Advertisement

கத்தார்: முதலீட்டாளர்களின் சொர்க்கமா? தீவிரவாதிகளின் கூடாரமா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி கத்தார் நாட்டுடனான உறவை சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் துண்டித்துள்ளன. இதற்கு பதிலடியாக சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்திவிட்டதாக கத்தார் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. 


Advertisement

மிகச் சிறிய நாடாக இருந்தாலும், மிக அதிக அளவு இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் கத்தாரும் ஒன்று. ஃபோர்ப்ஸ் பத்திரிகை கணிப்புப் படி, தனிநபர் வருவாய் அடிப்படையில் உலகின் பணக்கார நாடு கத்தார். மத்திய கிழக்கின் அமெரிக்கா என்று அழைக்கப்படும் கத்தார், தமது தாராளமயமாக்கல் கொள்கையால் முதலீட்டாளர்களின் சொர்க்கமாகவும் திகழ்கிறது. தற்போது, அரபு நாடுகள் கூட்டமைப்பான அரபு லீக்கில் அங்கம் வகிக்கும் கத்தாருக்கு, அரபு எழுச்சியில் முக்கியப் பங்கு உண்டு. லிபியாவில் மம்மர் கடாஃபி தலைமையிலான அரசை அகற்றியதில் பின்னணியில் இருந்து செயல்பட்டது கத்தார் அரசு. தற்போது, சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்து உறுதியான பின்புலமாகவும் கத்தார் விளங்குகிறது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்ட தாலிபான்களை தோகாவில் அலுவலகம் திறக்கச் செய்து, அவர்களை அரசியல் பாதையில் செலுத்த கத்தார் முயன்றது. இவை தவிர, ஏமன், லெபனான், சோமாலியா, பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளின் அன்றாட நடவடிக்கைகளை தீர்மானிப்பதிலும் கத்தார் முக்கிய பங்கு வகித்து வருகிறது. வளைகுடா நாடுகளில் அமைதியையும், அரசியல் நிலைத்தன்மையையும் ஏற்படுத்த விரும்பும் நாடுகள், கத்தாரின் ஒத்துழைப்பைப் பெற வே‌ண்டியது அவசியம் என்பதே இன்றைய நிலை. ஆனால் இந்நிலையில் கத்தாருடனான உறவை இஸ்லாமிய நாடுகள் துண்டித்துக் கொண்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கணிசமான எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடு என்பதால் கத்தாருக்கு எதிரான நடவடிக்கை இவற்றின் விலையில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்தியாவின் இறக்குமதி முழுவதும் நேரடியாக கடல் வழியாக நடப்பதால், பாதிப்பு குறைவாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் சவுதி அரேபியாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் கத்தார் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து செய்வதாக கத்தார் நாடு அறிவித்துள்ளது. இதேபோல், அபுதாபியில் இருந்து கத்தாருக்குச் செல்லும் எத்திஹாட் ஏர்வேஸ் விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அரபு நாடுகளில் வசிக்கும் கத்தார் நாட்டைச் சேர்ந்தவர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், கத்தாரில் வசிக்கும் சவுதி அரேபிய, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரபு நாடுகளில் வசிப்பவர்களுக்கு கத்தார் நாட்டுக்கு திரும்புவதற்கு 14 நாள்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கத்தார் நாட்டுடனான எல்லையை மூடப்படுவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. சாலை, கப்பல், விமானம் ஆகிய போக்குவரத்துகள் மற்றும் தூதரக ரீதியிலான உறவை முடித்துக்கொள்வதாகவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது. இதேபோல் மற்ற நாடுகளும் கத்தார் நாட்டுடான அனைத்து வகையான உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன. சவுதி அரேபியாவில் இருந்து செயல்படும் ஏமன் அரசும், கத்தாருடனான உறவைத் துண்டிப்பதாகக் கூறியிருக்கிறது. சுமார் 19 லட்சம் பேரை கொண்ட சிறிய நாடான கத்தாரை ஒட்டுமொத்த அரபு நாடுகளும் ஒதுக்கி வைத்துள்ளது உண்மையில் அந்நாட்டு தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறதா அல்லது கத்தார் நாட்டின் அபரிவிதமான வளர்ச்சியை கண்டு அரபு நாடுகள் பயப்படுகிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement