தடுப்பூசி உருவானது எப்படி? அது எத்தனை படிநிலைகளில் செயல்படும்?: மருத்துவரின் விளக்கம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிவரும் கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா ஆட்கொல்லிக்கு விரைவில் கடிவாளம் போடப்படும் என்பது உறுதியாகி உள்ளது. 


Advertisement

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இந்த AZD1222 தடுப்பூசி உருவானது எப்படி? எத்தகைய நோய் எதிர்ப்பு சக்தியை இது உருவாகிறது? என்பது குறித்து விளக்குகிறார் அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

image


Advertisement

நம் உடலில் இயற்கையாகவே நாம் பிறந்ததில் இருந்து இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்குப் பெயர் ‘இயற்கையான எதிர்ப்பு சக்தி’ அல்லது Innate Immunity. பலம் பொருந்திய எதிரியுடன் மோதி அதன் மூலம் நம் உடல் பெறும் எதிர்ப்பு சக்தி (infection Acquired Active Immunity) அல்லது பலம் குன்றிய எதிரியை தடுப்பூசி மூலம் பெற்று அதற்கு எதிராக பெறும் எதிர்ப்பு சக்தி (Vaccine Acquired Active Immunity) ‘செயற்கை எதிர்ப்பு சக்தி (Artificial Immunity) அல்லது தொற்றாலோ/ தடுப்பூசியாலோ பெற்ற எதிர்ப்பு சக்தி( Infection Acquired or Vaccine Acquired Immunity ) என்று கூறுகிறோம்.

மேற்சொன்ன எதிர்ப்பு சக்திகளில் நோய் தரும் கிருமியை அதன் முழுத்திறனோடு எதிர்கொண்டு உயிர்பிழைக்கும் உடலில் அந்த நோய் உண்டாக்கும் கிருமிக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும்.

இதில் இரண்டு வகை எதிர்ப்பு சக்தி உண்டு. Humoral immunity மற்றும் Cellular immunity.


Advertisement

ஒரு எதிரிப்படை ஊருக்குள் நுழையும் போது, அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உள்நுழைந்த எதிரியை தடுத்து சமர் செய்வர். எதிரி வென்றால் ஊர், எதிரி வசமாகும். ஊர் இளைஞர்கள் வென்று விட்டால் அந்த எதிரிகளைப்பற்றி தங்களது வாரிசுகளுக்கு கூறி வளர்ப்பார்கள். அவ்வாறு எதிரிகளின் நினைவுகளைப்பற்றி கூறி வளர்க்கப்படும் வாரிசுகள் தான் T-Memory cells. இந்த வகை எதிர்ப்பு சக்தி தான் நீண்ட காலம் நீடிக்கும்.

எப்போது மீண்டும் அந்த எதிரி நுழைந்தாலும் இந்த வாரிசுகள் உடனே விரைந்து சென்று அழிப்பர். முதன்முதலில் எதிரி நுழைந்த போது அவர்களை எதிர்த்து சமர் செய்த ஊர்ப்பெரியவர்கள் தான் - Humoral immunity. எதிரிகளைப்பற்றி கூறிக்கூறி வளர்க்கப்பட்ட வாரிசுகள் தான் - cellular immunity

நோய் தொற்றாக இருந்தாலும் சரி, தடுப்பூசியானாலும் சரி, மேற்சொன்ன இரண்டு எதிர்ப்பு சக்தியை சரியாக தூண்ட வேண்டும். தடுப்பூசிகளின் இயங்கு தத்துவம் இது தான்.

ஒன்றாவது - நோய் தொற்று உண்டாக்கும் கிருமியை உயிர்ப்புடன் ஆனால் நோய் உண்டாக்க இயலாதவாறு பலம் குன்றச்செய்து அதை செலுத்துவது (Live attenuated vaccine)

இரண்டாவது - நோய் தொற்று உண்டாக்கும் கிருமியைக் கொன்று அதை செலுத்துவது. ( killed vaccine)

இப்படியாக வேக்சின் செலுத்தப்பட்ட பின் நமது உடல் அதை கிருமித்தொற்றாக எண்ணி அந்த குறிப்பிட்ட கிருமிக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். அதற்குப் பெயர் தான் ‘ஆண்ட்டிபாடிகள்’.

முதலில் உருவாகும் ஆண்ட்டிபாடிகளுக்கு IgM எனவும் சில நாட்களுக்குப் பிறகு உருவாகும் ஆண்ட்டிபாடிகளுக்கு IgG எனவும் வகைப்படுத்தப்படும்.

இப்படியாக தடுப்பூசி செலுத்தி கிடைத்த எதிர்ப்புசக்தியைக் கொண்டிருக்கும் ஒருவரை சமூகத்தில் பரவும் அந்த கிருமி அடையும் போது ஏற்கனவே தடுப்பூசி உருவாக்க வைத்த ஆண்டிபாடிகள் காலி செய்து விடும். இதனால் அந்த நபருக்கு நோய் தொற்று ஏற்படாது. இதுவே தடுப்பூசிகள் எப்படி இயங்குகின்றன என்பதன் சுருக்கமான விளக்கம்.

இப்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த AZD1222 என்பது எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்று முதலில் பார்ப்போம்..

முதல் படி - இந்த புதிய கொரோனா வைரஸ்களின் மேற்பரப்பில் உள்ள ஸ்பைக் ப்ரோட்டின் (Spike protein) எனும் வெளிப்புற புரதத்தை மட்டும் மரபணு வரிசைப்படுத்துதல் முறைப்படி தனித்தனியாக வெட்டி எடுத்துக்கொண்டனர். காரணம் இந்த ஸ்பைக் ப்ரோட்டினைக் கொண்டு தான் அந்த வைரஸ் நமது சுவாசப்பாதை செல்களில் ஒட்டுகின்றது.

இரண்டாவது படி - சிம்பன்சி எனும் குரங்கினத்தை தாக்கும் அடினோ வைரஸ் எனும் சாந்தமான கிருமியில் இந்த ஸ்பைக் ப்ரோட்டீன்களை ஒட்டி விட்டனர். சிம்பன்சிகளில் சளி இருமல் தும்மல் போன்றவற்றை உருவாக்கும் அந்த சிம்பன்சி அடினோ வைரஸை மட்டுப்படுத்தி பலம் குன்றச்செய்து மனிதர்களில் தொற்று ஏற்படுத்தாதவாறு மாற்றி அமைத்தனர்.

இதனால் அந்த வைரஸ், கொரோனா ஸ்பைக் ப்ரோட்டினை ஏற்று அதை பல்கிப்பெருகச்செய்யும் வெக்டார் ஆக செயல்படுகின்றது.

மூன்றாவது படி - புதிய கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதங்களைக் கொண்ட பலம் குன்றிய சிம்பன்சி அடினோ வைரஸானது மனிதர்களுக்குள் தடுப்பூசியாக செலுத்தப்படுகின்றது. மனிதர்களுள் சென்ற அந்த பலம் குன்றிய வைரஸ் மேற்கொண்டு பல ஸ்பைக் ப்ரோட்டீன்களை உருவாக்குகின்றது.

நான்காவது படி - இந்த ஸ்பைக் புரதங்களை அடையாளம் கண்டுகொண்ட மனிதனின் உடல் அதற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதாவது ஆண்ட்டிபாடிகளை உருவாக்குகின்றது.

ஐந்தாவது படி -  இவ்வாறு கொரோனா வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டீன்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வேக்சின் மூலம் பெற்ற நபருக்கு எதிர்காலத்தில் கொரோனா தொற்று ஏற்படுமானால் உடனே அந்த எதிர்ப்பு சக்தி அந்த வைரஸ்களின் ஸ்பைக் ப்ரோட்டினை காலி செய்யும். இதனால் வைரஸால் சுவாசப்பாதையில் ஒட்டமுடியாமல் செயலிழந்து போகும்.

image

இந்த தடுப்பூசி தற்போது மனிதர்களிடையே தனது முதல் மற்றும் இரண்டாம் படிநிலை பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. அதாவது இந்த வேக்சின் அளிக்கப்பட்டவர்களில் 95% பேருக்கு வீக்சின் போடப்பட்ட 28 நாட்களுக்குப்பிறகு செய்த ஆய்வில் ஸ்பைக் ப்ரோட்டினுக்கு எதிரான ஆண்ட்டிபாடிகள் நான்கு மடங்கு அதிகரித்துள்ளன

அதுமட்டுமல்ல, நாம் வாரிசுகளுக்கு கூறிவிட்டு செய்வதென்று கூறிய செல்லுலார் இம்யூனிட்டியையும் தூண்டுகின்றன என்பதை இரண்டு மாதங்கள் கழித்து எடுத்த ரத்த மாதிரிகளில் கண்டறிந்துள்ளனர்

மேலும் தடுப்பூசி போடப்பட்டவர்களில் காய்ச்சல் / உடல் வலி போன்ற பாராசிட்டமால் மாத்திரைக்கு கேட்கும் சாதாரண பக்கவிளைவுகள் மட்டுமே தோன்றியுள்ளன என்பதும் ஆறுதலான விஷயம். தடுப்பூசி போடப்பட்டவர்களில் தடுப்பூசியின் பக்கவிளைவால் யாரும் மரணிக்கவில்லை என்பது மற்றொரு சிறப்பான ஆறுதல்

முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வில் 543 பேருக்கு இந்த வாக்சின் செலுத்தி செய்யப்பட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது. மூன்றாம் கட்ட பரிசோதனை பிரேசில், தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் நடந்து வருகின்றன.

முதல் இரண்டு பரிசோதனைகள் ஆரோக்கியமான நிலையில் உள்ள வெள்ளைக்காரர்களிடம் மட்டுமே செய்யப்பட்டிருக்கின்றன. மூன்றாம் கட்ட பரிசோதனை இன்னும் பல்வேறு இனக்குழுக்களை இணைத்து செய்யப்பட இருக்கின்றது.

மேலும் இந்த ஆய்வு ஒரு வருடம் தொடர்ந்து நடக்கும். அதில் தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தி எப்படி இருக்கிறது என்றும் பக்கவிளைவுகள் தோன்றுகின்றனவா என்பது குறித்தும் ஆய்வு தொடரும்.

இந்தப்பரிசோதனை வெள்ளைத் தோலுடைய ஆரோக்கியமான மனிதர்களிடம் மட்டுமே தற்போது செய்யப்பட்டுள்ளதால் இதை உலகம் முழுமைக்கும் பொதுமைப்படுத்திட முடியாது.

இன்னும் சில காலம் பல்வேறு இனக்குழுக்கள் (ஆப்பிரிக்க/ ஆசிய/ தெற்காசிய இனக்குழுக்கள்) முதியோர்கள் / தொற்றா நோய்களுக்கு ஆளான முதியோர்களுக்கு என்று ஆராய்ச்சி விரிவடைய வேண்டும்.

மேலும் இன்னும் அதிகமான மக்களை ஆராய்ச்சிக்குள் கொண்டு வந்து சோதிக்கும் போதும் இதே முடிவுகள் கிடைக்க வேண்டும். இவையனைத்தும் வரும் காலங்களில் நிகழ்ந்தால் நமக்கு மிக முக்கியமான சிறப்பு வாய்ந்த ஒரு தடுப்பூசி இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த வருடத்தின் தொடக்கத்திலோ கிடைக்கும்.

loading...

Advertisement

Advertisement

Advertisement