JUST IN
  • BREAKING-NEWS ‌குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்
  • BREAKING-NEWS ‌வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ‌சிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்

சீனாவின் பனிக்காற்றும்., ‘ச்சங்கோய் - ஸுஹோ’வின் காதல் கதையும் - ’தி ரோடு ஹோம்’ (1999)

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காதல் மீது வெறுப்பை உமிழ்பவர்கள் உண்மையில் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்கள் காதலால் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். அல்லது காதலிக்கப்படாமல் இருந்திருக்கலாம். காதலித்தல்,காதலிக்கப்படுதல் இதில் எது சுகம் என்றால் நாம் காதலிப்பவர்களால் நாம் காதலிக்கப்படுதலே இதம். அது தேன் நிரம்பிய குடுவைக்குள் குதித்து நீந்துவதைப் போன்றது. காதல் உயிர்களின் அடையாளம். அதை மறுப்பதன் மூலம் நாம் நம்மையே மறுக்கிறோம்.

 ‘தி ரோடு ஹோம்’ (1999)

image

தெற்கு சீனாவில் எழில்மிகு கிராமம் ஒன்றில் துவங்குகிறது முதல் காட்சி. நகரத்தில் தொழிலதிபராக இருக்கும் ’எசாங்கா’ தனது தந்தை ’ச்சங்கோய்’யின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள தனது சொந்த கிராமம் வருகிறார். அது ஒரு பெரும் பனிகாலம் என்பதால் அந்த ஊர் வெள்ளைப் போர்வை போர்த்தி உறங்கிக் கொண்டிருக்கிறது.

’எசாங்கா’வின் தந்தை ’ச்சங்கோய்’ அவ்வூரில் 40 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றியவர். அவரது உடல் அக் கிராமத்திலிருந்து சில கிலோ மீட்டர்கள்  தொலைவில் இருக்கும் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. மகன் ’எசாங்கா’வின் தாய் ’ஸுஹோ’வை இளம் ஆசிரியர் ’ச்சங்கோய்’ காதலித்து திருமணம் செய்து கொண்டார். தங்களது காதல் பற்றி சிறுவயதில் தாயும் தந்தையும் ‘எசாங்கா’விடம் பகிர்ந்து கொண்ட நினைவுகளின் காக்டைல் கவிதை தான் ’தி ரோடு ஹோம்’.

image

ப்ளாஸ் பேக் நெரேட்டிவ் பாணியில் இக் கதை சொல்லப்படுகிறது. 20 வயதான ’ச்சங்காய்’ அந்த கிராமத்துக்கு ஆசிரியராக வருகிறார். அது ஒரு வசந்தகாலம் பூக்கள் நிறைந்த அக் கிராமத்தின் ஓரத்தில் புதிதாக ஒரு சிறிய துவக்கப்பள்ளி கட்டப்படுகிறது. ’ச்சங்கோய்’ தான் அக்கிராமத்தின் முதல் ஆசிரியர் என்பதால் அவருக்கு ஊர் முழுக்க நல்ல மரியாதை. தினமும் ஒருவர் வீட்டில் அவர் பசியாறுகிறார்.

‘ஸூஹோ’ அக்கிரமத்தில் பார்வையற்ற தனது தாயுடன் வசிக்கிறாள். அவள் படிப்பு வாசனையே இல்லாத 18 வயது இளம் பெண். முதல் பார்வையிலேயே அவளுக்கு ஆசிரியர் ’ச்சங்காய்’ மீது காதல் பிறக்கிறது. அவள் அந்த பள்ளியை அடிக்கடி ஏதாவதொரு காரணத்தை வைத்து சுற்றி வருகிறாள். ஒரு கட்டத்தில் அவர்களின் காதல் ஊரில் அனைவருக்கும் தெரியவருகிறது. பிறகு அனைவரின் விருப்பப்படி அவர்கள் திருமணமும் செய்து கொள்கிறார்கள். இப்படியாக தனது மொத்த வாழ்க்கையினையும் ஆசிரியர் அக்கிராமத்தில் வாழ்ந்து முடித்தார்.

image

’ஸூஹோ’விற்கு பள்ளிக் கூடத்தில் ‘ச்சாங்காய்’ என்ன சொல்லிக் கொடுக்கிறார் என்றெல்லாம் புரியாது. ஆனால் அந்த குரல் மீதொரு மயக்கம் அவளுக்கு. அவள் தினமும் பள்ளியின் வெளியில் நின்று அவரது குரலை கேட்பது அவளது வாழ்வின் தினசரி நிகழ்வாகிப் போனது.

’ச்சாங்காய்’ ஊர் முறைப்படி அன்று ‘ஸூஹோ’வின் வீட்டிற்கு உணவருந்த வருகிறார். அங்கு வாசலில் அவள் காத்திருக்கும் காட்சி ஒரு ஓவியம் போல தன் மனதில் பதிந்தது என தன் மகனிடம் சொல்லியிருந்தார்.

image

இப்படி மாறி மாறி தாயும் தந்தையும் மகனிடம் பகிர்ந்து கொண்ட தங்கள் இளமைக் கால நினைவுகள் அத்தனையும் பொக்கிஷம். அது மதுவின் கடைசி சொட்டு போல அத்தனை மயக்கம் தருவது. இப்படத்தில் கவனிக்கத் தக்க நிறைய விஷயங்கள் உண்டு. இது மகனது பார்வையில் பேசப்படும் பெற்றோரின் காதல் கதை என்பதால் திரைக்கதை வசனம் என எல்லாவற்றிலும் அத்தனை துல்லியமான நாகரீக காதல் மொழி கையாளப்பட்டிருக்கும்.

காதலன் கொடுத்த ஹேர் பின் தொலைந்து போய் மீண்டும் கிடைக்கும் காட்சியாகட்டும், காதலனுக்காக உணவை முடிந்து கொண்டு ஓடும் ‘ஸூஹோ’ கீழே விழுந்து குழந்தை போல அழும் காட்சியாகட்டும் அத்தனையும் பரிசுத்தம்.

image

நிகழ் காலத்திற்கு திரும்புகின்றன காட்சிகள். அம்மாவின் ஆசைப்படி அப்பாவின் உடலை நகர மருத்துவமனையிலிருந்து அந்த கிராமத்தின் பிரதான பாதை வழியே தூக்கிவர வேண்டும். தனது தாயும் தந்தையும் அடிக்கடி சந்தித்த பாதை அது. எனவே அந்த பாதையில் இறுதியாக ஒரு பயணம் அவருடன் வேண்டும் என்பது தாயின் ஆசை.  ஆனால் ஊரில் சரியான வேலை வாய்ப்புகள் இல்லாததால் அவ்வூர் இளைஞர்கள் எல்லாம் நகரத்துக்கு பிழைக்கப் போயிருக்கிறார்கள். எனவே பக்கத்து கிராமங்களில் இருந்து பணம் கொடுத்து ஆட்களை வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இறுதி ஊர்வலம் பெரும் பனிப் பொழிவுக்கு இடையில் நடக்கிறது. ஆசிரியர் ’ச்சாங்காய்‘யின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 100 பேர் கலந்து கொள்கின்றனர். பிரேதத்தை சுமக்கும் ஆட்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை ஊர்த்தலைவர், ‘எசாங்கா’விடம் திருப்பிக் கொடுக்கிறார். “உன் அப்பாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் எல்லாம் அவரின் மாணவர்கள், செய்தி அறிந்து பலரும் ஊர் திரும்பியிருக்கிறார்கள்” என நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் அவர்.

இறந்துபோன ஆசிரியர் பள்ளியின் எதிரே மேட்டில் இருந்த கிணற்றின் அருகே புதைக்கப்படுகிறார். அப்பாவின் ஆசைப்படி நகரத்துக்கு திரும்பும் முன் அப்பள்ளியில் ஒரே ஒரு நாள் வகுப்பு எடுக்கிறான் மகன். வயதான தாய் சிதிலமடைந்த அப்பள்ளியின் வகுப்பில் அமர்ந்திருக்கிறார்.

image

நிகழ்காலத்தை கருப்பு வெள்ளையாகவும் ப்ளாஸ்பேக் காட்சிகளை வண்ணங்கள் பூசியும் அலங்கரித்ததில் இயக்குநர் ’ஸ்சாங்கோ ஈமோ’ பிரகாசிக்கிறார். படம் முழுக்க பின்னனியில் இசைக்கப்பட்டிருக்கும் குழலோசை அக்கிராமத்தின் பனிக் காற்றில் அங்குமிங்கும் மயங்கித் திரிகிறது. வெண்பனி, சிகப்புசட்டை, மஞ்சள் பூக்கள், வெள்ளை சிரிப்பு என ஒளிப்பதிவின் மூலமே இதமாக கதை சொல்கிறார் ஒளிப்பதிவாளர் ’ஹோ யோங்’.

’போஸி’ எழுதிய ‘ரிமெம்பரன்ஸ்’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் கோல்டன் ரோஸ்டர் விருது, நூறு பூக்கள் விருது, பெர்லின் திரைப்படவிழா விருது, ஃப்ளோரிடா திரைப்படவிழாவில் விருது என பல சர்வதேச விருதுகளை பெற்றது. நேர்மையாக ஒன்றைச் சொல்வதானால் 1999’க்கு பிறகு வந்த பல தமிழ் படங்களில் இக்கதையின் தாக்கம் இருந்தது.

நீங்கள் எத்தனை முறை  புறந்தள்ளினாலும் காதல்., ஒரு குழந்தை போல உங்களை நோக்கியே தனது பிஞ்சு கைகளை நீட்டும். தும்பை பூ’வில் காத்திருக்கும் ஒருதுளி தேனை உறிஞ்சி மகிழும் குழந்தைபோல காதலை கொண்டாடுவோம்.

Related Tags : valentines day14 Februarylove
Advertisement: