[X] Close

தாதா சாகேப் பால்கேவின் வாழ்க்கையை ஆவணப்படுத்திய ஓர் அழகிய சினிமா...! 

Subscribe
Making-of-Raja-Harishchandra---harishchandrachi-factory-

துண்டிராஜ் கோவிந்த் பால்கே எனும் இயற்பெயர் கொண்ட தாதா சாகேப் பால்கே இந்திய சினிமாவின் தந்தை எனப் போற்றப்படுகிறார். இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படமான “ராஜா ஹரிச்சந்திரா”வை 1913’ல் தயாரித்து இயக்கியவர் இவர்தான். இவர் பெயராலேயே தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. இது நாம் அறிந்த ஒன்று தான். 


Advertisement

ஆனால் தாதா சாகேப் பால்கே தனது முதல் திரைப்படத்தை உருவாக்க என்ன பாடுபட்டார்? அதற்காக எப்படியெல்லாம் உழைத்தார் என பால்கேவின் வாழ்க்கையை பதிவு செய்த மராட்டிய மொழி திரைப்படம் தான் Harishchandrachi Factory. இப்படம் 2009’ஆம் ஆண்டு வெளியானது. இதை மேக்கிங் ஆஃப் ராஜா ஹரிச்சந்திரா என்று கூடச் சொல்லலாம்.

image


Advertisement

இயக்குநர் Paresh Mokashi இயக்கியுள்ள இப்படத்தில் பால்கே’வின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் Nandu Madhav. இது பால்கேவின் வாழ்க்கை வரலாறு என்பதால் அவர் காலகட்டத்தில் கேமரா எப்படிக் கையாளப்பட்டது என்ற முறையை விளக்குவதற்கு முடிந்தவரை கேமிராவை வேறு இடத்திற்கு நகராமல் ஒளிப்பதிவு செய்துள்ளனர். 

அதாவது 1913 “ராஜா ஹரிச்சந்திரா” வெளியான காலத்தில் கேமராவால் எல்லா வகையான ஷாட்களையும் எடுக்க இயலாது. கேமரா ஒரே இடத்தில் தான் இருக்கும். நடிகர்கள் தான் கேமராவின் ஒளிப்பதிவுக்கு ஏற்ப நடித்துவிட்டு வெளியே செல்லவேண்டும். ஒரு மேடை நாடகத்தை அப்படியே ஒளிப்பதிவு செய்யும் அளவிற்குத் தான் அன்றைய தொழில்நுட்பம் இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு ட்ராலி ஷாட் போன்ற இன்றைய நவீன முறைகள் எதையும் பயன்படுத்தாமல் இப்படத்தைப் பதிவு செய்ததில் ஒளிப்பதிவாளர் Amalendu Choudary’யின் உழைப்பு கவனிக்கத்தக்கது. 

image


Advertisement

கார்ல் ஹெர்ட்ஸ் என்ற ஜெர்மன் மேஜிக் நிபுணருடன் பணியாற்றி மேஜிக் ஷோக்கள் நடத்தினார் பால்கே. அப்போது ‘ஏசு கிறிஸ்துவின் வாழ்வு’என்ற திரைப்படத்தைக் கண்டு அதிசயித்துப் போகிறார். நாமும் ஒரு திரைப்படத்தை எடுத்தே ஆக வேண்டும் என முடிவு செய்யும் பால்கே தொடர்ந்து உறக்கமின்றி அங்குள்ள அரங்கொன்றில் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து பல திரைப்படங்களைப் பார்க்கிறார். கையில் ஒரு குறிப்பேடு வைத்துக் கொண்டு குறிப்புகளையும் எடுத்துக் கொள்கிறார் பால்கே. அதிகமாகத் திரைப்படங்களைப் பார்த்ததால் பார்வை பாதிக்கப்படுகிறது. பால்கே அதையும் பொருட்படுத்தாது சிறிது வைத்தியத்துக்குப் பின் தன் இலட்சியம் நோக்கி முன் நகர்கிறார். திரைப்படத்தை கற்றுக் கொள்ளக் கடல் மார்க்கமாக லண்டன் சென்ற பால்கே, அங்குச் சிறிது காலம் சினிமாவை பயின்று ஒரு படக்கருவியையும் வாங்கி வருகிறார். 

இச் செலவுகளுக்காக தன் வீட்டிலுள்ள பொருட்கள் யாவையும் இழக்க நேரிடும் போதும் மனைவி சரஸ்வதி அவரது உற்சாக போக்கிற்கு மேலும் துணை நின்று ஊக்கமளிக்கிறார். ஒரு பூந்தொட்டியிலிருந்து செடி வளர்வது போன்ற ஒரு சிறிய படத்தைத் தயாரித்துச் சுற்றத்தாருக்கும் குடும்பத்தாருக்கும் காண்பித்து அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தி மகிழ்கிறார். எல்லோரும் பால்கேவின் முயற்சி வெற்றியடைய தங்களாலான உதவிகளைச் செய்கின்றனர். 

image

எந்தக் கதையை முதல் திரைப்படமாக எடுக்கலாம் என்ற விவாதத்துக்குப் பிறகு ராஜா ஹரிச்சந்திரனின் கதையைப் படமாக எடுப்பது என முடிவு செய்யப்படுகிறது. இதற்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது இங்கு தான் சில சிக்கல்களைச் சந்திக்கிறார் பால்கே. நடிப்பதைப் பாவம் என்று கருதிய காலம் அது. ஆண்கள் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் யாரும் இதற்குச் சம்மதிக்கவில்லை. பாலியல் தொழில் செய்யும் பெண்கள் சிலரின் உதவியை பால்கே நாட, அவர்களோ “ஐயோ முடியாது” என்கிறார்கள். 

ஆனால் தன் முயற்சியில் சற்றும் தளராத பால்கே இப்படத்தில் முழுக்க முழுக்க ஆண்களையே பெண் வேடத்திற்கும் பயன்படுத்துகிறார். பெண் வேடத்தில் நடிக்கும் ஆண்களின் நடிப்பு இயல்பாக இருக்க எல்லா நேரமும் அவர்கள் பெண் உடையிலேயே இருக்கச் சொல்லிக் கட்டளையிடுகிறார்.

ஒரு வழியாக 1913 இந்தியாவின் முதல் மவுன திரைப்படமான “ராஜா ஹரிச்சந்திரா”-வை உருவாக்கிவிடுகிறார் பால்கே. 

image

பால்கே பற்றிய ஆவணப் படத்தில் அப்போதிருந்த ஆங்கிலேய ஆட்சி அடக்குமுறை, போராட்ட அரசியல் என எங்கும் திசை மாறாமல் முழு கவனத்தையும் பால்கேவை பதிவு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குநர் பாரேஷ் மொகாஷி.

கேரளத் திரைப்படவிழா, அகமதாபாத் திரைப்பட விழா, புனே திரைப்படவிழா, இண்டியன் ஃபிலிம் பெஸ்டிவல் ஆஃப் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் பரிசு வென்ற இப்படம் தேசியவிருதையும், மகாராஷ்டிரா மாநில விருதையும் பெற்றது. இந்தியாவின் சார்பின் ஆஸ்கர் விழாவுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட படம் இது என்பது கூடுதல் தகவல்.

image

1989ல் - இந்தியத் திரைத்துறையின் 75வது ஆண்டு - தாதா சாகேப் பால்கே உருவாக்கிய 'ராஜா ஹரிச்சந்திரா' படத்தை முன்னிட்டு, அப்படத்தின் பெயரில் இந்திய அரசு தபால் தலை வெளியிட்டது. அவர் உருவாக்கிய கனவுத்துறையில் இன்று 3 மில்லியன் திரைத்துறை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெறுகிறார்கள். தன் 19 வருட திரைத்துறை வாழ்க்கையில் பால்கே ராஜா ஹரிச்சந்திரா, மோஹினி பத்மாசுர், பர்த் ஆப் ஸ்ரீ கிருஷ்ணா என பலபல திரைப்படங்களை உருவாக்கினார். இன்று இந்தியாவில் மட்டும் 20 மொழிகளைச் சேர்ந்த 900-க்கும் அதிகமான திரைப்படங்கள் ஒவ்வொரு ஆண்டும் உருவாகிறது. 

திரைத்துறையை நேசிக்கிறவர்கள் Harishchandrachi Factory-யை நிச்சயம் கொண்டாடுவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close