சென்னையில் அதிகரிக்கும் கொரோனா : பிற மாவட்டங்களுக்கு அபாயமாகும் கோயம்பேடு சந்தை?

From-Koyambedu--corona-spreads-to-other-districts

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மாநில மக்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னை நிலவரம் தினம் தினம் அதிர்ச்சி அளித்து வருகிறது. சென்னையில் நேற்று மட்டும் 176 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் சென்னையில் மட்டும் 1082 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.


Advertisement

நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது கொரோனாவின் மையப்புள்ளியாக தலைநகர் மாறி வருகின்றதா என்று ஐயம் எழுந்துள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தைக்கு பலர் வந்து போவதால் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு கொரோனா சத்தமில்லாமல் சென்றுகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

image


Advertisement

இதுவரை கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 65க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு சென்ற 29 பேருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேட்டில் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வந்து செல்வது வழக்கம். லாரிகளில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் வந்து இறங்குகின்றன.

பொருட்களை ஏற்றி இறக்குவதற்காக சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். இந்த நிலையில், முதன்முறையாக கொத்தமல்லி வியாபாரி ஒருவருக்கு கொரோனா உறுதியாக, பழ வியாபாரி ஒருவர், மலர் வியாபாரிகளான தந்தை - மகன் என பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நீண்டது. இது சென்னையோடு நின்றுவிடவில்லை.

image


Advertisement

சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில், கோயம்பேடு சந்தைகளிலிருந்து சென்றவர்களால், மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதனால், கொரோனா பரவலின் மையப்புள்ளியாக கோயம்பேடு உருவாகியுள்ளதா என்ற அச்சம் தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

தற்போது கோயம்பேட்டிலிருந்து மாவட்டங்களுக்கு வந்தவர்களை கண்டறியும் முயற்சியில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. கோயம்பேட்டிலிருந்து வந்தவர்கள் தங்கியிருந்த இடங்களில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு, அவர்களோடு தொடர்புடையவர்களை கண்டறியும் பணியும் தொடங்கியுள்ளது. மேலும் கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர்கள் தாங்களாகவே முன்வந்து தகவல் அளிக்க வேண்டுமென பல மாவட்ட நிர்வாகங்கள் வேண்டுகோளும் விடுத்துள்ளன.

image

கோயம்பேடு சந்தையில் சரியான விழிப்புணர்வு இல்லாதது, தனிமனித இடைவெளி ஏதும் கடைபிடிக்கப் படாததுமே இந்த அளவுக்கு கொரோனா பரவ காரணம் எனக் கூறப்படுகிறது. வெளிமாவட்ட தொழிலாளர்கள், மக்கள் என அதிகபேர் கூடும் இடமான கோயம்பேடு சந்தையில் அரசு இன்னும் கவனம் செலுத்தி இருக்க வேண்டுமென மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழச் சந்தை மாதவரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல ஒரே இடத்தில் மக்கள் கூடுவதைத் தடுத்து இட வசதி அதிகமுள்ள வேறு சில இடங்களில் பிரித்து சந்தையை செயல்படுத்த வேண்டுமென்பதும் மக்களின் கருத்தாக உள்ளது.

image

கோயம்பேடு சந்தை பல மாவட்ட தொழிலாளர்களுடம் தொடர்பில் இருக்கும்பட்சத்தில் அரசு இன்னும் அதிகமாக கவனம் எடுக்க வேண்டும் என்பதும், அரசின் வழிமுறைகளை தொழிலாளர்களும், மக்களும் சரியாக கடைபிடிக்க வேண்டும் என்பதுமே அனைவரின் விருப்பமாகவும் உள்ளது.

கொரோனாவை விட கொடுமையானது பசி - வியாபாரிகளுக்கு அரசு செய்ய வேண்டியது குறித்து விக்கிரமராஜா

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement