[X] Close >

அதிரடிகளுக்கு பெயர்போன நீதிபதி முரளிதர்... யார் இவர்..?

Notable-Judgements-of-Justice-S-Muralidhar

‘நீங்கள்தான் எங்கள் உத்வேகம்’ என்ற இளம் வழக்கறிஞர்களின் வாழ்த்து மழையில் இன்றோடு டெல்லி உயர்நீதிமன்றத்திலிருந்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளார் நீதிபதி முரளிதர். யார் இவர். தற்போது அதிகம் இவர் குறித்து பேசப்பட காரணம் என்ன..? என்னென்ன முக்கிய வழக்குகளில் இவர் பங்காற்றிருக்கிறார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.


Advertisement

image

டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்து வந்தவர்தான் நீதிபதி எஸ்.முரளிதர். டெல்லி உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது மூத்த நீதிபதியானஇவர், டெல்லி வன்முறை தொடர்பான வழக்கின்போது கடுமையான கருத்துகளை தெரிவித்திருந்தார். டெல்லி வன்முறைக்கு போலீசாரின் மெத்தனப்போக்கே காரணம் என சுட்டிக்காட்டிய அவர், வாகனங்களுக்கு தீ வைப்பு, கல்வீச்சு போன்றவைகளுக்கு வழக்குப்பதிவு செய்த நீங்கள் ஏன் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய பாஜக தலைவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கவில்லை என அதிரடியாக கேள்வி எழுப்பினார்.


Advertisement

“கிரேன் விபத்து நடந்தது எப்படி” இயக்குநர் ஷங்கரிடம் சரமாரி கேள்விகள் 

நேற்று அவரின் பேச்சு பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் ஒருநாள் முடிவதற்குள் அவர், டெல்லி உயர்நீதிமன்றத்திலிருந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம் நீதிபதி முரளிதர் உட்பட மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்வது குறித்து உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த 12-ஆம் தேதியே பரிந்துரை செய்துவிட்டதாகவும், அதனடிப்படையில்தான் தற்போது அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

image


Advertisement

இதனிடையே பணியிட மாற்றத்திற்கு 3 பேர் ஒரே நேரத்தில் பரிந்துரைக்கப்பட்ட போதும் எஸ்.முரளிதர் மட்டும் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்படுவதாக பிரசாந்த் பூஷண் தெரிவித்திருக்கிறார். டெல்லி வன்முறை வழக்கு தொடர்பாக, போலீஸ் மீது கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்த நிலையிலேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரசாந்த் பூஷண் குற்றம்சாட்டியுள்ளார்.

யார் இந்த நீதிபதி முரளிதர்..?

சென்னையில் கடந்த 1984-ஆம் ஆண்டு பயிற்சி வழக்கறிஞராக பணியை தொடங்கியவர் முரளிதர். அதன்பின் டெல்லி உச்சநீதிமன்றத்திலும் வழக்கறிஞர் பணியை தொடங்கிய அவர், ஒவ்வொரு படிநிலைகளுக்கு பின் கடந்த 2006-ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். டெல்லி உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது மூத்த நீதிபதியாக தற்போது அவர் உள்ளார். மனித உரிமை ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசகராகவும் இருந்துள்ள அவர், சட்டக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

image

டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் பல்வேறு முக்கிய வழக்குகளையும் அவர் சந்தித்திருக்கிறார். அதாவது டெல்லி உயர்நீதிமன்றம் முதல்முறையாக கடந்த 2009-ஆம் ஆண்டு ஒருபால் ஈர்ப்பு தவறில்லை என்ற தீர்ப்பினை வழங்கியது. இந்த தீர்ப்பை வழங்கிய பெஞ்சில் நீதிபதி எஸ்.முரளிதரும் இடம்பெற்றிருந்தார்.

மாவோயிஸ்ட்டுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கவுதம் நவ்லகாவிற்கு ஜாமீன் வழங்கி கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டார். அப்போது இந்த தீர்ப்பு பரபரப்பாக பேசப்பட்டது.

1984-ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவர வழக்கில் காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த சஜ்ஜான் குமாரை குற்றவாளி என தீர்ப்பளித்தவரும் இவரே.

கடந்த 2010-ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதாவது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருவதாக தெரிவித்தது. இந்த தீர்ப்பை வழங்கிய பெஞ்சில் முரளிதரும் ஒருவர்.

image

பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது திருட்டு வழக்குப்பதிவு 

காலங்காலமாக நீதிபதிகளை அறிமுகப்படுத்தும்போது ‘நீதி அரசரே’ என உயர்ந்த அளவில் புகழும் நடைமுறை இருந்தது. இது தேவையில்லை எனக்கூறிய நீதிபதிகளுள் இவரும் ஒருவர்.

போபால் விஷவாயு தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்றவர் முரளிதர். அத்தோடு மட்டுமல்லாமல் நர்மதாவில் அணைகட்டும்போது சிலர் இடம்பெயர வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். அப்போது அவர்களுக்கு ஆதரவாக நின்றவர் முரளிதர் ஆவார்.

இப்படி பல்வேறு வழக்குகளில் முக்கிய தீர்ப்பினை வழங்கிய அவர், தினசரி வாழ்க்கையிலும் மிகுந்த கண்டிப்பு கொண்டவர் என்றே அவருக்கு நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். இதுமட்டுமில்லாமல் தினசரி காலை வாக்கிங், ஜாக்கிங் செய்வதோடு, உடற்பயிற்சியிலும் அதிக அக்கறை கொண்டவர் என சொல்லப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close