JUST IN

உலக சினிமா சாமுராய்... அகிரா குரோசாவா பிறந்த தினம் இன்று..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குநர் அகிரா குரோசாவா பிறந்த தினம் இன்று., 1910-ஆம் வருடம் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் இதே நாளில் பிறந்தார் அகிரா. உலக
சினிமா வரலாற்றில் அவர் உருவாக்கிய திரைக்கதை பாணியும், சினிமாவை அவர் கையாண்ட விதமும் இப்போதும் சினிமாத் துறை சார்ந்த பலருக்கு அரிக்கேன் விளக்காக
உதவுகிறது.

1943-ஆம் ஆண்டு தனது முதல் படமான சன்ஷிரோ சுகடா’வை இயக்கினார் அகிரா குரோசாவா. அகிராவின் படங்களின் வன்முறைக் காட்சிகள், பார்ப்போரின் மனதில்
பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதற்கு ஒரு தனிப்பட்ட காரணமும் உண்டு. அகிராவின் 13 ‘வது வயதில் ஜப்பானில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது கண்ட
பயங்கர காட்சிகள் சிறுவனாக இருந்த அகிராவை மனதளவில் பெரிதும் பாதித்தது. வீட்டை விட்டு வெளியே வர பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தார் அவர்.
பின்னர் அகிராவின் அண்ணன் அவரைத் தேற்றினார். சிறுவயதில் அவரது மனதில் படிந்த கொடூர மரண காட்சிகளின் நீட்சி பின்னாளில் அவர் இயக்கிய திரைப்படங்களில் பிரதிபலித்தது.

image

ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளை மார்டனைஸ் செய்து நவீன தரத்துடன் வழங்கியவர் அகிரா. சினிமா என்பது எளிய கதை சொல்லும் வடிவம் என்பதை உடைத்து
பிரம்மாண்டங்களை காட்சிப்படுத்தினார். இன்று வெளியாகும் பல பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு அகிராவின் ‘செவன் சாமுராய்’ தான் காட் பாதர்.

அகிரா குரோசாவா இயக்கிய செவன் சாமுராய், ரோஷோமான் போன்ற திரைப்படங்கள் இப்போதும் பல திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக உள்ளது. 1954’ல் வெளியானது
செவன் சாமுராய். அகிரா குரோசாவா இயக்கிய இத்திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ஷினோபு ஹஷிமோட்டோ. ஜப்பானிய விவசாய கிராமமொன்றில் நடக்கிறது
கதை. அக்கிராமத்து விவசாயிகள் உற்பத்தி செய்யும் தானியங்களை கொள்ளையர்கள் வந்து கொள்ளை அடிக்கின்றனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாத மக்கள், நகரத்தில்
இருக்கும் சாமுராய்களின் உதவியை நாடுகின்றனர். அதன்படி நகரத்தில் இருந்து ஏழு காவல் வீரர்கள் அக்கிராமத்திற்கு வருகின்றனர்.

image

தானியங்களை கொள்ளையடிக்க வரும் கொள்ளையர்களுடன் சாமுராய்கள் சண்டையிடும் காட்சிகளை இப்படத்தில் ஒரு மாபெரும் யுத்தம்போல காட்டியிருப்பார் அகிரா.
இறுதியில் சாமுராய்களில் சிலர் இறந்து போகிறார்கள். மீதமுள்ள சாமுராய்கள் அக்கிராம மக்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள். இக்கதையை கொஞ்சம் தற்போதைய சூழலுக்கு
ஏற்ப மாற்றி திரைக்கதை அமைத்துப் பார்த்தோமேயானால் நமக்கு பிரபுசாலமன் இயக்கிய கும்கி கிடைக்கும்.

2012’ல் வெளியானது பிரபுசாலமன் இயக்கிய கும்கி திரைப்படம். அப்படத்தில் மலைக் கிராமத்து விவசாயிகளின் உற்பத்தியை சூரையாடும் யானைகளை விரட்ட
நகரத்திலிருந்து கும்கியானை வரவழைக்கப்படும். இது தானே கும்கியின் கதை. இதனை பிரபு சாலமன் செவன் சாமுராயை பார்த்து காப்பி அடித்தார் என்று சொல்ல
முடியாது. காரணம் அகிரா உலக திரைப்படக் கலைஞர்கள் அனைவரின் மனதிலும் அறிந்தோ அறியாமலோ பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டே போயிருக்கிறார். அவர்
வகுத்த பாதையில் தான் இன்றைய நவீன சினிமா இயக்குநர்கள் பலரும் பயணிக்கிறார்கள். இப்படித்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அகிராவின் பாதிப்பு இந்திய
சினிமாவில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே திரைத்துரையில் உண்டு.

image

செவன் சாமுராய்க்கு முன் 1950’ல் அகிரா இயக்கிய திரைப்படம் ரோஷோமான். இப்படத்திற்கும் ஷினோபு ஹஷிமோட்டோ தான் திரைக்கதை எழுதினார். இப்படத்தின்
முன் பகுதியில் பார்வையாளன் யூகிக்கும் ஒவ்வொன்றையும் பிற்பகுதியில் வேறு கோணத்தில் பொய்யாக்கி காட்டியிருப்பார் அகிரா. இந்த பாணியின் அச்சு தான்
விருமாண்டி திரைக்கதையில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

புகழ்பெற்ற கொலம்பிய எழுத்தாளரான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ஒருமுறை டோக்கியோ நகருக்கு சென்றிருந்தபோது அகிராவை சந்தித்தார் அப்போது மார்க்கேஸ்
அகிராவிடம் “ சினிமாவாக காட்சிப்படுத்த சாத்தியமேயில்லாதது என எப்போதாவது, எதைப் பற்றியாவது நீங்கள் நினைத்ததுண்டா?” எனக் கேட்டார் அதற்கு அகிரா...

image

“நான் உதவி இயக்குநராக இருந்தபோது இலிடாச்சி எனும் சுரங்க தொழிற்சாலை அமைந்திருந்த ஊருக்கு படப்பிடிப்பிற்காக போனோம், இலிடாச்சி நகரத்தில் ஒருவர்
வாழ்வது மிகவும் துயரமானது. அம்மக்களின் வாழ்வை வலியைக் கண்ட எனக்கு அம்மக்களின் வாழ்வை வெறும் கேமராவால் பதிவு செய்யமுடியாது என மனதில்
பட்டது.” என்றார். ஒரு படைப்பாளி தன் எல்லைகளை உணர்தல் எவ்வளவு முக்கியம் என்பதற்கு அகிராவின் அந்த பதில் ஒரு சான்று.

1993’ல் தனது கடைசி திரைப்படமான மடாடாவை இயக்கினார் அகிரா. அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கவுரவித்தது ஆஸ்கர் கமிட்டி. அகிரா
குரோசவா சர்வதேச விருதுகளைப் பெற்றார் என்று சொல்வதில் வியப்பேதும் இல்லை. உண்மையில் அகிராவின் பெயரால் உலகம் முழுக்க பல முக்கிய திரைப்பட
விருதுகள் வழங்கப்பட்டு வருகிறன. அவர்தான் அகிரா குரோசாவா.

Advertisement: