10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஒத்திவைக்கப்பட்டதே போதுமா? தவிர்த்திருக்க வேண்டுமா?

special-article-about-10th-exam-postponed

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சில தளர்வுகள் வழங்கியிருந்தாலும் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், மால்கள் திறக்க தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் இன்று 11ம் வகுப்புப் ...

இதனிடையே ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதிவரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதற்கு கொரோனா காலத்தில் மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் தேர்வுகளை நடத்துவதா என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களின் உயிரோடு விளையாடக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து ஜூன் 1 ஆம் தேதி தொடங்க இருந்த தேர்வுகள் ஜூன் 15 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வுகள் நடைபெறும் என கால அட்டவணையை அரசு மாற்றி வெளியிட்டது. ஆனால் கொரொனா காலத்தில் தேர்வுகளை தள்ளிவைப்பது மட்டுமே தீர்வாகுமா என கேள்வி எழும்பியுள்ளது.


Advertisement

இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “மக்களின் கோரிக்கை, குழந்தைகளின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு தேர்வுகளை தள்ளி வைத்திருப்பது கண்டிப்பாக வரவேற்கக்கூடிய ஒன்று. நிச்சயமாக அரசுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால் ஒத்திவைத்தது மட்டுமே போதுமா? அது முழுமையான தீர்வாகுமா என்றால் நிச்சயமாக இல்லை. கொரோனா தொற்று இதுவரை உலகம் கண்டிராத புதுவகையான நோய் தொற்று என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.

வைரஸ் நுரையீரலில் போய் உட்காரும் வரை அறிகுறியே தெரிவதில்லை என்கிறார்கள். முதலில் இளைஞர்களுக்கு வராது என்றார்கள். பெரியவர்களைதான் அதிகம் தாக்கும் என்றார்கள். ஆனால் தற்போது அனைத்து வயதினருக்கும் கொரோனா நோய் தொற்று பரவி வருவதை பார்க்க முடிகிறது. இந்த சூழ்நிலையில் தேர்வுக்கு கால அட்டவணை வழங்குவது முன்னேற்பாடு இல்லாத நிலையை தான் காட்டுகிறது.

image


Advertisement

மே 15-ஆம் தேதிதான் எந்த ஏரியாவில் எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று கணக்கிடுங்கள் என தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை இயக்குநர் உத்தரவிடுகிறார். இதிலிருந்தே அவர்களிடம் முன்னேற்பாடுகள் இல்லை என்பது தெரிகிறது. மே 31 க்குள் கொரோனா அடங்கிவிடுமா? இது கண்டிப்பாக நியாயமான காரணத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல.

பிள்ளைகள் விடுமுறையில் இல்லை. அடைப்பட்டு கிடக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான வாழ்வியல் சூழ்நிலையில் இல்லை. வெவ்வேறு சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நடைபாதையில் வசிக்கும் குழந்தைகள் கூட பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள் என்பதை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் தனியார் நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெற்றோர்களுக்கு முழு மாத சம்பளம் கிடைப்பதில்லை. கூலிவேலைக்கு சென்று சாப்பிடுவோர் ஏராளமானோர் உள்ளனர். இந்த காரணங்களால் மாணவர்களுக்கு மன ரீதியிலான உடல் ரீதியிலான பிரச்னைகள் ஏற்படாதா?

இதற்கு தீர்வு என்னவென்றால் ஊரடங்கை விலக்கி கொண்ட பிறகு குறைந்தபட்சம் அவர்களுக்கு 15 வகுப்புகள் கொடுக்க வேண்டும். பின்னர் அந்த மாணவர்களுக்கு உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ பிரச்னை இருக்கிறதா என்பதை கண்டறிந்து தீர்வு வழங்க வேண்டும். அதன்பின்னர் தேர்வுகளை எதிர்கொள்ளச் சொல்ல வேண்டும். கல்வியாண்டின் முடிவை விட நமக்கு உயிர்தான் முக்கியம். பேரிடர் காலத்தில் பள்ளியை திறப்பதற்கான வாய்ப்பே இல்லை.” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் நந்தகுமார் பேசுகையில், “மாணவர்கள் தேர்வுக்கு தயாராகிவிட்டார்கள். 60 நாட்களுக்கு மேலாக அவர்கள் வீட்டிலேயே இருக்கிறார்கள். படித்துக்கொண்டு இருக்கிறார்கள். ரிவிஷன்லாம் முடித்துவிட்டார்கள். நான்கு முறை தேர்வுகளை ஒத்திவைத்திருக்கிறார்கள். மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பெற்றோர்கள் தேர்வு எப்போது நடக்கும் என்று காத்திருக்கிறார்கள். நாங்கள் நடத்திய பாடங்களை மறக்கும் அளவுக்கு மாணவர்கள் தத்தளித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

image

கொரோனா என்பது இன்றைக்கு முடியக்கூடிய விஷயம் இல்லை. இன்னும் பல மாதங்கள் நீடிக்கலாம். கொரோனாவுடன் வாழப்பழகிக் கொள்ளுங்கள் என மத்திய மாநில அரசுகள் சொல்லிவிட்டன. பத்தாம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடத்திதான் ஆக வேண்டும். அதை எழுதாமல் வேறு எந்த வகுப்புகளுக்கும் மாணவர்கள் போக முடியாது. அரசுப்பள்ளி ஏழை மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்றுதான் வேண்டுகோள் விடுத்து வருகிறோம். வணிகமயமாக்குவது எங்கள் நோக்கம் அல்ல. எப்போது வேண்டுமானாலும் பள்ளிகளை திறக்கட்டும். ஆனால் மாணவர்கள் படித்ததை மறந்து விடக்கூடாது” எனத் தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement