JUST IN

மிஸ்கினின் ‘சைக்கோ’ - திரை விமர்சனம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பெண்களை கடத்தி கொலை செய்யும் கொலைகாரன். அவனை பிடிக்க க்ளூ கிடைக்காமல் தேடி அலையும் போலீஸ். இதுதான் மேலோட்டமாக பார்த்தால் ‘சைக்கோ’ படத்தின் கதை. இப்படியான கதைகள் ஹிச்காக் காலம் தொட்டு நிறையவே வந்திருக்கின்றன என்றாலும், இவ்வகை த்ரில்லர் கதைகளை ஒவ்வொரு இயக்குநரும் அவரவர் பாணியில் எப்படி கையாண்டார்கள் என்பதை வைத்தே அப்படமும் அந்த இயக்குநரும் கவனம் பெறுவார்கள். அவ்வகையில் இந்த சைக்கோ கொலைகாரனின் கதையினை மிஸ்கின் கையாண்டிருக்கும் விதம் உண்மையில் நெகிழ்ச்சி.

ஒரு சைக்கோ கொலைகாரனை வெறும் குற்றவாளியாக அல்லாமல் அவனை பாதிக்கப்பட்டவனாக மிஸ்கின் பார்க்கும் கோணம் பாராட்டுக்குரியது. பள்ளி நாட்களில் தனக்கு ஏற்பட்ட கசப்பான துன்ப அனுபவங்களால், மனரீதியாக பாதிக்கப்பட்டு சைக்கோவாக மாறிய அந்தக் கொலைகாரன் கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண்கள் பலரை கடத்தி கொடூரமாக கொலை செய்கிறான். அவனது பட்டியலில் நாயகி அதிதி ராவும் சிக்கிக் கொள்ள, கண் தெரியாத ஹீரோ கவுதமாக வரும் உதயநிதி அவளை காப்பாற்றினாரா...? இல்லையா..? அல்லது எப்படி காப்பாற்றப் போகிறார் என்ற பதைபதைப்புடன் நகர்கிறது திரைக்கதை.

image

உண்மையில் பெரும்பாலான சைக்கோ கொலைகாரன் கதைகளின் க்ளைமாக்ஸில் கொலைகாரன் பிடிபட்டதும் அவனுக்கு தண்டனை கொடுக்கப்படும். ஆனால் மிஸ்கினின் சைக்கோ திரைப்படம் அந்த டெம்ப்ளேட் பாணியை உடைத்து புதிய க்ளைமாக்ஸ் ஒன்றை கொடுக்கிறது. அந்த க்ளைமேக்ஸ் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் ஏற்கும் படியும் இருக்கிறது.

பேய் பிசாசு என்றாலே ரத்தம் குடிக்கும். பழிவாங்கத் துடிக்கும் ஒரு வடிவமாக பார்த்து வந்த சினிமா ரசிகர்களுக்கு பிசாசு படத்தின் மூலம் வேறொரு முகத்தை காட்டியிருப்பார் மிஸ்கின். அதே பாணியிலான அணுகுமுறைதான் இந்த சைக்கோவுக்கும்.

image

படத்தில் உதயநிதி, அதிதி ராவ், நித்யாமேனன், சிங்கம் புலி, ராம் என அனைவருக்கும் மிகச்சரியான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் மிஸ்கின். உதயநிதி அலட்டிக் கொள்ளாமல் அழகாக ஸ்கோர் செய்திருக்கிறார். நித்யா மேனனுக்கு இதுவரை செய்திராத புதிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனை அவர் மிச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இளையராஜாவின் இசையில் கபிலன் எழுதியிருக்கும் “உன்ன நினச்சி நினச்சி உருகிப் போனேன் மெழுகா...” பாடல் அனைவரையும் உருக வைக்கிறது... ஒளிப்பதிவாளர் தன்வீர் மிர், இரவுக் காட்சிகளில் செய்திருக்கும் லைட்டிங் ஸ்டைல் அட்டகாசம். ட்ரோன் ஷாட்களை பயன்படுத்தியிருக்கும் விதம் அழகு. குறிப்பாக ஏரியல் ஷாட்டில் இரவில் காரை பின் தொடரும் அந்தக் காட்சியினை மீண்டும் மீண்டும் பின் தொடர்கிறது மனது.

image

நான்கு பாலியல் தொழிலாளிகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட பெண்களை சைக்கோ கடத்தி கொலை செய்கிறான். அப்பெண்களில் ஒருவருக்கு சில்வியா ப்ளாத் என பெயர் சூட்டியிருக்கிறார் மிஸ்கின். சில்வியா ப்ளாத் 1932’ல் அமெரிக்காவில் பிறந்து உலகப்புகழ் பெற்ற பெண் கவிஞராக உயர்ந்தவர். அவர் 1963’ல் தனது 30-தாவது வயதில் தற்கொலை செய்துகொண்டார். படத்தின் க்ளைமாக்ஸில், வரும் தாய் மடியில் பாடல் படம் இறுதியில் சொல்லவரும் அன்பின் அடர்த்தியை கொஞ்சம் சிதைப்பதாகவே உள்ளது. கைலாஸ்கரின் குரலும் அதற்கு ஒரு காரணம். அதனை தவிர்த்திருக்கலாம்.

படத்தில் கொலைகாரனை பிடிக்க சின்ன க்ளூ கூட கிடைக்காமல் தவிக்கும் போலீஸிற்கு ஒரு சிசிடிவி காட்சி கூட விசாரணைக்கு கிடைக்கவில்லை போன்ற சின்னச் சின்ன லாஜிக் தவறுகள் இருந்தபோதும் மிஸ்கின் தனது சைக்கோ மூலமாக சொல்ல வந்த விஷயத்தை அவரது பாணியில் மிகச் சிறப்பாகவே சொல்லி இருக்கிறார்.

Related Tags : psychoMysskinmovie reviewnithyamenon
Advertisement: