புறக்கணிக்கப்படுகிறதா சித்த மருத்துவம்? – அலசல் ரிப்போர்ட்..!

புறக்கணிக்கப்படுகிறதா சித்த மருத்துவம்? – அலசல் ரிப்போர்ட்..!
புறக்கணிக்கப்படுகிறதா சித்த மருத்துவம்? – அலசல் ரிப்போர்ட்..!

கொரொனோ காலத்தில் மக்களால் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் கபசுரகுடிநீராகத்தான் இருக்கும். புதிதாக இப்போது சித்த மருந்துகள் வாங்க நாட்டுமருந்து கடைகளை கூட்டம் மொய்க்க தொடங்கியுள்ளது. சித்த மருத்துவம் மூலமாக இதுவரை நூற்றுக்கணக்கான கொரோனோ நோயாளிகள் உயிரிழப்பு ஏதுமின்றி நூறு சதவீதம் குணமடைந்துள்ளனர் என்று தமிழக அரசே சொல்கிறது. ஆனாலும் கொரோனோ சிகிச்சையில் அலோபதி மருத்துவத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம், சித்த மருத்துவத்துக்கு கொடுக்கப்படுவதில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்தவாரம் நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் இது தொடர்பானதொரு வழக்கில் “சித்த மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறினால், அவர்களது மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் அவர்களை சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் சூழல் நம் நாட்டில் நிலவுகிறது. சித்த மருத்துவத்தின் மீது மத்திய, மாநில அரசு பாகுபாடு காட்டுகிறது. அந்த மருத்துவத்தை புறக்கணிக்கின்றன. 60 ஆண்டுகளாக சித்த மருத்துவராக உள்ள டாக்டர் சுப்பிரமணியன் என்பவர், கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்ததாக ஆரம்பத்திலேயே தமிழக அரசிடம் தெரிவித்தும், அது புறக்கணிக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையை அவர் நாடியுள்ளார். உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், தற்போது அவரின் மருந்து மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

 தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? தமிழகத்தில் எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன? அவற்றில் போதுமான மருத்துவ நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா? மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, சித்தா துறை வளர்ச்சிக்காக கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு செலவிட்டுள்ளது? இந்த கேள்விகளுக்கு எல்லாம் மத்திய, மாநில அரசுகள் விரிவான பதில் அளிக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்கள்

 சாதித்த சித்த மருத்துவம்:

முதன்முதலாக சென்னையிலுள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரியில் டாக்டர் வீரபாகு தலைமையில் 35 பேரை வைத்து சித்த மருத்துவ முறையில் குணப்படுத்தும் மையம் துவங்கப்பட்டது. இப்போது சுமார் 200 பேருக்கு மேல் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு சிகிச்சைபெறுபவர்கள் 100 சதவீதம் குணமடைகிறார்கள். பிறகு லயோலா கல்லூரியிலும் டிஜி வைஷ்ணவா கல்லூரியிலும் சில ப்ளாக்குகள் இதற்காக ஒதுக்கப்பட்டன. இப்போது முழுமையான சித்தா கோவிட் கேர் மையத்தை டாக்டர் அம்பேத்கர் கல்லூரியில் உருவாக்கியுள்ளனர்.

 இதுபற்றி பேசும் சித்த மருத்துவ ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் “ நீதிமன்றம் சொல்வதைப்போல சித்த மருத்துவம் புறக்கணிக்கப்படுகின்றது என்பது உண்மை. கொரோனோவை குணப்படுத்த உலகம் ஒரேயொரு தடுப்பு மருந்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் சித்த மருத்துவத்தில் பல மருந்துகள் உள்ளன. சித்த மருத்துவத்தை பின்பற்றினால் கொரோனோ காரணமாக ஒரு நோயாளிகூட உயிரிழக்க மாட்டார்கள் என்பது உறுதி.

அனைத்து மருத்துமனைகளிலும் இப்போது சிகிச்சைக்காக கபசுரகுடிநீர், ஆடாதொடா இலை குடிநீர்தான் கொடுக்கிறார்கள். அப்படி இருக்கையில் அரசு சித்தமருத்துவத்தை ஏற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சித்தமருத்துவ கொரோனோ சிகிச்சை மையங்களை உருவாக்கினால் இன்னும் சில வாரங்களில் தமிழகத்தில் கொரோனோ நோயாளிகளே இல்லை என்ற நிலையை உருவாக்க முடியும். மேலும் இப்போது கொரோனோ சிகிச்சைக்கு அலோபதி முறையில் பல்லாயிரம், பல இலட்சம் ரூபாய்கள் செலவழிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் சித்த மருத்துவம் மூலமாக  அதிகபட்சமாக ஐநூறு ரூபாய் மருந்துக்காக செலவு செய்தால் போதும், கொரோனோவை குணப்படுத்தலாம்” என்கிறார்

தமிழகத்தின் மரபு மருத்துவமான சித்த மருத்துவத்திற்கு இந்தியாவில் சித்த மருத்துவத்துக்கெனத் தனியாக பல்கலைக்கழகம் கிடையாது. சித்த மருத்துவப் படிப்பு என்பது, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் ஒரு துறையின் கட்டுப்பாட்டில்தான் இப்போதுவரை  செயல்படுகிறது. பல்கலைக்கழகங்கள் இருந்தால்தான்  ஒரு துறையால்  தன்னிச்சையாகச் செயல்படமுடியும் எனவே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழகத்தில் அமைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அனைத்து சித்த மருத்துவர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

உளுந்தூர்பேட்டை ஜே.எஸ்.ஏ சித்த மருத்துவகல்லூரியின் முதல்வர் கண்ணன் பேசும்போது “ தேசிய ஊரக சுகாதார இயக்க (National Rural Health Mission) திட்டத்தில் ஆங்கில மருத்துவர்களுக்கு  மட்டுமே  முக்கியத்துவம் தருகிறார்கள். இந்த திட்டத்தில் சித்த மருந்துவர்கள் குறைந்த  எண்ணிக்கையிலேயே  சேர்க்கப்படுகிறார்கள். அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள், இ.எஸ்.ஐ. மற்றும் ரயில்வே  மருத்துவமனைகளில்  சித்த  மருத்துவத்துக்கு மிகக் குறைந்த இடங்களே இருக்கின்றன. ஆனால், அந்த இடங்களும் முழுமையாக நிரப்பப்படவில்லை.

சித்த மருத்துவத்தைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் போதுமான நிதி ஒதுக்குவதில்லை என்பதுதான் உண்மை. தமிழக அரசின் சார்பில் இப்போது 1400 முதல் 1500 வரைதான் அரசு சித்தமருத்துவர்கள் உள்ளனர். ஆனால் இப்போது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 450 மாணவர்கள் சித்த மருத்துவ படிப்பை முடிக்கிறார்கள். இதுவரை சித்த மருத்துவம் படித்து முடித்தவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். படிப்பை முடித்த பல சித்த மருத்துவர்கள் வேலைவாய்ப்பின்றிதான் தவிக்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள ஆங்கில மருத்துவமனைகளில் ஓரத்தில் சித்த மருத்துவ பிரிவு செயல்படுகிறது, இதனால் மக்களுக்கு இதுபோன்ற பிரிவு இருப்பதே தெரிவதில்லை. எனவே சித்த மருத்துவத்தை ஆங்கில மருத்துவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கி தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட அனுமதிக்கவேண்டும். ஒவ்வொரு ஊரிலும் சித்த மருத்துவமனைகளை தனியாக அமைக்கவேண்டும். மேலும் மத்திய அரசைப் போல தமிழக அரசும் சித்த மருத்துவத்திற்கென்று தனி அமைச்சகம் உருவாக்கவேண்டும். அரசு இனிமேலாவது சித்தமருத்துவத்துக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து தமிழகத்தின் தாய் மருத்துவமான சித்த மருத்துவத்தை முன்னிலைப்படுத்த வேண்டும்” என்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com