[X] Close >

காலையில் வீட்டு வேலை.. மாலையில் நூலகர்... - மனதை ஈர்த்த 73 வயது பாட்டி

Kerala---s-73-year-old-grandma-walks-4km-daily-to-promote-reading-

இது வாட்ஸ் அப் உலகம். இன்னும் கொஞ்சம் தெளிவாக சொன்னால் ஃபேஸ்புக் யுகம். இதைபோன்ற சமூக ஊடகங்கள் வந்த பிறகு புத்தக வாசிப்பு பழக்கம் என்பது எல்லாம் மலையேறிவிட்டது. தினமும் நமது ஆண்ட்ராய்ட் மொபைலில் வந்து ஒளிரும் குட்டிக்குட்டி மீம்ஸ்களை வாசித்துவிட்டு பெரிய அறிவாளிகள் போல அலப்பறை செய்பவர்கள்தான் அதிகமாகி வருகிறார்கள்.


Advertisement

image

தெளிவாக சொன்னால் இன்றைய சமூக ஊடகங்கள் உலகத்தையே புரட்டிப் போட்டு விட்டது. ஆனால் புத்தகங்களை வாசிக்கவிடாமல் அதற்குள்ளாகவே நம்மை கட்டிப்போட்டிருக்கிறது. அதுதான் உண்மை. இன்னும் கொஞ்சம் காலம் கழித்தால் ‘kindle’ இல் வகை வகையாக புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும். அதை புரட்டிப் பார்க்கதான் ஆட்களே இருக்கமாட்டார்கள் என்கிறார்கள் சில சமூக ஆர்வலர்கள். அதுவும் இன்றைய இளம் தலைமுறை தாய் மொழியில் தவறு இல்லாமல் எழுதக்கூட தெரியாமல் திணறுகிறார்கள் என்ற நிலைமை போய் இப்போது படிக்கக் கூட திணறுகிறார்கள் என்ற நிலைமைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்.


Advertisement

ஆனால், அப்படி எல்லாம் இல்லை என நம்பிக்கை வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் உமாதேவி அந்தர்ஜனம். 73 வயதான இந்தப் பாட்டி இன்று கேரளாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். இந்த அந்தர்ஜனம் பாட்டியை பற்றி கேரளாவில் பேசாத ஊடகங்களே இல்லை. கேரள மாநிலம் செங்கன்னுர் அருகே உள்ள பூதன்னூரில்தான் உமாதேவி அந்தர்ஜனம் வசிக்கிறார். இவர் ஒரு ‘கள நூலகர்’. அதாவது வீடு வீடாக சென்று வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எந்த நூல்களை கேட்கிறார்களோ அதை கொடுத்து விட்டு வருவது இவரது வேலை.

image

காலையில் தனது வீட்டு வேலைகளை முடித்துவிட்டு கள நூலகர் பணிக்குப் புறப்படும் இந்த அந்தர்ஜனம் பாட்டி தனது தள்ளாத 73 வயதிலும் தினமும் நான்கு முதல் 5 கிலோ மீட்டர் வரை நடந்தே போய் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்து வருகிறார். பொடிநடையாகப் போய், ஒரு வீடு இரண்டு வீடு இல்லை.. 220 வீடுகளுக்கு இவர் புத்தகங்களை விநியோகித்து வருகிறார். இந்த வேலையை இவர் இன்று நேற்று அல்ல 14 ஆண்டுகளாக செய்து வருகிறார்.


Advertisement

ஒரு வீட்டிற்குச் சென்று அவர்கள் விரும்பும் புத்தகங்களை கொடுக்கும் இவர், இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் நடந்தே போய் அதை திரும்ப பெற்று திரும்புவார். இத்தனை வயதான காலத்திலும் கல்வி கடவுள் மீது அவ்வளவு இஷ்டம் இந்தப் பாட்டிக்கு. இதை நாம் சொல்ல சொல்லவில்லை. அவரே சொல்கிறார்.

image

‘சரஸ்வதி தேவியை என் கைப்பையில் சுமந்து நடந்தே செல்கிறேன்’ என்கிறார் உமாதேவி பாட்டி. இளம் தலைமுறையை எப்படியாவது வாசிக்க வைத்துவிட வேண்டும் என்பதே தனது விருப்பமாக உள்ளது என்றும் கூறுகிறார். “தேவையான புத்தகங்களை சேகரிப்பதற்காக மாலை 3 மணிக்குள் நூலகத்திற்கு செல்வேன். பின்பும் அதை எடுத்துக் கொண்டு நான் தினமும் சுமார் 4 கி.மீ தூரம் நடந்தே வீடு வீடாக சென்று இந்தப் புத்தகங்களை வழங்குகிறேன். சில நேரங்களில் நான் மாலை 6.45 மணியளவில் எனது வீட்டிற்கு திரும்புகிறேன்.

பெரும்பாலும் என்னிடமிருந்து குழந்தைகளும் பெண்களும் படிக்க புத்தகங்களை எடுத்துக் கொள்கிறார்கள். மாணவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் எந்தப் புத்தகத்தை விரும்புகிறார்கள் என்பதை முன்கூட்டியே எனக்குத் சொல்லிவிடுவார்கள். நான் அதை நூலகத்திலிருந்து சேகரித்து அவர்களுக்கு கொண்டு போய் வழங்குகிறேன்”என்று கூறுகிறார் உமாதேவி பாட்டி.

image

விடுமுறை நாட்களில் நான் அதிகம் பிசி. அனைவரும் அவர்களது வீட்டில் இருப்பார்கள். குறிப்பாக சொன்னால் குழந்தைகள் அன்றுதான் வீட்டில் இருப்பார்கள். ஆகவே அவர்களுக்காக சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வழக்கமாக கிளம்பும் நேரத்திற்கு முன்பே நான் கிளப்பி விடுவேன் என்கிறார் இந்த அன்பான பாட்டி. இவரது சேவையை பாராட்டி பல அரசியல் தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தி வருகிறார்கள். பாட்டிக்கு வயது முதிர்ச்சியால் பல்வேறு உடல் உபாதைகள் இருக்கிறது. ஆனாலும் அதைப் பற்றி கவலைக் கொள்ளாமல் இந்தச் சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

“இவரால்தான் இந்த நூலகத்திற்கே புகழ் கிடைத்தது. அவருக்கு சில வியாதிகள் இருந்தபோதிலும், அவர் மிகுந்த உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார். இவர் எங்கள் கிராமத்திற்கு ஒரு சொத்து” என்கிறார்கள் ஊர்மக்கள். நம்ம ஊருக்கும் இப்படி ஒரு பாட்டி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close