[X] Close >

 “கோழைத்தனமான செயலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - யானை இறப்பு பற்றி விராட் கோலி

Virat-Kohli-posted-on-his-Twitter-page-saying-he-was-shocked-to-hear-what-happened-in-Kerala
கேரளாவில் என்ன நடந்தது எனக் கேட்டுத் திகைத்துப் போனதாக விராட் கோலி அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 
 
 
கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் நடந்திருக்கிறது ஒரு கருவுற்றிருக்கும் யானையின் கோரமான மரணம். கேரள மாநிலத்தில் யானைகளுக்கு என்று எப்போதும் ஒரு மரியாதை இருக்கிறது. கோயில் திருவிழாக்களில் யானைக்கென்று ஒரு சிறப்பிடம் உண்டு. அதற்குப் பிரசித்தி பெற்ற பூரம் திருவிழா ஒரு சான்று. யானையைக் கடவுளுக்கு நிகராக திருச்சூர் மாவட்ட மக்கள் வழிபடுவார்கள். புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயில் யானைகளைக் குழந்தை போலப் பராமரிப்பதில் பெயர் பெற்றவர்கள். 
 
image
 
யானைகள் மீது இத்தனை பாசமும் அன்பும் கொண்ட மக்கள் மீது இப்போது பெரும் பழி விழுந்திருக்கிறது. அதிலும் சில கயவர்களால். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதிக்குள் இருந்து யானை ஒன்று பசியுடன் ஊருக்குள் வந்துள்ளது. பசியுடன் தெருவில் சுற்றிய அந்த யானை, மனிதர்கள் கொடுத்த உணவுகளை உண்டுள்ளது. கருவுற்றிருந்த அந்த யானைக்கு, அன்னாசிப் பழத்தில் வெடிமருந்தை வைத்து சில மனித மிருகங்கள் கொடுத்துள்ளன. அதை யானை சாப்பிட்ட போது, அதன் வாயிலேயே வெடிமருந்து வெடித்திருக்கிறது. இதனால் வாய் மற்றும் நாக்கில் பலத்தைக் காயமடைந்த யானை வலி தாங்க முடியாமல் அங்கிருந்து ஓடியுள்ளது.
 
ஆனாலும் எந்த மனிதரையும் தாக்காமல், எந்த வீட்டையும் சேதப்படுத்தாமல் அந்த யானை சென்றிருக்கிறது. பசி அதிகமாக இருந்ததால் எதையாவது உண்ணலாம் என யானை நினைத்த போதும், வாயில் ஏற்பட்ட காயத்தால் எதையும் உண்ண முடியாமல் தவித்துள்ளது. பின்னர் வலி தாங்க முடியாமல் ஆற்றில் இறங்கி நின்றுள்ளது. இதை அறிந்த வனத்துறையினர் இரண்டு யானைகளின் உதவியுடன் அதனை மீட்க முயன்றுள்ளனர்.
 
 
 
சில மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்ட யானை பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது. இந்தத் தகவலை சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் கேரள வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் சோகத்துடன் பகிர்ந்துள்ளார். அந்த யானையின் பிரேதப் பரிசோதனை முடிந்து அதில் யானையின் கருப்பையிலிருந்து எடுக்கப்பட்ட குட்டியின் உடல் என்று கூறப்படும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இப்போது #Elephant என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி முதலிடம் பிடித்திருக்கிறது. அதில் பல திரைப் பிரபலங்களும், வன உயிரின ஆர்வலர்களும் கவலையுடன் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
 
 
அதில் மிக முக்கியமாக "மனித நேயம் எங்கே" என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. சிலர் #RIPHumanity என்ற ஹேஷ் டேக்கையும் பயன்படுத்தி மரணித்துப் போனதா மனிதம் என்றும் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் உயிரிழந்த யானையும், அதன் கருப்பையில் இருக்கும் குட்டியும் மனிதர்கள் குறித்துப் பேசுவது போல கார்டூன்களும் பதிவிடப்படுகின்றன. அதில் யானை மனிதர்களை நோக்கி "நாங்கள் உங்களை நம்பினோமே" எனக் கேள்வி கேட்பது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுபோல யானைக்கு ஆதரவான குரல்கள் சமூக வலைத்தளத்தில் எழத் தொடங்கியிருக்கிறது. 
 
நடிகை சிம்ரன் தன்னுடைய ட்விட்டர் பதிவில் "இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். என் இதயத்தை உடைத்துவிட்டது. அப்பாவி ஜீவராசிகள் மீது தொடுக்கப்படும் இதுபோன்ற தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு ஆதரவும், அன்பும், அரவணைப்புமே தேவை" எனப் பதிவிட்டுள்ளார். நடிகை த்ரிஷா "மனிதம் மரணித்துவிட்டது" எனப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். பலரும் யானைக்கு இத்தகைய தீங்கு இழைத்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்து வருகின்றனர்.
 
 
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்தச் சம்பவம் குறித்து கண்டம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கேரளாவில் என்ன நடந்தது எனக் கேட்டுத் திகைத்தேன். நம் விலங்குகளை அன்போடு நடத்துவோம், இந்தக் கோழைத்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார். 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close