத கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு என்ன செய்யமுடியும். அதற்கான ஒரு மாற்றுவழிதான் நுண் வகுப்பறைகள்.

image


Advertisement

ஏன் அவசியம்

ஏற்கெனவே மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக கல்வியோடு தொடர்பு இல்லாமல் பள்ளி மாணவர்கள் வீடுகளில் இருந்துவருகிறார்கள். அவர்களுக்கு பள்ளியுடன் பாடங்களுடன் மீண்டும் ஒரு தொடர்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டவையே நுண் வகுப்பறைகள். பள்ளிகளைத் திறக்கமுடியாது. கிராமங்களில் ஆன்லைன் வகுப்பறைகளுக்கு சாத்தியமில்லை. நகரங்களிலும்கூட ஆன்லைன் வகுப்புகளில் சிக்கல்கள் உள்ளன. குழந்தைகள் ஓர் இடத்தில் கூடுவதில் சிரமம் உள்ளது. எனவே புதிய கல்விச்சூழலை கிராமப்புற மாணவர்களுக்கு உருவாக்கவேண்டிய கட்டாயம் நேர்ந்துள்ளது.

அதாவது பள்ளிகளில் வகுப்பறைகள் செயல்படமுடியாதபோது அந்த வகுப்பறைகளை வீதிக்குக் கொண்டுவருவோம். தெருவில் உள்ள வீடுகளுக்குக் கொண்டுவருவோம். அவையே நுண் வகுப்பறைகள் என்று விளக்கம் தருகிறது அவை பற்றி வெளியிடப்பட்டுள்ள சிறு பிரசுரம். ஒரு வகுப்புக்கு ஐந்து குழந்தைகளையும் ஒரு தன்னார்வலரையும் உள்ளடக்கியதாக நுண் வகுப்பறைகள் கட்டமைக்கப்படுகின்றன.  


Advertisement

image

திண்டிவனம் நுண் வகுப்பறைகள்

பள்ளிக்கல்வியில் புதுமைகளைப் படைப்பதில் ஆர்வம்கொண்ட கல்வியாளர்கள் விழியன் மற்றும் செந்தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் நுண் வகுப்பறைகள் பற்றிய விழிப்புணர்வின் மூலம் ஒரு தொடக்கத்தை தமிழகத்தில் உருவாக்கியுள்ளனர். அதனால் உந்துதல் பெற்று திண்டிவனம் ரோசணையில் உள்ள தாய்த்தமிழ்ப் பள்ளியில் நுண் வகுப்பறைகளைத் தொடங்கியுள்ளார் இருளர்களின் வாழ்வில் கல்வி விளக்கேற்றும் பேராசிரியர் கல்யாணி.

“வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கம் நடத்திய ஒரு கருத்தரங்கில் விழியன் பேசினார். கிராமப்புறங்களில் தொடர்ந்து பள்ளிகள் நடத்தப்படாமல் இருந்தால் கல்வியின் தொடர்பறுந்து டிராப்அவுட் அதிகமாகிவிடும், எனவே மைக்ரோ கிளாசஸ் எனப்படும் நுண்  வகுப்பறைகளை கிராமங்களில் உருவாக்கவேண்டும் என்று கருத்தை அவர் சொல்லக்கேட்டேன். எனக்கும் மிகவும் பிடித்துப்போய்விட்டது. இத்தனை நாள் இப்படியொரு எண்ணம் எனக்குத் தோன்றவில்லையே என நினைத்தேன். உடனே அவரிடம் பேசி எங்கள் பள்ளி மாணவர்களுக்கு நுண் வகுப்பறைகளைத் தொடங்கிவிட்டேன்” என்று உற்சாகத்துடன் பேசுகிறார் கல்யாணி.

image

கல்வியும் உணவும்

திண்டிவனம் தாய்த்தமிழ்ப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசினார். பிறகு பள்ளி ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார். தற்போது மாணவர்களின் வீடுகள்,  பொது இடங்கள் என  பதினோரு இடங்களில் நுண் வகுப்பறைகள் செயல்பட்டுவருகின்றன. காலையும் மதியமும் வகுப்புகள் நடைபெறுகின்றன. மதிய உணவு, பள்ளியில் சமைக்கப்பட்டு அந்தந்த மையங்களுக்கு ஆட்டோக்களில் எடுத்துச்செல்லப்படுகின்றன. காலையில் வருவோர் சாப்பிட்டு வீட்டுக்குச் செல்லலாம். மதியம் வருவோர் சாப்பிட்ட பின்னர் வகுப்புகளில் பங்கேற்கலாம் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் உரிமை

மீண்டும் பேசத் தொடங்கினார் கல்யாணி, “தி இந்து பத்திரிகையில் மதிய உணவு என்பது மாணவர்களின் அடிப்படை உரிமை என்று எழுதினார்கள். அதைத்தொடர்ந்து ரவிக்குமார் எம்பியும் டிவி விவாதங்களில் மதிய உணவு பற்றிப் பேசினார். இன்று தமிழக அரசு மாணவர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பை வழங்குகிறது, நல்ல மாற்றம். நானும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி நுண் வகுப்பறைகளுடன் மதிய உணவையும் இணைத்தேன். அதை எப்படி அமல்படுத்துவது என்பதற்காக ஒரு சர்வே எடுத்தோம். எத்தனை பிள்ளைகள் வகுப்புகளுக்கு வருவார்கள் என கணக்கிட்டோம்” என்கிறார்.

image

காலையில் எட்டு பிள்ளைகள், மாலையில் எட்டு பிள்ளைகள். ஒரு நுண் வகுப்பறையில் 16 பிள்ளைகள் படித்துவருகிறார்கள். முதல் வாரத்தில் 130 மாணவர்கள் வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 153 ஆக உயர்ந்திருக்கிறது. ஆர்வத்துடன் குழந்தைகள் நுண் வகுப்பறைகளில்  பங்கேற்கிறார்கள். ஒரு மையத்தில் ஒரு பெற்றோர் தன்னார்வலராகச் செயல்படுகிறார். ஒரு நுண் வகுப்பறைக்கு ஐந்து பிள்ளைகள் என்ற அளவீட்டை மாணவர்களின் எண்ணிக்கை காரணமாக எட்டாக மாற்றிக்கொண்டார் கல்யாணி.  

image

முதல்வருக்குக் கடிதம்

நுண் வகுப்பறைகளில் பாடல்கள், பாடங்களை நடத்தியவர்கள் சில நாட்களில்  புதிய புத்தகங்களை அறிமுகம் செய்யவுள்ளார்கள். மழலைப் பிள்ளைகளுக்கு மட்டும் முட்டைகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு கபசுரகுடிநீர், நிலவேம்பு கசாயமும் கொடுக்கிறார்கள். கிராமப்புறங்களில் நுண் வகுப்பறைகளின் அவசியம் மற்றும் நடத்துவதற்கான அனுமதி கேட்டு பேராசிரியர் கல்யாணி, தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

image

தமிழகத்தில் நுண் வகுப்பறைகள்

“முதல்வரிடம் இருந்து பதில் வரவில்லை. பரவாயில்லை. நகராட்சி ஆணையரை நேரில் பார்த்து நுண் வகுப்பறைகள் பற்றி எடுத்துரைத்தோம். எங்களுடைய நோக்கத்தைப் புரிந்துகொண்டு பாராட்டியதுடன் எல்லா உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்தார். கல்வி அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கிவருகிறார்கள். கொரோனா காலத்தில் கல்வி தொடர்பில்லாமல் வீட்டில் இருக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு எங்களைப் போலவே நுண் வகுப்பறைகளை தமிழகம் முழுவதும் தொடங்கவேண்டும். அதற்கு அரசு முழு ஒத்துழைப்பை வழங்கவேண்டும்” என்று வேண்டுகோள் வைக்கிறார் பேராசிரியர் கல்யாணி.

 

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close