நிறம், மொழி, பாலின வேறுபாட்டால் சிதைகிறதா ஆஸ்கர்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சினிமாத்துறையில் பெரிய விருது என்றால் ஆஸ்கர் என்று பலரும் கூறுவர். ஒவ்வொரு வருடமும் ஆஸ்கரில் பரிந்துரைக்கப்படும் பிரிவுகளையும், அதில் இடம்பெறுபவர்களையும் உலக சினிமா ரசிகர்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள். அதேபோல் ஆஸ்கர் விழா தொடர்பான அறிவிப்பு வெளியாவதில் இருந்தே ஆஸ்கர் திருவிழாவிற்கான குதூகலமும் தொடங்கிவிடும். கவனிக்கப்படாத சில படங்கள் கவனத்திற்கு வரும். அறிமுகமில்லாத சில நடிகர்கள் கூட உலக அளவில் கவனம் பெறுவார்கள். இப்படி ஒரு திருவிழாவாக தொடங்கும் ஆஸ்கர் மீது சில விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டும் வருகின்றன.


Advertisement

image

ஆஸ்கரில் நிறவெறி, பாலின பாகுபாடு, அமெரிக்கா அல்லாத பிற நாடுகள் புறக்கணிக்கப்படுதல் போன்ற சில குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு வருடமும் இடம்பெறுகின்றன. நிறவெறி குற்றச்சாட்டுகளால் ஆஸ்கரை புறக்கணிக்கும் சில நடிகர்களும் உண்டு. ஆஸ்கர் விருதை தேர்வு செய்யும் குழுவில் வெள்ளையர்களே 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாகவும், அதனால்தான் கறுப்பின கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறப்படுவது உண்டு. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு 2018-ம் ஆண்டு ஆஸ்கர் விழா பதில் அளித்தது.


Advertisement

image

கெட் அவுட் படம் சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்றது. அந்தப் படத்திற்கான ஆஸ்கரை வென்றவர் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்டான் பீலே. அதே படத்திற்காக அவர் சிறந்த இயக்குநருக்கான பிரிவிலும் பரிந்துரைக்கப்பட்டார். அந்த படத்தில் நடித்த கறுப்பின நடிகர் டேனியல் கலூயாவும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அதேபோல் மட்பவுண்டி படத்திற்காக கறுப்பின துணை நடிகை மேரிஜே பரிந்துரைக்கப்பட்டார். இப்படி சில கறுப்பின கலைஞர்கள் பரிந்துரைக்கப்பட்டதன் மூலம் ஆஸ்கரில் நிறவெறி இல்லை என சொல்லாமல் சொல்லியது ஆஸ்கர் குழு. ஆனாலும் பரிந்துரைக்கப்படுவதெல்லாம் வெறும் கண் துடைப்புதான் என தொடர் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

image


Advertisement

90 ஆண்டுகளை கடந்து விட்டாலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஆஸ்கர் கடந்து வருகிறதா? இல்லை; குற்றச்சாட்டு உண்மைதான் என்பது போல தொடர்ந்து பயணிக்கிறதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நேற்று நடைபெற்ற ஆஸ்கரில் ஒரு வரலாற்று நிகழ்வு நடந்தது என்றால் அது பாரசைட் திரைப்படம் சிறந்த திரைப்படம் பிரிவில் தேர்வாகி வெற்றி பெற்றதுதான். ஆங்கிலம் அல்லாத வேற்று மொழி திரைப்படம் முதல் முறையாக சிறந்த திரைப்படம் பிரிவில் வெற்றி பெற்றதே சாதனையாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஆஸ்கரில் அமெரிக்கா அல்லாத பிற நாடுகள் புறக்கணிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டே வரும் நிலையில் முதல் முறையாக கொரியத் திரைப்படம் வெற்றி பெற்றிருப்பது பலரும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

image

நிறவெறி குற்றச்சாட்டுக்கும், அமெரிக்கா அல்லாத பிற நாடுகள் புறக்கணிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கும் பதில் கொடுக்கும் விதமாக சில பரிந்துரைகளும், சில விருதுகளும் வழங்கப்பட்டு விட்டாலும், பாலின பாகுபாடு என்ற குற்றச்சாட்டு அழுத்தம் திருத்தமாகவே கூறப்படுகிறது. ஆஸ்கர் வரலாற்றிலேயே பெண் இயக்குநர்கள் 5 பேர் மட்டுமே இதுவரை பரிந்துரை பட்டியலில் வந்திருக்கிறார்கள். அதில் ஒருவர் மட்டுமே விருதை வென்றிருக்கிறார். பெண் இயக்குநர்கள் நிறையப்பேர் நல்லப்படங்களை கொடுத்தாலும் பரிந்துரை பட்டியலில் கூட அவர்கள் இடம்பெறவில்லை என்பது பாலின பாகுபாடு இல்லாமல் வேறென்ன..? என பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

நேற்று நடந்த ஆஸ்கர் விழாவிலும் பாலின பாகுபாட்டை சுட்டிக்காட்டும் விதமாக ஆடை அணிந்து வந்தார் நடிகை நடாலி போர்ட்மென். ஆஸ்கரில் பரிந்துரைக்கப்படாத பெண் இயக்குநர்களின் பெயர்களை தன்னுடைய உடையில் தைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆஸ்கர் குழு கெளரவப்படுத்தாத பெண் இயக்குநர்களை நான் கெளரவம் செய்கிறேன் என கண்டனத்தையும் பதிவு செய்தார் அவர்.

image

வேறு பிரிவுகளில் பெண்களை பரிந்துரை செய்தாலும், இயக்குநர் பிரிவில் பெண்களை பரிந்துரை செய்வதை ஆஸ்கர் தேர்வு குழு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு வரும் ஆஸ்கர் விழாவில் பதில் கிடைக்குமா என்று சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் கலையில் நிறம், பாலினம், மொழி என எதுவுமே இல்லை என்றும், சிறந்த ஒன்றுக்கு விருது என்று வந்துவிட்டால் அது சிறந்ததாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர வேறு எந்த காரணத்தினாலும் அது புறக்கணிக்கப்படக்கூடாது என்பதே ஆஸ்கர் மற்றும் சினிமா ரசிகர்களில் ஒட்டுமொத்தக் கருத்தாக இருக்கிறது.

image

சிறந்த படைப்பை ஆஸ்கர் நிச்சயம் 100% கொண்டாட வேண்டும், ஒரு அங்கீகாரம் நிறத்தாலும், மொழியாலும், பாலினத்தாலும் தடைபெற்று நிற்கக்கூடாது என்பதையுமே அனைவரும் விரும்புகிறார்கள். அந்த விருப்பம் நிறைவேறினால் மட்டுமே விருதுகள் மீது மக்களுக்கும், கலைஞர்களுக்கும் நம்பிக்கையும் பிறக்கும்.

ஆஸ்கரை ஓரம் வைத்துவிட்டு காதலியுடன் பர்கர் சாப்பிட்ட ஜோக்கர் நாயகன் - வைரல் புகைப்படம்!

loading...

Advertisement

Advertisement

Advertisement