“அவர் வரவில்லை; இறந்த தகவல்தான் வந்தது” - ‘இந்தியன்2’ விபத்து சோகம்

“அவர் வரவில்லை; இறந்த தகவல்தான் வந்தது” - ‘இந்தியன்2’ விபத்து சோகம்
“அவர் வரவில்லை; இறந்த தகவல்தான் வந்தது” - ‘இந்தியன்2’ விபத்து சோகம்

‘இந்தியன்‌2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த உணவு சப்ளையர் சந்திரன் கடந்த 40 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

திரைத்துறை என்னும் மாய உலகில் புகழ் வெளிச்சம்படாத இடத்தில் பணியாற்றி வந்த தொழிலாளி ஒருவரின் குடும்பத்தினர் கண்ணீர் வடித்து வருகின்றனர். தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பால் மட்டுமே ஒரு திரைப்படம் உருவாகிவிடுவதில்லை. வெள்ளித்திரையின் பின்னே நூற்றுக்கணக்கான இரும்புக்கரங்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் இருக்கிறது.

எனினும் நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் கிடைப்பது போன்ற புகழோ, ஊதியமோ அவர்களுக்கு கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட ஒருவர்தான் சந்திரன். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தென்னிர்வயல் என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் கடந்த 40 ஆண்டுகளாக சினிமாவில் உணவு சப்ளையராக பணியாற்றி வந்தவர். அதுமட்டுமின்றி 8 ஆண்டுகள் தென்னிந்திய திரைப்பட சினி மற்றும் டிவி தயாரிப்பு உதவி நிர்வாக ஊழியர்கள் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.

அவருக்கு ராதா என்ற மனைவியும் திவ்யா என்ற‌ மகளும் உள்ளனர். திவ்யா 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். பொதுத்தேர்வு எழுதப்போகும் அவரின் பள்ளி வகுப்புகள் புதன்கிழமை நிறைவடைந்தன. அதற்கா‌க பள்ளியில் வழியனுப்பு விழா நடைபெற்றது. நிச்சயம் விழாவில் கலந்து கொள்வேன் எனக்கூறிவிட்டு இந்தியன் 2 படப்பிடிப்புக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார் சந்திரன். ஆனால் விழா முடிந்த பின்னும்கூட அவர் வரவில்லை.

இரவு வீட்டிற்கு வர தாமதமானாலோ அல்லது வர முடியாவிட்டாலோ மனைவி ராதாவுடன் தொலைபேசியில் பேசுவது சந்திரனின் வழக்கம். அதற்கு மாறாக புதன்கிழமை இரவு சந்திரன் இறந்துவிட்டார் என்ற தகவல்தான் ராதாவிற்கு வந்துள்ளது. திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியும் ஒருமுறைகூட படப்பிடிப்புக்கு ராதாவை சந்திரன் அழைத்துச் சென்றதில்லையாம். படப்பிடிப்புக்கு எந்த இடையூறும் நேரக்கூடாது என அவர் எண்ணியதே அதற்கு காரணம் என்கிறார் ராதா. தான் மிகவும் நேசித்த படப்பிடிப்புத் தளத்திலேயே உயிரைவிட்டுள்ளார் சந்திரன். ஆகவே அந்தக் குடும்பமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com