“ஹைட்ரோகார்பன் குறித்த புதிய உத்தரவை திரும்பப்பெற வேண்டும்” - மு.க. ஸ்டாலின்

“ஹைட்ரோகார்பன் குறித்த புதிய உத்தரவை திரும்பப்பெற வேண்டும்” - மு.க. ஸ்டாலின்
“ஹைட்ரோகார்பன் குறித்த புதிய உத்தரவை திரும்பப்பெற வேண்டும்” - மு.க. ஸ்டாலின்

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற புதிய உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை முறையாக பெற வேண்டும். அதே நேரத்தில் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்பது இதுவரை இருந்து வந்த விதிமுறை.

ஆனால் இதற்கு மாறாக சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006இல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. இதன்படி ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு இனி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெற வேண்டியது கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கமாட்டோம் எனக்கூறிய அதிமுக அரசு, அது தொடர்பாக கொள்கை முடிவு எதையும் எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மாநிலத்தின் உரிமைகளைப் பறிக்கும் இந்தப் புதிய உத்தரவை திரும்பப்பெறக்கோரி, முதலமைச்சர் பழனிசாமி பிரதமரிடம் வலியுறுத்த வேண்டுமென கூறியுள்ளார். தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுத்து, தமிழக மக்களின் நலனைக் காக்க அரசே முன்வர வேண்டுமென ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே பொதுமக்களுடைய கருத்தை கேட்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவது கண்டனத்திற்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி செல்வராஜ் திருவாரூரில் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com