[X] Close

இப்பதான் எங்க ஊருக்கே சுதந்திரம் கிடைச்ச மாதிரி இருக்கு'..மண்சாலையும்..மலைக்கிராம மக்களும்

Subscribe
This-is-where-the-freedom-of-the-city-will-be-like-----Mountain-village-people

திருப்பத்தூரில் நீண்ட நாள்களாக அரசிடம் வைத்த கோரிக்கை நிறைவேறாததால் தங்களின் மலை கிராமத்திற்கு கிராம மக்களே மண் சாலை அமைத்துள்ளனர்.


Advertisement

திருப்பத்தூர் மாவட்டம் - ஆலங்காயம் வட்டத்தில் உள்ளது நெக்னாமலை கிராமம். இந்தக் கிராமத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் 900 பேர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் நீண்ட நாட்களாக தங்கள் ஊருக்குச் சாலை வசதி செய்து தருமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தும் போராட்டங்களிலும் ஈடுபட்டும் வந்தனர். இந்நிலையில், தற்போது அப்பகுதி மக்களே ஒன்றிணைந்து மலை மீது மண் சாலை அமைத்துள்ளனர்.

image


Advertisement

இது தொடர்பாக நெக்னாமலை கூட்டுறவு சொசைட்டியின் தலைவர் முனிசாமியிடம் பேசும் போது, “பாட்டன், பூட்டன் என தலைமுறை தலைமுறையா இருநூறு வருஷத்துக்கு மேல இங்கதான் நாங்க வாழ்ந்துட்டு வரோம். இப்போ சுமார் 900 பேர் இருக்கோம். விவசாயமும், கால்நடை மேய்ச்சலும் தான் எங்களின் பிரதான தொழில்.

 

வரகு, சோளம், சாமை, திணை உள்ளிட்டவற்றை பயிர் செய்துதான் பிழைப்பு நடத்தி வரோம். நாங்க மலை மேல வசிக்கிறதனால தேவைக்காக கீழே இறங்கி வர வேண்டியிருக்கும். மேல ஏற ஒரு மணி நேரமும், கீழ இறங்க ஒரு மணி நேரமும் ஆகும். தூரம் குறைவு என்றாலும், மலை கடினமா இருக்குறதால அதிக நேரம் எடுக்கும். யாருக்காவது உடம்பு சரியில்லனாக் கூட டோலி கட்டிதான் தூக்கிட்டு போனும்.


Advertisement

image

 

இதனாலேயே எங்க ஊரு பொண்ணுகள கல்யாணம் பண்ணிக்க தயங்கினாங்க. இதற்கு ஒரு தீர்வு கொண்டு வரத்தான் அரசிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் ஒன்னும் நடக்கல. இந்த கொரோனா காலத்துல எங்க மக்களுக்கு நிவாரணத் தொகை கொடுக்க அமைச்சர் வீரமணி வந்திருந்தாரு. அவரும் நடைபாதையாவே மலைக்கு மேல வந்தார். அப்போது அமைச்சரிடன் எங்களுக்கு சாலை வசதி வேணும்னு கேட்டோம். கூடிய விரைவில சாலை அமைக்க ஏற்பாடு செய்றோம் என்று சொன்னவரு, தற்காலிகமாக மக்களே வேணும்னா மண் சாலை அமைத்துக் கொள்ள அனுமதி கொடுத்தாரு.

image

அதுக்கப்புறம் ஊர்மக்கள் எல்லாரும் ஒன்னா சேர்ந்து மலையை சமன்படுத்த ஆரம்பிச்சோம். மொத்தம் ஏழு கிலோ மீட்டர் தூரம். அதில் அடிவார பகுதியிலிருந்து மலை மேல வர அஞ்சு கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கணும். சில இடங்கள் இயந்திரங்களை பயன்படுத்தினோம். சாலை அமைப்பதற்கான செலவ எல்லோரும் சம அளவுல பகிர்ந்துகிட்டோம்.

image

 

23 நாட்கள் உழைப்புல இப்போ எங்க ஊருக்கு மண் சாலை அமைஞ்சுருக்கு. இப்பதான் எங்க ஊருக்கே சுதந்திரம் கிடைச்ச மாதிரி இருக்கு” என்றார். அவர்களின் முயற்சியை அமைச்சர் வீரமணியும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close