"பஞ்சாபிகள் புத்திசாலிகள் அல்ல" கடும் எதிர்ப்பால் மன்னிப்பு கேட்ட திரிபுரா முதல்வர்

"பஞ்சாபிகள் புத்திசாலிகள் அல்ல" கடும் எதிர்ப்பால் மன்னிப்பு கேட்ட திரிபுரா முதல்வர்
"பஞ்சாபிகள் புத்திசாலிகள் அல்ல" கடும் எதிர்ப்பால் மன்னிப்பு கேட்ட திரிபுரா முதல்வர்

பஞ்சாபியர்களும், ஜாட்களும் உடல் அளவில் வலிமையானவர்கள் ஆனால் பெங்கால் மக்கள் போல அவர்கள் புத்திசாலிகள் இல்லை என்று திரிபுரா மாநில முதல்வர் பிப்லாப் தேப் கடந்த சில நாள்களுக்கு முன்பு பேசியிருந்த நிலையில், இப்போது மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு அகர்தலாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிப்லாப் தேப் " அறிவார்ந்த விஷயங்களில் பெங்கால் மக்களிடம் யாரும் போட்டிப்போட முடியாது என கூறுவார்கள் புத்திகூர்மைக்கு உதாரணமாக இருப்பவர்கள் பெங்காலிகள். பஞ்சாப் மக்களை பொறுத்தவரை புத்தி கூர்மை குறைவானவர்கள் ஆனால் உடல் வலிமை மிக்கவர்கள். உடல் வலிமையால் யாரும் அவர்களை வெல்ல முடியாது ஆனால் அன்பால் அவர்களை ஜெயிக்கலாம். அதேபோலதான் ஹரியானாவில் இருக்கும் ஜாட் மக்கள். அவர்களும் புத்திசாலித்தனம் இல்லாதவர்கள்தான் ஆனால் வலிமையானவர்கள். எவரேனும் அவர்களிடம் வம்பிழுத்தால் வீட்டுக்கு சென்று துப்பாக்கி கொண்டு வருவார்கள்" என நகைச்சுவையாக பேசியிருந்தார்.

ஆனால் பிப்லாப் தேப்பின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது. நாட்டின் ஒரு பிரிவு மக்களை மிகவும் கேவலமாக பேசியுள்ளதாகவும், இது பஞ்சாப், ஜாட் மக்களை மிகவும் வருத்தப்படுத்தியிருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டன. பிப்லாப் தேப்பின் கருத்து வெட்கக்ககேடானது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா காட்டமாக கருத்து தெரிவித்திருந்தார். மேலும் இதற்கு பஞ்சாப் மாநில பாஜக நிர்வாகிகள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் பிப்லாப் தேப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் " நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பஞ்சாப் மற்றும் ஜாட் சமூகங்களின் பங்களிப்புகளை நான் எப்போதும் தலை வணங்குகிறேன். இந்தியாவை முன்னேற்றுவதில் இந்த இரு சமூகங்களும் வகித்த பங்கைப் பற்றி நான் ஒருபோதும் கேள்வி எழுப்ப முடியாது. சிலர் அவர்களைப் பற்றி கூறிய கருத்துக்களை நான் வெளிப்படுத்தியிருந்தேன். பஞ்சாபி மற்றும் ஜாட் சமூகங்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். நான் அவர்களிடையே சிறிது காலம் வாழ்ந்திருக்கிறேன். எனது பேச்சு யாருடைய உணர்வையும் புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com