[X] Close >

“தென்னிந்தியர்களுக்கு எதிராக பாலிவுட் அரசியல் இருக்கிறது”-விவரிக்கும் திரைப்பட ஆய்வாளர்..!

Bollywood-polictics-against-AR-Rahman--Cinema-critic-Subagunarajan-talks-on-conspiracy

எப்போதும் வாய் திறக்காத இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், பாலிவுட்டில் நுழைய முடியாத அளவுக்கு தனக்கு எதிராக ஒரு கூட்டம் செயல்படுவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். அந்த ஒரு சொல் போதும். பெருங்காட்டையே அசைக்கும் தீப்பொறியாக இந்திய சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  


Advertisement

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பின்னர் ஒருவர் பின் ஒருவராக  தாமாக முன்வந்து தாங்கள் பாலிவுட் படவுலகில் பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில் ரகுமான், தனக்கு படங்களில் வாய்ப்பு மறுக்கப்படுவதன் பின்னணியை வெளிப்படுத்தியுள்ளார்.

image


Advertisement

“சமீபகாலமாக எனக்கு பெரிய அளவில் ஹிந்திப் படங்கள் வரவில்லை. இதுபற்றி நான் யோசித்துக் கொண்டிருந்தேன். இயக்குநர் முகேஷ் சாப்ரா கூறிய பிறகுதான் எனக்குப் புரிந்தது. என்னிடம் போகாதீர்கள் என்று அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் ஏன் மிகக் குறைவாக படங்களைச் செய்கிறேன் என்பதையும், ஏன் சிறந்த படங்கள் என்னை நோக்கி வரவில்லை என்பதையும் புரிந்துகொண்டேன். எனக்கு எதிராக ஒரு கூட்டமே அங்கு செயல்பட்டு வருகிறது. தாங்கள் செய்வது தவறு என்று அவர்களுக்குத்  தெரியவில்லை” என்று பண்பலை வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.  

எனக்கு விதியின் மேல் நம்பிக்கை இருக்கிறது. எல்லாமும் கடவுளிடம் இருந்துதான் வருகிறது. எனக்கான படங்கள் என்னிடம் வரும். மிக அழகான படங்களை உருவாக்குங்கள். நான் உங்களை வரவேற்கிறேன் என்றும் ரகுமான் பேசியுள்ளார்.

image


Advertisement

ஏஆர் ரகுமானின் பாலிவுட் பற்றிய விமர்சனம் பற்றி திரைப்பட ஆய்வாளர் சுபகுணராஜனிடம் பேசினோம்.

“மும்பையில் தென்னிந்திய நடிகர்களுக்கு இடமே கிடையாது. நம்முடைய நடிகர்களின் அழுத்தமான தோற்றம் வட இந்தியர்களுக்குப் பிடிக்காது. அவர்களுடைய  மனம் அப்படித்தான் இருக்கிறது. என்னைக் கேட்டால் பாலிவுட் சினிமாவுக்கு ஒரு கேரக்டர் கிடையாது என்று சொல்வேன். இந்திய சினிமாவிலும் அதை சேர்க்க முடியாது. பாலிவுட் சினிமா என்பது ஒரு கலவை.

உருது, இந்தி பாரம்பரியத்தில் ஒரு கலப்பாக அது வருகிறது. இந்தி எந்த வட்டாரத்துக்குச் சொந்தமானது என லொகேட் செய்யமுடியவில்லை. ஒரிசா சார்ந்த இந்திப் படம் என்பது பாலிவுட் சினிமா கிடையாது. அது ஒரிய படமாகவே பார்க்கப்படும். பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களை உள்ளடக்கியதாக அந்த சினிமா உலகம் செயல்படுகிறது. மும்பையில் வட்டார சினிமாவும் இருக்கிறது.

image

தென்னிந்திய நடிகர்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. வைஜெயந்தி மாலா, ஹேம மாலினி, ஸ்ரீதேவி போன்ற சில நடிகைகள் மட்டும் அங்கே வெற்றிக் கண்டுள்ளார்கள். அங்கே சென்றதும் தங்கள் அடையாளத்தை  முற்றிலுமாக மாற்றிக்கொண்டார்கள். தமிழ்நாட்டையே மறந்துபோகிற அளவுக்கு மாறினார்கள். பாலிவுட் பண்பாட்டுடன் ஒன்றாகக் கலந்துவிட்டார்கள். அதனால் தமிழகத்தில் இருந்து சென்ற நடிகைகள் மட்டும் நிலைத்து நின்றார்கள். நடிகைகளின் நிறமும் ஒரு தடையாக இல்லை.  

கமலும் ரஜினியும்கூட போய்விட்டுத் திரும்பினார்கள். நாம் ஏஆர் ரகுமானுக்கு வருவோம். இந்த விஷயத்தில் இந்து என்ற அடையாளத்தை முன்னிறுத்திப் பேசமுடியாது. மும்பையில் முன்னணி நாயகர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள்தான். அங்கே ஏன் ரகுமானை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

ரகுமான் எப்போதும் தன்னை மாநில எல்லைக்குள் வைத்துக்கொள்பவர் அல்ல. அவர் சர்வதேச அளவில் செயல்படுகிறார். இளையாராஜாவுடன் கூடவே தமிழ் மண்ணின் அடையாளம் இருந்தது. பாலிவுட் படவுலகை அவரும் பெரிதாக விரும்பவில்லை. ஒருசில படங்கள் செய்திருக்கிறார். ரகுமானைப் பொறுத்தவரையில் அவருடைய அடையாளம் என்பது காஸ்மோபாலிட்டன்.

image

பாலிவுட்டில் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்த பிறகும் ஏன் அவர் அங்கே தடுக்கப்படுகிறார் என்பது பெருங்கேள்வியாக இருக்கிறது. தலைநகரமே மும்பை என்கிற அளவுக்கு பாலிவுட் படவுலகம் தன்முனைப்புடன் இயங்கிவருகிறது.  பாலிவுட்காரர்களின் அணுகுமுறையைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ரகுமானின் இசை சூஃபி பாரம்பரியத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. அதில் அவர் புதுமைகளைப் படைப்பவராகவும் திறமையான கலைஞராகவும்  இருந்து வருகிறார். மேற்கத்திய இசையின் தாக்கமும் அவரிடம் உள்ளது. ஃபாப்மார்லியின் ரெஹே போன்ற இசைவடிவங்களையும் நேசிப்பவராக இருக்கிறார். சூஃபி பாரம்பரியத்தை அவர் நிலைநிறுத்துவது யாருக்காவது பிடிக்காமல் இருக்கலாம்.. ஆனால் அவரை யார் தடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

image

ஏதொ சில சக்திகள் பாலிவுட்டை அவரிடமிருந்து விலக வைக்கின்றனர். சூஃபியும் ஹிந்துஸ்தானியும் இஸ்லாமிய பாரம்பரியத்தில் இருந்து வருபவை. இங்கே தமிழர் என்ற அடையாளமும் ரகுமானுக்குச் சேர்ந்து கொள்கிறது. சர்வதேச அளவிலும்கூட அவர், அந்த அடையாளத்தை விட்டுக்கொடுப்பதில்லை. ஆஸ்கர் வாங்கிய பிறகு எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றார். இலண்டனில் நடந்த இசை நிகழ்ச்சியில், முதலில் தமிழ்ப்பாடல்களைத்தான் பாடத் தொடங்கினார். பிறகுதான் இந்திக்கு வந்தார்.

படவாய்ப்புக்காக லாபி செய்கிறவரும் அல்ல. இறைவன் பார்த்துக்கொள்வான் என அமைதிகாக்கும் ஆன்மிக மனிதராக தன்னை தகவமைத்து வைத்திருக்கிறார். அவரிடம் நன்றியுணர்வும் அதிகமாக இருக்கிறது. எந்த நிலையிலும் இயக்குநர் மணிரத்னம் படங்களுக்கு இசை அமைப்பதில் அவர் மறுப்புத் தெரிவிப்பதேயில்லை. இன்று அந்த ரகுமானையே பேசவைக்கும் அளவுக்கு பாலிவுட்டில் அரசியல் இருப்பதை, நாம் கூர்மையாக கவனித்துத் தெரிந்துகொள்ளவேண்டும்” என்றார் திரைப்பட ஆய்வாளர் சுபகுணராஜன்.

சுந்தரபுத்தன்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close