கொரோனாவோடு வாழப் பழகுவது எப்படி? மனநல நிபுணரின் அட்வைஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நல்ல ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டால் புஷ்டியாக இருக்கலாம். கொரோனா நம்மை அண்டாது என்ற அமைச்சர் ஜெயக்குமாரின் வார்த்தைகள் நகைச்சுவைபோல தோன்றினாலும், அதில் உண்மை இருக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள உணவுகளும் உடற்பயிற்சியும் தனிமனித இடைவெளியும் நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றும். கொரோனாவோடு வாழப் பழகுங்கள் என்ற புதிய யதார்த்தம் இயல்பாகிவிட்டது. நாம் எப்படி வாழப் பழகவேண்டும் என்பது பற்றி மனநல நிபுணர் லாவண்யா ஆதிமூலம் என்ன சொல்கிறார்?

நம்முடைய வாழ்க்கையில் கொரோனா காரணமாக சில பழக்கங்கள் புதியது மட்டுமல்ல கட்டாயமும் ஆகிவிட்டது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருத்தல், தும்மல் - இருமல் வரும்போது கைகளாலோ துணியாலோ முகத்தை மூடிக்கொண்டு நீர்த்துளிகள் மற்றவர் மேல் படாமல் பார்த்துக்கொள்வது என இப்படி சில புதிய நடைமுறைகள் அன்றாட வாழ்வின் தேவையாக மாறிவிட்டன.

இதெல்லாம் கொரோனா இருக்கும் வரைதானே அதற்குப் பிறகு கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லையே. நான் ஏன் பின்பற்ற வேண்டும்? கஷ்டமாக உள்ளதாக பலரும் நினைக்கலாம். ஊரடங்கு முடிந்த பிறகும், இந்தப் பழக்கங்களை தொடர்ந்து செய்வது நம் வாழ்க்கைக்கு முக்கியமாகின்றன என்பதை உணரவேண்டும். இதனைத் தவிர்ப்பது எப்படி என்று யோசிக்காமல், நம்மை எப்படி இந்தப் புதிய சாதாரண வாழ்க்கைக்குத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கோணத்தில் சிந்திப்பது சிறந்த செயலாகவும் மனநிம்மதிக்கு வழிவகுப்பதாகவும் அமையும். இனி, நம் வீட்டைவிட்டு எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எவரிடம் பேசும்போதும், நண்பர்கள், பணிபுரியும் சகதோழர்கள், உறவினர்கள், உயரதிகாரிகள் என அனைவருக்கும் இது பொருந்தும்.

வீட்டுக்கு அருகிலுள்ள பெட்டிக்கடைக்குச் சென்றாலும், ஷாப்பிங் மால், வழிபாட்டுத்தலங்கள், பள்ளி, கல்லூரி, எந்த அலுவலகத்திற்குச் சென்றாலும் தனிமனித இடைவெளி மற்றும் முன்னெச்சரிக்கை நடைமுறைகளைப் பின்பற்றுவதை நம் மனம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேற்கத்திய மருத்துவத்தை நம்பியிருந்த நம்மை இந்த கொரோனா சித்தா, ஆயுர்வேதா போன்ற பாரம்பரிய மருத்துவம் பக்கம் கவனத்தைத் திருப்பி ஆரோக்கியத்தைப் பெருக்கிக்கொள்ள வழிவகுத்துள்ளது.

நிலவேம்பு, கபசுர, வாதசுரபோன்ற மருந்துகள் வீட்டின் அஞ்சறைப் பெட்டிக்குள் வந்திருக்கின்றன. கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்த பிறகும், எதிர்காலத்தில் வரும் புதிய வைரஸ் தொற்றுகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ளவும் வாழ்நாள் முழுவதும் பாரம்பரிய மருத்துவத்தைப் பின்பற்ற வேண்டியதாகிறது.

கொரோனா வைரஸ் பாரம்பரிய மருத்துவத்தின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ளவும் பயன்படுத்தவும் நல்வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிக மனிதத் தொடர்பு இல்லாமல் ஆன்லைன் வழியாகவே பல விஷயங்களைக் கற்று செயல்படுத்தவேண்டிய நிலையில் இருக்கிறோம். வங்கிச் சேவை உள்ளிட்ட எந்த ஒரு கட்டண சேவையோ அனைத்தும் ஆன்லைன் வழியாக செய்யும் நிலையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அதிக மக்கள் நிறைந்த பிரம்மாண்ட திருமணங்கள், பிறந்த நாள் விழாக்கள் மற்றும் மகிழ்ச்சியைப் பகிர்ந்தளிக்கும் சமூக விழாக்கள் புதிய வடிவத்துக்கு
உருமாறுகின்றன. எளிமையான முறையில் அதிக மக்கள் இல்லாமல் கொண்டாடும் நிலை புதியதுதான். ஆனாலும் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் இருக்க நாம் அந்த வழிமுறைகளைப் பின்பற்றியே ஆகவேண்டும். கல்வி முதல் அனைத்துத் தேவைகளும் நாம் வைத்துள்ள சிறு ஆண்ட்ராய்ட் ஃபோனில் அடங்கியுள்ளதால் இனிவரும் காலங்களில் செல்போன் பயன்பாடு தவிர்க்கமுடியாமல் அதிகரிக்கும். அதனால் ஏற்படும் பிரச்சனைகளை முன்பே அறிந்து, நாம் அதில் சிக்காமல் கவனமாக இருக்கவேண்டும். இதுவொரு புதிய பரிமாண வளர்ச்சி என்பதால், அதற்குத் தகுந்தாற்போல நம்மை தயார்படுத்திக்கொள்வது மனித மேன்மையாகும்.

இந்தப் புதிய பழக்கவழக்கங்களும், புதிய மாற்றங்களும் நம் மகிழ்ச்சிக்கு இடையூறாக இருப்பதால் முதலில் மனம் ஏற்க மறுக்கும். இந்த வைரஸ் தாக்கம் மக்களின் கட்டுப்பாட்டுக்கு உட்படாதது என்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை, எளிய வாழ்க்கையை பின்பற்ற உதவியாக இருக்கும். உயிர்ப் பாதுகாப்பு என்ற தெளிவு இருந்தால், புதிய நடைமுறைகளை நாம் சுமையாக பார்க்கவேண்டியதில்லை. பழைய கண்ணோட்டத்தை சற்று மாற்றி, இதெல்லாம் எதற்கு என்ற புரிதல் அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை அதிகரிக்கிறது.

மேலும், புதிய பழக்கங்களால் ஏற்படும் எரிச்சல், கவலை, கோபம், சஞ்சலம், மனச்சுமைகளைத் தவிர்க்கமுடியும். நியூ நார்மல் லைஃப் எனப்படும் புதிய சாதாரண வாழ்க்கைக்குத் தேவையான பழக்கங்களைச் செயல்படுத்துவதற்கு நாம் எந்தவித தயக்கமும் இல்லாமல் தயாராகவேண்டும். ஒவ்வொரு தனி மனிதரின் கட்டுப்பாடும் சமூகத்தைப் பாதுகாக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.


Advertisement


சுந்தரபுத்தன்

loading...

Advertisement

Advertisement

Advertisement