சுவரில் மோதிக்கொண்ட நிர்பயா குற்றவாளி - தூக்குத்தண்டனையை தள்ளிவைக்க முயற்சி?

சுவரில் மோதிக்கொண்ட நிர்பயா குற்றவாளி - தூக்குத்தண்டனையை தள்ளிவைக்க முயற்சி?
சுவரில் மோதிக்கொண்ட நிர்பயா குற்றவாளி - தூக்குத்தண்டனையை தள்ளிவைக்க முயற்சி?

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா சுவரில் மோதி காயம் ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்ததாக  சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

நாட்டையே அதிரச் செய்த நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு ஏற்கெனவே இரண்டு முறை தூக்குதண்டனை தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் தனித்தனியே நீதிமன்றத்தில் மனு அளித்ததால், தூக்குதண்டனை நிறைவேற்றப்படாமல் தள்ளிக்கொண்டே போனது.

இதைத்தொடர்ந்து மார்ச் 3ஆம் தேதி காலை 6 மணிக்கு நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் கடந்த 17ஆம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த முறையாவது கண்டிப்பாக குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கோரிக்கை விடுத்துள்ளார்.

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான வினய் ஷர்மா, அக்ஷய் தாக்கூர், முகேஷ் சிங், பவன் குப்தா ஆகியோருக்கு தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க ஒருவருக்கு நான்கு என மொத்தம் 16 வாய்ப்புகள் இருந்தன. அதில் தற்போது மொத்தமாக நான்கு வாய்ப்புகள் மட்டுமே மீதமிருக்கின்றன.

குற்றவாளி வினய் ஷர்மாவை எடுத்துக் கொண்டால், அவரது தூக்கு தண்டனைக்கு எதிரான சீராய்வு மனு, மறுசீராய்வு மனு ஆகியவை நிராகரிக்கப்பட்டுவி‌ட்டன. அவர் குடியரசுத் தலை‌வருக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்தது தொடர்பான மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிம‌ன்றம் நிராகரித்துவிட்டது. இதனால் அவருக்கு இருந்த நான்கு வாய்ப்புகளும் முடிந்துவிட்டன. அதேபோல் குற்றவாளி முகேஷ் சிங்கிற்கு இருந்த வாய்ப்புகளும் முடிந்துவிட்டன. குற்றவாளி அக்ஷய் தாக்கூரின் தூக்கு தண்டனைக்கு எதிரான மூன்று வாய்ப்புகள் முடிந்துவிட்டன. இன்னும் ஒருவாய்ப்பு உள்ளது. குற்றவாளி பவன் குப்தாவுக்கு மூன்று வாய்ப்புகள் இருக்கின்றன. தூக்கு தண்‌டனைக்‌கு எதிரான சீராய்வு மனு மட்டுமே அவரு‌க்கு நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், அனைத்து வாய்ப்புகளும் முடிவுற்ற நிலையில் குற்றவாளி வினய் ஷர்மா தனது உடலில் காயங்கள் ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்துள்ளார். தலையை சுவரில் மோதி காயம் ஏற்படுத்தியதாகவும் அவரை சிறை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று முதலுதவி செய்து அழைத்து வந்ததாகவும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே வினய் ஷர்மா சிறை கம்பிகளுக்கு இடையே தனது கையை விட்டு முறிவு ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே புதிதாக தூக்கு தண்டனை தேதி அறிவித்தபோது பேசிய குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏபி சிங், வினய் ஷர்மா மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வாதாடினார்.

எனினும் இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ஷர்மாவிடம் கவுன்சிலிங் செய்தபோது மனதளவில் பாதிக்கப்பட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை. அவர் உடல் ரீதியாகவும் மனதளவிலும் நலமாக உள்ளார் எனத் தெரிவித்துள்ளனர். மூத்த சிறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “புதிதாக தூக்கு தண்டனை தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அவர்கள் நடவடிக்கை முற்றிலும் மாறுபட்டுள்ளது. அவர்களின் உணவுப் பழக்கம் சாதாரணமானது என்றாலும் ஷர்மாவும் முகேஷ் சிங்கும் சாப்பிட மறுக்கின்றனர். மிகவும் வற்புறுத்தலுக்கு பிறகே சாப்பிடுகின்றனர். நான்கு பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் மூலம் அவர்களை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். சில நேரங்களில் மட்டுமே அவர்களின் குடும்பத்தாருடன் சந்திக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. காயம் ஏற்பட்டால் குற்றவாளிகளின் தண்டனை தேதி தள்ளிவைக்கப்படலாம் என்பதால் அவர்கள் காயங்களை ஏற்படுத்தி கொள்ள முயற்சி செய்கிறார்கள்'' என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com