[X] Close

தமிழர் என்பதால் ரகுமான் புறக்கணிக்கப்படுகிறாரா?: கேள்வி எழுப்பும் இயக்குநர் அம்ஷன்குமார்

Subscribe
A-whole-gang-working-against-Rahman--not-only-because-he-is-Tamilian-says-Director-Amshan-kumar

பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு கூட்டம் வேலை செய்கிறது என்ற நேரடியான ஏ.ஆர். ரகுமானின் விமர்சனம் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. திரைப்பட ஆய்வாளர்களும் விமர்சகர்களும் சமூக வலைதளங்களில் பல கோணங்களில் விவாதித்து வருகிறார்கள். இதுபற்றி திரைப்பட இயக்குநர் அம்ஷன்குமார், தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கிறார். தமிழர் என்பதால் ரகுமான் புறக்கணிக்கப்படவில்லை என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார்.image


Advertisement

ஏ.ஆர்.ரகுமான் ஒரு தமிழர் என்கிற ஒரு காரணத்தினாலேயே பாலிவுட்டில் ஒதுக்கப்படுகிறார் என்று கொள்ளமுடியாது. அவ்வாறுதான் என்றால், அவரை அவர்கள்  இவ்வளவு தூரம் வளரவிட்டிருக்கமாட்டார்கள். அவரை பாலிவுட்டிற்கு அறிமுகம் செய்தது ரோஜா. பாலிவுட்டில் தயாரான ரங்கீலா படம்தான் ஆல் இந்தியா கமர்ஷியல் இசையமைப்பாளராக்கியது.

பாலிவுட் இயக்குநர் சேகர்கபூர், ஆண்ட்ரு லாய்ட் வெப்பருக்கு ரகுமானை அறிமுகப்படுத்தினார். அது அவர் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினைத் தந்து, ஆஸ்கர் விருதுகளைப் பெறவைத்தது. பாலிவுட்டின் பெரிய இயக்குநர்களின் படங்கள் பலவற்றிலும் அவர் பணிபுரிந்துள்ளார். எனவே அவர் தமிழர் என்பதால் ஒதுக்கப்படுகிறார் என்பது  ஒரு  கோணம். அவ்வளவுதான். 


Advertisement

image

தமிழில் பெரிய மார்க்கெட் இசையமைப்பாளர்கள் எப்போதும் குறைவு. இளையராஜாவுக்கு முன் விஸ்வநாதன் – ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகிய இருவரே மார்க்கெட்டை தங்கள் வசம் வைத்திருந்தார்கள். பாலிவுட்டில் சி.ராமசந்திரா, நௌஷத், மதன்மோகன், சங்கர் ஜெய்கிஷன், லக்ஷ்மிகாந்த் பியாரிலால், கல்யாண்ஜி ஆனந்த்ஜி, ஓ.பி. நய்யார் போன்ற பலர் ஒரே சமயத்தில் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

எல்லோருமே ஹிட் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். எல்க்ட்ரானிக் இசை, சூஃபி இசை, இந்துஸ்தானி இசைக்கலவை மற்றும் அவர் வயது ஆகியன இந்தியில் சென்னை மொசார்ட்டுக்குப் பெரிய வரவேற்பைக் கொடுத்தது. பாலிவுட் மாற்றத்தை விரும்பியது. தமிழிலும்  இளையராஜாவுக்கு மாற்று தேவைப்பட்ட து. அவரால் தரமுடியாத ஒலிப்பதிவினை  ரகுமானிடம்  ரசிகர்கள் கண்டனர்.


Advertisement

image

ஆனால், ராஜாவின் மேதமையுடன் கூடிய அசுரவேகம் இந்தியாவில் வேறு எந்த இசை அமைப்பாளருக்கும் வாய்த்ததில்லை என்பது வேறு விஷயம். ரகுமான் பாலிவுட் இசை அமைப்பளர்களை விடவும் தாமதம் செய்வார். இப்போது மாறியிருக்கலாம். அன்று இந்தி இயக்குநர்கள் சென்னையில் வந்து தங்கி ரகுமானுக்குப் பிடித்த இரவு நேரங்களில் அவருடனிருந்து இசையைப் பெற்றுச் செல்வார்கள். ஏன் ரகுமான்மீது அவ்வளவு கரிசனம்?. அவர் மக்கள் விரும்பிய புதிய இசையைக் கொடுத்தார். கூடவே கேசட் விற்பனையில் ரகுமான் கோலோச்சினார்.

சினிமாக்கார்கள் இளிச்சவாயர்கள் இல்லை. கதையில்தான் சென்டிமெண்ட் பார்ப்பார்கள். வியாபாரத்தில் இல்லை. வாத்து பொன்முட்டை இடும்வரை எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்வார்கள். சாதி, மதம், மொழி, நாடு எதுவும் பொருட்டல்ல அவர்களுக்கு.

ஆனால், இசையை எவர் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்துகொள்ளலாம் என்கிற நிலைமை வந்த பிறகு சினிமா பாட்டு மார்க்கெட் ஒரேடியாக விழுந்தது. பிராண்ட் இசையமைப்பாளர்களின் தேவை குறைந்தது. மக்களுக்குப் பிடித்த இசையைத் தரும் இசையமைப்பாளர்களுக்கும் பாலிவுட்டில் குறைவில்லை. மும்பையிலேயே இருக்கும் இசையமைப்பாளரை விட்டு தமிழ்நாட்டுக்கு வருவானேன்!

image

இங்கும் இளையராஜாவோ, ரகுமானோ இசை அமைத்தால்தான் படம் ஓடும் என்றெல்லாம்  யாரும் எண்ணுவதில்லை. தமிழில் இன்று பல திறமையான இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். டிஜிட்டல் தொழில்நுட்பம் தெரிந்தவர்களாகவும் உள்ளனர். ஆனால் ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த பின்னரும் ராஜா புதியவர்களுக்கு  இசையமைக்கிறார்.

மணிரத்னம், ஷங்கர், ரவிகுமார், கௌதம்மேனன், முருகதாஸ், அட்லி இவர்களுடன்தான் இணைகிறார் ரகுமான். இந்தியிலும் அவரது தேர்வு அவ்வாறாக இருந்திருக்கும்பட்சத்தில் அங்குள்ள புதியவர்களின் தேர்வும் வேறாகத்தான் இருக்கும்.

தவிரவும் ஒரே சமயத்தில் தமிழ், இந்தி  என்று இரண்டு குதிரைகள்மீதும் நெடுங்காலம் சவாரிசெய்வதும் சாத்தியமில்லைதானே. தனக்கு எதிராக  ஒரு  கூட்டம் வேலைசெய்கிறது என்று ரகுமான் சொன்னதை தமிழனுக்கு எதிராக  அந்தக் கூட்டம் வேலைசெய்கிறது என்று ஏன் கொள்ள வேண்டும்? ” என்று கேட்கிறார் அம்ஷன்குமார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close