[X] Close >

ஒரு லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களைக் கரை சேர்த்த கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த சின்ஹா

one-million-migrant-workers-go-to-his-own-native----Commissioner-Prem-Ananda-Sinha-action

 


Advertisement

சென்னையில் தங்கியிருந்த 1,06,900 புலம் பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாப்பாக அவர்களது சொந்த ஊருக்குச் செல்ல நடவடிக்கை எடுத்த கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கால் அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஆதரவற்றோர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். குறிப்பாகப் பணி நிமித்தமாகத் தமிழகத்திற்கு வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவர்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப பல்வேறு வழிகளை மேற்கொண்டனர்.


Advertisement

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ரயில்கள் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என அறிவிப்பு வெளியானது.

முதற்கட்டமாகப் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கத் தமிழக அரசு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை ஒருங்கிணைத்து குழு ஒன்றை அமைத்தது. சென்னையில் தங்கி இருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான பொறுப்பு ஊரக வளர்ச்சித் துறை சிறப்புச் செயலர் பிங்கி ஜோயல் கொடுக்கப்பட்டது. இந்தப் பணியைப் பிங்கி ஜோயல் சென்னை காவல்துறை கமிஷனர் விஸ்வநாதன் வசம் ஒப்படைத்தார். இதனையடுத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பு கமிஷனர் விஸ்வநாதன் மேற்பார்வையில் சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காவிடம் கொடுக்கப்பட்டது.

image


Advertisement

அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட பிரேம் ஆனந்த் சின்ஹா தனது கணினி உதவியாளர்கள் மற்றும் தனக்குக் கீழ் பணிபுரியும் மூன்று காவலர்களை வைத்துக்கொண்டு முதற்கட்டமாகச் சாலைகளில் நடந்து செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்களை அருகில் உள்ள கல்லூரி வளாகங்கள் சமூக நலக்கூடங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றில் தங்கவைத்து உணவு வழங்கினார்.


அதன் பின்னர் தங்க வைக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மொத்த விவரங்களையும் காவல் நிலையங்கள் மூலமாகப் பெற்றார். அந்த விவரங்களின் அடிப்படையில் ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், ஆந்திரா, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், வடகிழக்கு மாநிலம், சண்டிகர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சென்னையில் தங்கி இருப்பது தெரிய வந்தது. குறிப்பாகத் தென் சென்னையில் 21,000 பேரும், கிழக்கு சென்னையில் 7,000 பேரும், வடசென்னையில் 7,000 பேரும், மேற்கு சென்னையில் 9,000 பேரும் இருப்பதும் தெரியவந்தது.

image


இதில் தென் சென்னையில் தங்கி இருந்த 10,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆன்லைன் மூலமாக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அவர்களின் முழு விவரங்களைச் சேகரித்த சினஹா அவர்களை ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.

ஒரு நாளைக்கு இரண்டு ரயில்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சென்றன. ஒரு ரயிலில் தலா 1,464 பேர் வீதம் 2 ரயில்களில் சுமார் 3,300 பேர் தினமும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வந்தனர். அந்த வரிசையில் தென் சென்னையைத் தொடர்ந்து ஒடிசாவைச் சேர்ந்த 5,300 பேர், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 13,000 பேர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 1,500பேர், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 8,300 பேர், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 18,000 பேர், மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 1,600 பேர் வடகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த18,300 பேர், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 8,300 பேர், பீகாரைச் சேர்ந்த 32,600 பேர் உள்பட இதுவரை ஒட்டு மொத்தமாக 1,06,900 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா முயற்சியால் அவர்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.

image

இதுமட்டுமன்றி சொந்த ஊர்களுக்குச் செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரயிலில் செல்லும் தேவையான உணவு, சொந்த ஊருக்குச் சென்றதும் அங்குச் சமாளிப்பதற்காக அரிசி மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காவின் நடவடிக்கைகளைக் கேட்டறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். சென்னை காவல்துறை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குச் செய்துள்ள உதவிகளை ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ட்விட்டரில் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

image

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close