[X] Close >

தங்க கடத்தலில் சாம்ராஜ்யம் : திடுக்கிட வைக்கும் ஸ்வப்னா பின்னணி..!

Kerala-Gold-Smuggling---Who-is-Swapna-Suresh

கேரளா உட்பட தென்னிந்தியாவையே அதிரவைக்கும் சம்பவமாக அரங்கேறியுள்ளது திருவனந்தபுரம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ள தங்க கடத்தல். இந்த கடத்தல் சம்பவத்தில் முக்கிய நபர் என்று அனைவரும் கூறும் பெயர் ஸ்வப்னா. சுங்கத்துறை அதிகாரிகள் உடன் ஒப்பந்தம், தூதரக அதிகாரிகளுடன் சகவாசம், அரசு உயரதிகாரிகளுடன் பழக்கம், அரசு தொழில்நுட்ப பிரிவில் வேலை என ஸ்ப்னாவின் கதை நீண்டு கொண்டே செல்கிறது.


Advertisement

கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஸ்வப்னா ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிறந்து வளர்ந்து இருக்கிறார். படிப்பை முடித்த பின்பு அங்கேயே விமானநிலைய ஊழியராக பணியில் சேர்ந்துள்ளார். பணியில் சில தில்லுமுல்லு வேலைகளை செய்ததாக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து 2013ஆம் ஆண்டு கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று கேரளா வந்துள்ளார். சில நாட்களில் திருவனந்தபுரம் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியில் சேர்ந்து அங்கு உடன் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் மீது பொய் புகாரளித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அங்கிருந்து வேலையைவிட்ட பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தில் நிர்வாக செயலாளராக சேர்ந்துள்ளார். அங்கு தான் இவருக்கு தங்கம் கடத்தல் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

image


Advertisement

விரைவாக பணம் சேர்க்க நினைத்த ஸ்வப்னா தங்கக் கடத்தலில் ஈடுபடத் தயாராகியிருக்கிறார். கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி தங்கத்தை கடத்தி வந்துள்ளார். தூதரக முகவரிக்கு வரும் பார்சல் என்பதால் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் சோதிக்காமல் இருந்துள்ளனர். இதை பயன்படுத்தி பலமுறை கிலோக்கணக்கில் தங்கத்தை கடத்தி கோடிக்கணக்கான ரூபாயை சேர்த்துள்ளார் ஸ்வப்னா. தூதரக வேலையை இழந்த பின்னர், அரசு தொழில்நுட்ப பிரிவில் பணியில் சேர்ந்துள்ளார். ஆனாலும் அவரது தங்கக் கடத்தல் தொடர்ந்துள்ளது.

image

இந்நிலையில் தான், திருவனந்தபுரம் மணப்பாடியில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக முகவரிக்கு சில தினங்களுக்கு முன் வந்த தங்கக் கடத்தல் பெட்டி சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்க, ஸ்வப்னாவின் கொள்ளை வரலாறு வெளிச்சத்திற்கு வந்தது. பெட்டியை திறந்தபோது அதில் ரூ.13.32 கோடி மதிப்புள்ள 30 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எந்த சோதனைக்கும் உட்படாமல் விமான நிலைய சரக்கு கிடங்கின் வெளியேறும் வாசல் வழியாக தங்கம் வந்த பார்சலை எடுத்துச்செல்ல முயன்ற ஒருவரை சுங்கத்துறையினர் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அந்த நபர் பெயர் ஸரித் என்பதும், ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்தில் முன்பு பணிபுரிந்தவர் என்பதும் தெரிந்தது. ஒழுங்கீன செயல்களால் தூதரகத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட இவர் கடத்தல் தங்கத்தை எடுக்க வந்தது பற்றி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.


Advertisement

image

அப்போது தூதரகத்தில் முன்னர் பணிபுரிந்த ஸ்வப்னாவுக்கு கடத்தலில் தொடர்பு இருப்பது அம்பலமானது. ஸ்வப்னா தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயனின் கட்டுப்பாட்டில் இயங்கும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவதும், இவருக்கான ஆறு மாத ஒப்பந்த பணி கடந்த ஜூன் மாதமே முடிந்தும் அவர் அதே பிரிவில் பணியமர்த்தப்பட்டதும் தெரியவந்தது. ஸ்வப்னாவின் வீட்டிற்கு சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றினர். ஸ்வப்ணாவுக்கும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளரும், முதல்வரின் செயலாளருமான சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

image

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் சிக்கியபோது கேரள முதல்வர் அலுவலகத்தில் இருந்து இரண்டு மூத்த அதிகாரிகள் சுங்கத்துறையினருக்கு பேசி பரிந்துரைத்ததாக எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா குற்றஞ்சாட்டி உள்ளார். முதல்வர் அலுவலகத்துக்கும் தங்கம் கடத்தலுக்கும் தொடர்பு உள்ளதாகவும் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள ரமேஷ் சென்னிதாலா, தங்கம் கடத்தல் குறித்த முழு விவரங்கள் வெளியே வரவேண்டும் என்றால் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளார். பாரதிய ஜனதாவும் கேரள முதல்வர் மீது குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில், முதல்வரின் செயலாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த சிவசங்கர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனிடையே தங்க கடத்தலுக்கும், முதல்வர் அலுவலகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஐடி துறையில் சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் நியமனம் செய்யப்பட்டது குறித்து தனது கவனத்திற்கு வரவில்லை எனக்கூறிய அவர், இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். தங்கக்கடத்தல் தொடர்பாக சிபிஐ உள்ளிட்ட எந்த விசாரணைக்கும் கேரள அரசு ஒத்துழைக்கும் என்றும் பினராயி கூறியுள்ளார்.

பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close