இத்தாலி நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இத்தனை உயிரிழப்புகளுக்குக் காரணம் என்ன? கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட லம்பார்டியில் நடப்பது என்ன?
இத்தாலியில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 15 ,300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நோயின் தாக்கத்தால் அந்நாட்டின் லம்பார்டி பிரதேசம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல பெர்காமோ மாகாணத்தில் மட்டும் 2 ஆயிரத்து 60 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகாரிகள் சொல்வதே. உண்மையில் உயிரிழப்பு இருமடங்குக்கு மேல் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இங்கு பல பேருக்கு முதற்கட்ட மருத்துவ உதவி கூட கிடைக்காமல் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர்.
வயதான நோயாளிகள் பலருக்கு வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு சரியான பாதுகாப்பு கவசங்களோ உபகரணங்களோ இல்லாததன் காரணமாக அவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்துவருகின்றன. உடல்நலமின்றி தனிமைப்படுத்தலில் இருந்தபோதும் தொலைபேசி வழி மருத்துவ ஆலோசனைகளை அவர்கள் வழங்கி வருகிறார்கள். ஆனால், அது போதுமானதாக இல்லை என்று கூறும் சக மருத்துவர்கள், லேசான அறிகுறி உள்ளவர்கள் வீடுகளிலேயே இருப்பதாகக் கூறுகிறார்கள்.
இதுகுறித்து மருத்துவர் ரிக்கார்டோ முன்டா கூறுகையில், “எந்த உதவியும் இல்லாமல், நோயுற்றவர்கள் வீடுகளிலேயே இருக்கிறார்கள். நிலைமை மோசமடைந்தால் யாராவது ஒரு மருத்துவர் போய் பார்க்கிறார். அதற்குள் அவரின் நிலை மோசமடைந்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் நிலை வருகிறது. பலர், மருத்துவமனைக்கே போவதில்லை. காரணம் மருத்துவர்கள் போதிய அளவு இல்லை. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை என்பது மட்டுமல்ல, மருத்துவப்பணியாளர்களும் போதிய அளவில் இல்லை. அதுதான் காரணம்” என்றார்.
எண்ணற்ற மக்கள், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் நிலை இத்தாலியின் பெர்காமோ மாகாணத்திலிருந்து வருகிறது. இத்தனை பேர் கண்முன்னே உயிரிழப்பதைப் பார்ப்பது மிகக்கொடுமையானது என்கிறார் ,வீட்டுக்கே சென்று நோயாளிகளைக் கவனிக்கும் செவிலி ஒருவர். இப்போது போருக்கு மத்தியில் தங்கள் வாழ்க்கை போய்க் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள் இத்தாலி மருத்துவர்கள். அவர்கள் எப்போது இந்தத் துயரம் முடிவுக்கு வரும் என்பது தெரியாமல் கலங்கிப் போய் இருக்கிறார்கள்.