Advertisement

தைரியமாகச் சொல்லுங்கள்.. “ஆம் எனக்கு கொரோனாதான்...”- பகுதி 1

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸ் தனக்கு தொற்றிவிட்டது என்ற அவமானத்திலும் பயத்திலும், தனக்கு கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்திலும் உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் அநேகர். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் பலரும் உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும், தன்னம்பிக்கை இழந்து, கூடுதல் பாதிப்புக்கு ஆளாவதாக கூறுகின்றனர் மருத்துவர்கள்.


Advertisement

கொரோனா தொற்று நமக்கு சரியாகிவிடுமா? கொரோனா இருப்பதாக வெளியில் தெரிந்தால் அசிங்கமாகி விடுமே? இந்த சமூகம் நம்மை எப்படி ஏற்றுக்கொள்ளும்? அனைவரும் நம்மை ஒதுக்கிவைத்து விடுவார்களோ? பழைய வாழ்க்கையை நாம் வாழ முடியாது போன்ற மன உளைச்சல்களே கொரோனா நோயாளிகளின் தற்கொலை முடிவிற்கு காரணமாக அமைகிறது என்கின்றனர் மனநல ஆலோசகர்கள்.

image


Advertisement

ஆன்லைன் மருத்துவ ஆலோசனை தளமான ‘லைப்ரேட்’, கொரோனா தொடர்பாக மனநல ஆலோசனைகள் பெறுவோரின் எண்ணிக்கை 180 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் சொல்கிறது. அதிலும் மார்ச் 1 முதல் ஜூன் 20 வரையில் இந்த ஏற்றம் ஏற்பட்டிருக்கிறதாம். கொரோனாவை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என மனநல மருத்துவர் சிவபாலன் தெரிவித்துள்ளார். அதில் ''நாளுக்கு நாள் கொரோனா நோய்த் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இனி வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் என வல்லுனர்களால் கணிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசியோ அல்லது எதிர்ப்பு மருந்துகளோ இல்லாத சூழ்நிலையில் பாதிப்படைந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி நோய் பரவலை கட்டுப்படுத்துவதே இன்றைக்கு கொரோனாவிற்கு எதிரான முதன்மையான செயல்பாடாக இருக்கிறது.

image

கொரோனா தொற்று வந்தவர்களை தனிமைப்படுத்தும் முறைகளும், அவர்களின் மீது விதிக்கும் கட்டுப்பாடுகளும் இதுவரை அவர்களின் வாழ்க்கையில் சந்திக்காதது. கொரோனா நோய் தொற்று வந்த நபரின் மீது இந்த பொதுச் சமூகம் கொண்டிருக்கும் பாகுபாடுகளும், அச்சமும், வெறுப்பும் அந்த நபரை மிகுந்த மன உளைச்சல் கொள்ளச் செய்வதாக இருக்கிறது.இந்த சூழலில் தான் கொரோவினால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நிகழ்கிறது. நோய் குறித்த அச்சம், முறையான தகவலின்மை, தன்னிடமிருந்து தனது குடும்பத்தினருக்கு நோய் பரவி விடுமோ என்ற கவலை, நீடித்த ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், எதிர்காலத்தின் நிச்சயத்தன்மையின்மை, பொது சமூகத்தின் வழியாக எதிர்கொள்ளும் பாகுபாடுகள், ஒடுக்குமுறைகள் என அத்தனையும் சேர்ந்து மிகப்பெரிய உளவியல் நெருக்கடியை கொரோனா, தொற்றினால் பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கிறது.


Advertisement

image


இது போன்ற நேரத்தில் தான் சக மனிதர்களின் அன்பும் அரவணைப்பும் மிக அவசியம். ஆனால் நோய் பரவிவிடும் என்பதால் அதுவும் மறுக்கப்படுகிறது. அதனால் இந்த நெருக்கடிகளை எல்லாம் நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் தன்னிச்சையாகவே எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் விளைவாகவே அவர்கள் மன அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள். அந்த மன அழுத்தம் தீவிரமடையும்போது தற்கொலைகளும் இங்கே நிகழ்கிறது.

கொரோனா பாதிப்பினால் நிகழும் தற்கொலைகளை உலகளாவிய மனநல அமைப்புகள் கொரோனாவை போலவே மற்றுமொரு ‘பாண்டமிக்’ என வரையறை செய்கின்றன.அரசாங்கமும் மருத்துவ அமைப்புகள் தலையீட்டு இதை தடுப்பதற்கான நெறிமுறைகளை வகுக்கவில்லையென்றால் இந்த தற்கொலைகள் இன்னும் அரிகரிக்கும் என எச்சரிக்கை செய்கின்றன மனநல அமைப்புகள். இந்த தற்கொலைகளை தடுப்பதில் பொது சமூகத்திற்கும் பொறுப்பிருக்கிறது. கொரோனா தொற்று சமூகப் பரவலை அடையவில்லை என அரசாங்கம் சொன்னாலும் கூட சமூகத்தின் பெருவாரியான மக்கள் இதற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். யாரோ ஒருவருக்கு பாசிட்டிவாக ரிசல்ட் வந்தது போய் இப்போது நமக்கு மிக நெருக்கமானவருக்கே கொரோனா தொற்று வந்திருக்கிறது.

image


அதனால் நோயை பொருத்தவரை அதற்கு ஏழை, பணக்காரன், நகரம், கிராமம் என எந்த பாகுபாடும் கிடையாது. நம் எல்லோருக்குமே கொரோனா வருவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருக்கின்றன. எப்போது வரப்போகிறது என்பது தான் கேள்வி. அதனால் இந்த நோய் தொற்று வந்தவரை கண்ணியகுறைவாய் நடத்தாமல், அவர் மீது நெருக்கடிகளை கொடுக்காமல், பாகுபாடாக நடத்தாமல் இருப்பது அவசியம். ஏனென்றால் நாளைக்கு நமக்கு தொற்று வரும்போது நாமும் இப்படி பிறரால் நடத்தப்படலாம். ஒட்டு மொத்த சமூகமும் ஒன்றாக நின்று இந்த நோயை எதிர்த்தால் தான் நாம் முழுமையாக இதிலிருந்து மீண்டு வர முடியும். நோய் வந்தவர், வராதவர், நோய் வருவதற்கு வாய்ப்புள்ளவர், இல்லாதவர் என நாமே இப்படி பல குழுக்களாக சிதறி நமக்குள்ளேயே பாகுபாடுகளை கொண்டிருந்தால் எப்படி இந்த நோயை வலுவாக எதிர்க்க முடியும்?

அதனால் நோய் தொற்றுவந்தவர்களுக்கு ஒரு பாதுகாப்புணர்வை, ஒரு நம்பிக்கையை ஒரு சமூகமாக கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை முழுமையாக உணர்ந்து கொள்வோம்.

image

அதே போல கொரோனா நோய் தொற்று வந்தவரும் கூட இந்த நோயை குறித்த அதிக பீதிகளை, தவறான தகவல்களை எல்லாம் நம்புவதை, படிப்பதை தவிர்த்து அதிகாரபூர்வமான அறிக்கைகளை, தகவல்களை பாருங்கள். அதில் நாம் நம்பிக்கை கொள்வதற்கு பல செய்திகள் இருக்கின்றன. ஆரம்ப கட்டத்தை போல இல்லாமல் இப்போது பல மருந்துகள் பரிசீலனை செய்யப்படுகின்றன இது ஒரு நல்ல சமிக்ஞை. கிட்டதட்ட 80 சதவீதம் பேர் நோயிலிருந்து மீண்டு வருகிறார்கள். அதனால் நோய் தொற்று வந்தாலும் கூட மனதளவில் நாம் உறுதியாக இருப்போம். நோய் தொற்று வந்தவர் நோயில் இருந்து மீள முனைகிறார். நோய் தொற்று வராதவர் அதிலிருந்து தற்காத்து கொள்ள நினைக்கிறார். ஆக அனைவருமே கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணரவேண்டும்.

image

(மருத்துவர் சிவபாலன்)

சரியான உணவு, சரியான தூக்கம், தினமும் உடற்பயிற்சி, வாசிப்பு, நண்பர்களுடனும், உறவினர்களுடன் உரையாடல் என தினமும் உங்களது தனிமைபடுத்தல் நாட்களை திட்டமிடுங்கள்; நோய் குறித்த சந்தேகங்களை உங்கள் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உங்களது மன உளைச்சல்களையும், எதிர்காலத்தின் மீதான அச்சத்தையும் நெருங்கியவர்களிடம் பகிரிந்து கொள்ளுங்கள். எந்த சூழ்நிலையிலும் அவ நம்பிக்கை கொள்ள வேண்டாம். அப்படி ஒருவேளை அந்த மனநிலை உங்களுக்கு வந்தாலோ அல்லது தற்கொலை எண்ணங்கள் வந்தாலோ உதவியைகேட்க தயங்க வேண்டாம். ஏனென்றால் இதிலிருந்து நீங்கள் மீண்டு வருவது உங்களுக்குமட்டுமல்ல இந்த ஒட்டு மொத்த சமூகத்திற்கும் நம்பிக்கையூட்டவதாக இருக்கும். மீண்டு வாருங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement